search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளவங்கோடு இடைத்தேர்தல்"

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
    • எனக்கான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதரணி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது.

    எனவே விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. சார்பில் விஜயதரணி களமிறக்கப்படுவார் என்று பேசப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. அங்கு வேட்பாளராக நந்தினி களமிறக்கப்பட்டார். இதையடுத்து விஜயதரணி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டது.

    இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விளவங்கோடு இடைத்தேர்தலில், 4 முனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தபோது, விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவுகளை, தனது பதவியை ராஜினாமா செய்த விஜயதரணியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினார். கனிமொழி எம்.பி. பிரச்சாரத்தின்போது, இந்த தொகுதியில் நடப்பது தேவையற்ற தேர்தல்... மக்களுக்கு தேவையான தேர்தல் என்று கூறினார்

    இந்த நிலையில் விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி நேற்று வந்தார். அவர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    எனக்கான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விளவங்கோடு தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன். பல்வேறு திட்டங்களை போராடி செய்துள்ளேன். இது மக்களுக்கு தெரியும். கடின உழைப்பால் இந்த தொகுதியை உயர்த்தி காட்டி உள்ளேன். தற்பொழுது இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமையும். தமிழகத்தில் 39 எம்.பி.க்கள் உள்ளனர். வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் எந்த நன்மையையும் கிடைக்காது. எனவே கன்னியாகுமரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். மத்தியில் எந்த கட்சி ஆட்சி நடத்து கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றால் மட்டுமே, தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ கத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், பாராளுமன்றம் முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதுடன் வேறு எதுவும் செய்யவில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதிலும் விஜயதரணி பங்கேற்றார். முன்னதாக பார்வதிபுரம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பொன். ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். அவருக்கு பூசாரி விபூதி பூசி ஆசி வழங்கினார். விஜயதரணிக்கும் ஆசி வழங்கிய பூசாரி, தனது இரண்டு கைகளால் அவரது கன்னத்திலும் விபூதியை பூசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

    • விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
    • கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ந்தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் செல்வாக்கு பெற்ற இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த விஜயதரணி.

    இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினமா செய்தார். இதனை தொடர்ந்தே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் இங்கு யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி உறுதி என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மாவட்டத்தின் முக்கிய தலைவர்கள் டெல்லி மற்றும் சென்னையில் முகாமிட்டு முக்கிய தலைவர்களின் ஆதரவை பெற முயன்று வருகின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், ஜவகர்பால் மஞ்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் சீட் பெறுவதில் முனைப்பு காட்டி வரு கின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த தொகுதியில் மகளிர் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.

    எனவே விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருமான சர்மிளா ஏஞ்சல் உள்ளிட்ட பலரும் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளும் உள்ளதால் விளவங்கோடு தொகுதியில் வெற்றி உறுதி என்பதால், காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதியை பெறுவதில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. பாரதிய ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஜெயசீலனே மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் டொமினிக் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • விஜயதாரணி ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலி என அறிவிப்பு.
    • திருக்கோவிலூர் தொகுதி காலி என இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி பா.ஜனதாவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர், பா.ஜனதாவில் இணைந்ததும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    உடனடியாக விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதனால் மக்களை தேர்தலுடன் விளவங்கோட்டிற்கு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை போலீஷ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யபிரதா சாகு கூறிகையில் "மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.

    திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கியதால், அவரது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவி தானாகவே பறிபோகியுள்ளது. ஆனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் இன்னும் சிறைக்கு செல்லாமல் உள்ளார்.

    ×