search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாத பவுர்ணமி பூஜை"

    • மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு.
    • சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம்.

    ஆலயத் தோற்றம்

    நம் பாரதத்தில் மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு. அப்படி ஒரு ஆலயம்தான், சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம். திரவுபதியுடன் பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த நேரத்தில், உபமன்யு முனிவரிடம் ஆசி பெறுவதற்காக தில்லை வனத்திற்கு வந்தனர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அப்படி அவர்கள் வந்து தங்கியிருந்த இடத்தில்தான், தற்போது திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு காலச் சூழல்களில் சிதிலமடைந்ததன் காரணமாக, சமீப காலங்களில் புதியதாக கட்டப்பட்டிருக்கிறது.

     இந்த ஆலயம் பல காலமாக சிதிலமடைந்து கிடந்ததால், அதில் இருந்த அம்மனை மட்டும் ஒரு இடத்தில் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். ஒரு முறை திரவுபதியை வணங்கும் ஒரு பெண்ணிற்கு, கிணற்றில் குதித்து நீராடுவது போல் கனவு வந்துள்ளது.

    கனவில் கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்த பக்தையை, கரையில் நின்ற ஒரு பெண் பார்த்து, "நீ தினமும் நீராடுகிறாய்.. நான் எவ்வளவு நாளைக்கு தான் நீராடாமல் இருப்பது?" என்று கேட்டு புன்னகைத்தாளாம். அதற்கு அந்த பக்தை, "யாரம்மா நீ?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் "இந்த இடத்தின் சொந்தக்காரி" என்று கூறி மறைந்துவிட்டாளாம்.

    தான் கண்ட கனவை மறுநாள் காலையில் வீட்டாரிடமும், ஊர்க்காரர்களிடமும் அம்மனை வழிபடும் பெண் கூறியிருக்கிறார். மேலும், "என் கனவில் வந்தது வேறு யாருமல்ல. இங்கே சிதைந்து கிடக்கும் ஆலயத்தில் இருந்தபடி நம்மை எல்லாம் காத்து ரட்சிக்கும் திரவுபதி அம்மன்தான்" என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அந்த ஊர் மக்கள் சார்பில், சிதைந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டும் பணி தொடங்கப்பட்டது. திரவுபதி அம்மனின் அருளால் ஆலயம் கட்டும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சிறு ஆலயமாக கட்டி முடித்து குடமுழுக்கும் செய்தனர்.

    அதன்பிறகு ஆலயம் மீண்டும் சிதலமடைந்து சுமார் 50 ஆண்டு காலமாக அப்படியே இருந்தது. இதையடுத்து மீண்டும் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து ஆலயத்தை திருப்பணி செய்து புதுப்பித்தனர். இந்தப் பணி 1988-ம் ஆண்டு தொடங்கி, 1989-ம் ஆண்டு முடிந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் ஆலயம் முன் மண்டபம் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     ஆலய அமைப்பு

    ஆலய முகப்பில் இருப்பது சுப மண்டபம். அதனுள் நுழைந்தால், கருடாழ்வார், கொடிமரம், பலிபீடம், நந்தி, காவல் தெய்வமான முத்தால் வழிவகுத்தார், விநாயகர், பாலமுருகன், அரவான், உள்ளடியார், அய்யனார் சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. கருவறையில் திரவுபதி அம்மன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இரு திருக்கரங்களோடு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோஷ்டத்தில் சன்னிதிகள் இல்லை.

    திருமணத் தடை உள்ளவர்கள், தொடர்ந்து 9 வாரம் வெள்ளிக்கிழமைகளில் பூசணிக்காய், அன்னாசிபழம் ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், அர்த்த மண்டபத்தில் அம்மனுக்கு நேராக தலை வாழை இலை போட்டு, அதில் அட்சதை நிரப்பி, அதன் மேல் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்காகவும் இங்கே வழிபாடு செய்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இந்த ஆலயத்தின் சுப மண்டபத்தில் வைத்து வளைகாப்பு செய்து கொள்கிறார்கள். அப்போது திரவுபதி அம்மனிடம் இருந்து பெறப்பட்ட வளையலையே, முதல் வளையலாக கருவுற்ற பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள்.

     இவ்வாலயத்தில் வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் பெருந்தீமிதித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தவிர கார்த்திகை தீப விழா, ஆடி கடைசி வெள்ளியில் திருவிளக்கு பூஜை, மாத பவுர்ணமி பூஜை ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வீரராகவன் தெரு வழியாக சென்றால் ½ கிலோமீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம்.

    ×