search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடத்துக்குளம்"

    உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நெல், கரும்பு, தென்னை, சிறுதானியங்கள், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள், குறித்து விளக்கப்பட்டது.
    மடத்துக்குளம்:

    மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயன்தரும் தொழில்நுட்பங்களை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கும் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதில் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊட்டச்சத்துமிக்க மானியத்திட்டத்தில் பிரசார வாகனம் இயக்கப்படுகிறது.

    மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த வாகனம் சென்று திரும்புகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நெல், கரும்பு, தென்னை, சிறுதானியங்கள், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள், குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் மக்காச்சோளம் தொடர்பான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மக்காச்சோள படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் செம்மை நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள் ஆகியவை பற்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. இத்தகவலை மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
    கணியூர் பேரூராட்சி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் திறந்து வைத்தார்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட  அ.தி.மு.க. செயலாளருமான சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் கணியூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    மேலும் கணியூர் பேரூராட்சி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் திறந்து வைத்தார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.காளீஸ்வரன், பேரூராட்சி  பொறுப்பாளர் சரவணன், அவைத்தலைவர் தம்பிதுரை, ஊராட்சிமன்ற தலைவர்கள் வேடபட்டி துர்க்கைவேல், ஜோத்தம்பட்டி செந்தில், சோழமாதேவி சாகுல் அமீது, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    சம்பா பருவத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதி கடைகளில் கணக்கெடுப்பு நடத்தி போதிய அளவு உரங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சம்பா பருவத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் விளைச்சலை அதிகரிக்க உரங்கள் அத்தியாவசியமானது. மடத்துக்குளம் பகுதி கடைகளில் கணக்கெடுப்பு நடத்தி போதியஅளவு உரங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    யூரியா 100 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 40 மெட்ரிக் டன், எம்.ஓ.பி., 15 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 213 மெட்ரிக் டன், சூப்பர் உரம் 30 மெட்ரிக் டன் ஆகியவை மடத்துக்குளம் பகுதியிலுள்ள உரக்கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளன. 

    தேவையான விவசாயிகள் அணுகி உரங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் கொடுத்து உரங்களை வாங்க வேண்டும். விற்பனை ரசீது கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    நாற்றுப்பண்ணைகள் ஒவ்வொன்றும் தலா 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும்.
    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகளில் வாங்கி நடவு செய்து வருகின்றனர்.

    நாற்றுப்பண்ணைகள் ஒவ்வொன்றும் தலா 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். ஒரு ஏக்கருக்கு தக்காளி நாற்றுக்கள் 10 ஆயிரமும், மிளகாய் 7 ஆயிரம், கத்தரி 5 ஆயிரம், காலிபிளவர் 10 ஆயிரம் நாற்றுக்கள் தேவை உள்ளது. தக்காளி நாற்று 45 பைசா, மிளகாய் 80, கத்தரி, காலிபிளவர் 50 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    பண்ணைகளில் குழித்தட்டுகளில் விதைகள் நடவு செய்து நாற்றுக்கள் வளர்க்கப்படுகிறது. இதில் தக்காளி 22 நாட்களிலும், மற்ற காய்கறிகள் 30 நாட்களுக்குள்ளும் வயல்களில் நடவு செய்ய வேண்டும். வட கிழக்கு பருவ மழை காலத்தில் தொடங்கும் சாகுபடி சீசனை எதிர்பார்த்து நாற்றுப்பண்ணைகளில் நாற்றுக்கள் உற்பத்தி தீவிரமடைந்தது. 

    ஆனால் நடப்பு ஆண்டு மழை பொழிவு அதிகரித்த நிலையில் வயல்களில் தேங்கிய நீரை கழிக்க முடியாத சூழலில் நிலங்கள் காணப்படுகிறது. ஒரு மாதமாக மழை தொடர்வதால் உழவு, நடவு என எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    இதனால் சாகுபடியை எதிர்பார்த்து நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்த நாற்றுக்கள் விற்பனையாகாமல்  பெருமளவு வீணாகி வருகிறது.

    இதுகுறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    நாற்றுப்பண்ணைகள் பசுமை குடில் மற்றும் நிழல் வலை என்ற இரு அமைப்புகளில் உள்ளது. இதில் பசுமை குடில் அமைத்த நாற்றுப்பண்ணைகளிலுள்ள நாற்றுக்கள் மழையில் நனையாது. 

    ஆனால் குழித்தட்டுக்களில் வளர்க்கப்படும் தக்காளி நாற்றுக்கள் 25 முதல் 30 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். அதற்கு மேல் இருப்பு இருந்தால் செடி வளர்வதற்கு தேவையான மண், சத்துக்கள் உள்ளிட்டவை கிடைக்காமலும், வேர்கள் செல்ல வழியில்லாமலும் பாதிக்கின்றன.

    அதேபோல் மிளகாய், கத்தரி உள்ளிட்டவை அதிகபட்சமாக 35 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். நிழல் வலை பண்ணைகளில் மழை நீர் நேரடியாக நாற்றுக்களில் இறங்கி அழுகியும் உரிய காலத்தில் நடவு செய்யாமல் வீணாகியும் வருகிறது.

    இவ்வாறு நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்த நாற்றுக்களில் 20 முதல் 50 சதவீதம் வரை என பல லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யாமல் வீணாகி வருகிறது. 

    மேலும் தற்போதுள்ள நாற்றுக்கள் விற்பனையாகமல் உள்ளதால் அடுத்த கட்ட உற்பத்தியும் பாதித்து விவசாயிகளுக்கும் நாற்றுக்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    எனவே நாற்றுப்பண்ணைகள் பாதிப்பதை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவும், மழை குறைந்ததும் சாகுபடி துவக்குவதற்கு தேவையான நாற்றுக்கள் உற்பத்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    குமரலிங்கம், பெருமாள்புதூர், கொழுமம், சாமராயபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    மடத்துக்குளம்:

    கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை முறையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் குமரலிங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., வும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் சிவலிங்கம், காளீஸ்வரன், லோகநாதன், சிவக்குமார், அன்னதான பிரபு, நடப்பன், பாலன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதில் குமரலிங்கம், பெருமாள்புதூர், கொழுமம், சாமராயபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    அனைத்து ரெயில்களும் நின்று செல்லாத காரணத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
    மடத்துக்குளம்:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவை-திண்டுக்கல் வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தான் சில ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. உடுமலை - பழனி இடையே உள்ள மடத்துக்குளம் ரெயில் நிலையம், 50 ஆண்டுகளை கடந்து செயல்படுகிறது.

    திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம், பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கரூர் வழியாக சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவை மடத்துக்குளம் ரெயில் நிலையம் வழியாக செல்கின்றன. ஆனால் அங்கு நிற்பதில்லை.

    பொதுமக்கள் கூறுகையில், அனைத்து ரெயில்களும் இங்கு நின்று செல்லாத காரணத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளது. எனவே அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    சம்பா சாகுபடியில் பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என இரண்டு பருவத்தில் இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது. சம்பா சாகுபடி அக்டோபர், நவம்பரில் நடவு செய்யப்பட்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி தொடக்கத்தில் அறுவடை நடக்கும்.

    தற்போது கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் 6,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

    சம்பா சாகுபடியில், பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது. இந்த பயிர்கள் ஆரோக்கியமாக வளர உரமிடுதல் மிக முக்கியமானதாகும்.

    இதுகுறித்து வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:

    மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் உரங்கள் இடுவதால் தேவையற்ற இடுபொருள் செலவுகள் தவிர்க்கலாம். ரசாயன கரிம எருக்கள், பசுந்தாள் உரம், பயிர்களின் கழிவுகள் போன்றவற்றால் மண் வளம் அதிகரிக்கும்.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இடுவதால் மண்வளம் பாதுகாக்கப்படும். முதன்மை தாவர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளுடன் மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச் சத்துக்களையும் சேர்க்கும். மகசூல் பெருகும் என்றார்.
    இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் பராமரிப்பு குறைவான விவசாயிகளின் விருப்ப பயிராக தக்காளி உள்ளது. 

    நூற்றுக்கணக்கான ஏக்கரில் இரண்டு பருவங்களில் தக்காளி நடவு செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கிராமங்களில் சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ. 30 என்றளவில் இருந்தது. 

    இதனால் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள், தக்காளி சாகுபடி செய்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி அறுவடை தொடங்கும் போது கிலோ ரூ.10-க்கும்  குறைவாக விற்பனையானது.

    ஆனால் தற்போது தக்காளியின் விலை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சந்தை நிலவரத்தின்படி ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவாக உள்ளதால் அருகில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறங்களில்  கிலோ ரூ. 80 அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

    இதே போல கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறி விலை தொடர்ந்து அதிகரிப்பதால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறோம். அரசு நடவடிக்கை மேற்கொண்டு, விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றனர். 

    சம்பா பருவ நெல் சாகுபடியில் பயிர் வளர்ச்சியின் போது ஏற்படும் களைகளால் 10 முதல் 25 சதவீதம் வரை நெல் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    மடத்துக்குளம்:

    சம்பா சாகுபடியில் களைகளை அகற்றாவிட்டால் மகசூல் பாதிக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சம்பா பருவ நெல் சாகுபடியில்  பயிர் வளர்ச்சியின் போது ஏற்படும் களைகளால் 10 முதல் 25 சதவீதம் வரை நெல் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நடவுக்கு பின் 15 தொடங்கி 40 நாட்களுக்குள் இரண்டு முறை களை எடுக்கப்பட வேண்டும். 

    தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் களைகளை மேற்கொள்வது சிரமமாகவும், செலவு அதிகமாக இருக்கலாம். இதற்குத் தீர்வாக களைகள் முளைக்கும் முன் புயூட்டாக்ளோர் அல்லது அனிலேபாஸ், தியோபென் கார்ப் அல்லது பென்டிமெத்தலின் பயன்படுத்தலாம்.

    களைக்கொல்லி 50 கிலோ மணலுடன் கலந்து  நடவு செய்த மூன்றாவது நாளில் மெல்லிய நீர்ப்படலம் இருக்கும் நிலத்தில் சீராக இட வேண்டும். களைகள் முளைத்த பின் 2.4.டி சோடியம் உப்பு அல்லது பிஸ்பைரி பேக் சோடியம் பயன்படுத்தலாம்.

    செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்த வயல்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்கு இடையே களையெடுக்கும் கருவியை இயக்கி களைகளை அகற்ற வேண்டும். களைகளை அகற்றாவிட்டால் மகசூல் பாதிக்கும். எனவே விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் உள்ள கொமரலிங்கம் பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் 70 சதவீத மக்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும், பெரும்பான்மையோர் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு பேரூராட்சி பகுதியில் போதிய வேலை கிடைக்காததால் பலரும் சிரமப்பட்டு வந்தனர்.

    எனவே மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கம்யூனிஸ்டு கட்சியினர் இதை வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தினர். இதனை ஏற்ற தற்போதைய அரசு கொமரலிங்கம் பேரூராட்சிக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

    முதல் கட்டமாக பேரூராட்சி பகுதியில் 500 பயனாளிகள் தேர்வு செய்து திட்டப்பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:

    பேரூராட்சி பகுதியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சராசரி வருமானம் மிகக்குறைவாக இருந்தது. இதனால் பலரும் வெளியூருக்கு சென்று தினக்கூலிகளாக வேலை பார்த்தோம். அங்கும் எங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை. வருவாய் இன்றி தவித்தோம். 

    தற்போது, வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கு விரிவுபடுத்தி இருப்பதை மிகவும் வரவேற்கிறோம். இந்தத் திட்டப்பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம் என்றனர்.
    சில இடங்களில் யூரியாவுடன் கூடுதலாக வேறு உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர்.
    மடத்துக்குளம்:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் மானாவாரி சாகுபடி விதைப்பு உட்பட விவசாய சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் நிலைப் பயிர்களுக்கு உரமிட தொடங்கி உள்ளனர். 

    இதனால் வழக்கத்தை விட யூரியா உட்பட உரங்களின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த நேரத்தில் யூரியா கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    சீசனில் உரம் கிடைக்காததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சில இடங்களில் யூரியாவுடன் கூடுதலாக வேறு உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனிடையே மடத்துக்குளம் பகுதி உரக்கடைகளில் வேளாண்மைத்துறையினர்ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:

    உரப்பதுக்கல் உள்ளதா எனக் கண்டறியவும், இருப்பில் உள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விற்பனையாளர்கள் புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். 

    ஆதார் எண் கட்டாயம் கொண்டுவர அறிவுறுத்தி உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களை விற்க வேண்டும். ஒரு நபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவு உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். பி.ஓ.எஸ். எந்திரத்தில் பட்டியலிட்டு ரசீது வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட உரம் பூச்சி மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    விற்பனை உரிமம், விலை விவரங்களை அனைவரும் காணும்படி எழுதி வைத்திருக்க வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களில் மருந்துகளை கொள்முதல் செய்யக் கூடாது. உரத்தை இருப்பு வைத்துக் கொண்டே இல்லை என சொல்லக் கூடாது. 

    ஒரு உரம் வாங்கினால் தான் மற்றொரு உரம் கிடைக்கும் என சொல்லக் கூடாது. மொத்த விற்பனையாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது. ஆய்வு மேற்கொள்ளும்போது முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    விவசாயிகள் தாங்கள் வாங்கும் இடுபொருட்களுக்கு விற்பனை ரசீது கட்டாயம் பெற வேண்டும். சாகுபடி செய்துள்ள பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

    உரம் விற்பனையாளர்கள் விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தரமற்ற விதைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆய்வு செய்தது.
    மடத்துக்குளம்:

    உடுமலை பகுதிகளில் பாகல், பூசணி, பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்ட கொடி வகைகளில் காய்ப்புத்திறன் இல்லை. தரமற்ற விதைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள பாதிக்கப்பட்ட சாகுபடி வயல்களில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் ராஜேஸ்வரி, கார்த்திகேயன், விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு மீள் வயல் ஆய்வு செய்தது. இதுகுறித்து அறிக்கையை விரைவில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: 

    விவசாயிகள் கொள்முதல் செய்யும் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகளில் வாங்க வேண்டும். வாங்கும் போது விதைகளின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை ரசீதுகளுடன் ஒத்துள்ளதா என கவனித்து கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.

    வாங்கும் ரசீதுகளை சாகுபடி காலம் முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விற்பனை ரசீது இல்லாமல் விதை, நாற்றுக்கள் விற்பனை செய்தாலோ, போலி ரசீது வழங்கியிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளர்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் மீது விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணை இயக்குனர் தெரிவித்தார்.
    ×