search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பதுக்கலை தடுக்க மடத்துக்குளம் உரக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    சில இடங்களில் யூரியாவுடன் கூடுதலாக வேறு உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர்.
    மடத்துக்குளம்:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் மானாவாரி சாகுபடி விதைப்பு உட்பட விவசாய சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் நிலைப் பயிர்களுக்கு உரமிட தொடங்கி உள்ளனர். 

    இதனால் வழக்கத்தை விட யூரியா உட்பட உரங்களின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த நேரத்தில் யூரியா கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    சீசனில் உரம் கிடைக்காததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சில இடங்களில் யூரியாவுடன் கூடுதலாக வேறு உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனிடையே மடத்துக்குளம் பகுதி உரக்கடைகளில் வேளாண்மைத்துறையினர்ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:

    உரப்பதுக்கல் உள்ளதா எனக் கண்டறியவும், இருப்பில் உள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விற்பனையாளர்கள் புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். 

    ஆதார் எண் கட்டாயம் கொண்டுவர அறிவுறுத்தி உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களை விற்க வேண்டும். ஒரு நபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவு உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். பி.ஓ.எஸ். எந்திரத்தில் பட்டியலிட்டு ரசீது வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட உரம் பூச்சி மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    விற்பனை உரிமம், விலை விவரங்களை அனைவரும் காணும்படி எழுதி வைத்திருக்க வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களில் மருந்துகளை கொள்முதல் செய்யக் கூடாது. உரத்தை இருப்பு வைத்துக் கொண்டே இல்லை என சொல்லக் கூடாது. 

    ஒரு உரம் வாங்கினால் தான் மற்றொரு உரம் கிடைக்கும் என சொல்லக் கூடாது. மொத்த விற்பனையாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது. ஆய்வு மேற்கொள்ளும்போது முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    விவசாயிகள் தாங்கள் வாங்கும் இடுபொருட்களுக்கு விற்பனை ரசீது கட்டாயம் பெற வேண்டும். சாகுபடி செய்துள்ள பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

    உரம் விற்பனையாளர்கள் விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×