search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொமரலிங்கம் பேரூராட்சியில் வேலை உறுதி திட்டம் - பொதுமக்கள் வரவேற்பு

    மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் உள்ள கொமரலிங்கம் பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் 70 சதவீத மக்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும், பெரும்பான்மையோர் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு பேரூராட்சி பகுதியில் போதிய வேலை கிடைக்காததால் பலரும் சிரமப்பட்டு வந்தனர்.

    எனவே மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கம்யூனிஸ்டு கட்சியினர் இதை வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தினர். இதனை ஏற்ற தற்போதைய அரசு கொமரலிங்கம் பேரூராட்சிக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

    முதல் கட்டமாக பேரூராட்சி பகுதியில் 500 பயனாளிகள் தேர்வு செய்து திட்டப்பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:

    பேரூராட்சி பகுதியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சராசரி வருமானம் மிகக்குறைவாக இருந்தது. இதனால் பலரும் வெளியூருக்கு சென்று தினக்கூலிகளாக வேலை பார்த்தோம். அங்கும் எங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை. வருவாய் இன்றி தவித்தோம். 

    தற்போது, வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கு விரிவுபடுத்தி இருப்பதை மிகவும் வரவேற்கிறோம். இந்தத் திட்டப்பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம் என்றனர்.
    Next Story
    ×