search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி வீடியோக்கள்"

    • ஏஐ மூலம் மிகவும் எளிதாக இத்தகைய வீடியோக்களை தயாரிக்க முடிகிறது
    • முறையான சட்டங்கள் இல்லாததால் பாதிப்படைந்தவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்

    பிரபலங்களை மையமாக வைத்து பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோக்களின் மூலம் தவறான செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

    டீப் ஃபேக் (deep fake) எனப்படும் இத்தகைய வீடியோக்கள் டிஜிட்டல் முறையில் ஃபேஸ் ஸ்வேப்பிங் (face swapping) எனப்படும் முகமாற்று முறையில் தயாரிக்கப்படுபவை.

    ஆனால், சமீப சில மாதங்களாக ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் அத்தகைய வீடியோக்களை உருவாக்குதல் மிக எளிதாகி வருகிறது. இணையத்தில் பல வலைதளங்கள் இத்தகைய வீடியோக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் தந்து உதவுகின்றன.

    ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையத்திலோ பொதுவெளியிலோ உள்ள எவரது முகத்தையும் வேறு ஒருவரது முகத்தில் பொருத்தி தத்ரூபமாக ஒரு பொய்யான வீடியோவை தயாரிக்க முடியும். இவற்றை பொய்யானவை என கண்டறிவது சுலபமும் அல்ல. மேலும், இவற்றை நீக்கும் முயற்சியும் நீண்ட நேரம் ஆவதால், இவற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    பெண்களை, அதிலும் குறிப்பாக பிரபலமான பெண்களை குறி வைத்து இவை உருவாக்கப்படுவது அரசாங்கங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் முன்னணி பாடகியான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) குறித்த அத்தகைய வீடியோ வைரலானது.

    இந்த பொய் வீடியோ, எக்ஸ் சமூக வலைதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "பொய்யான வீடியோக்கள் மிகவும் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சிக்கலை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசு உடனடியாக செய்யும். பயனர்கள் இத்தகைய வீடியோக்களை பொய்யானவை என எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றில் குறியீடுகளை செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த ஏஐ நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என தெரிவித்தார்.

    ஏஐ தொழில்நுட்பத்தால் பெருகி வரும் இத்தகைய உள்ளடக்கங்களை கையாள்வது சமூக வலைதளங்களுக்கும் சிக்கலாக இருக்கிறது. இவற்றை உடனடியாக நீக்குவது இந்நிறுவனங்களின் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக உள்ளது.

    • போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
    • போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும்.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன.

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்றே தொடங்கப்படும். குறுகிய காலத்தில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

    ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ, புதிய சட்டமோ கொண்டு வரப்படும்.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும், புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘டீப்பேக்’ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • ‘டீப்பேக்’ படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும்.

    புதுடெல்லி:

    புகைப்படம், வீடியோ, ஆடியோவை அச்சு அசலாக போலியாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 'டீப்பேக்'. இதன் மூலம் ஒருவரின் புகைப்படம், வீடியோவில் மற்றொருவரின் உருவத்தை ஏற்றி, நிஜம் போல உருவாக்க முடியும். ஆடியோவையும் மாற்ற முடியும்.

    இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் போன்ற பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டது, மிகுந்த சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த தொழில்நுட்பமானது சமூகத்தில் பெரும் நெருக்கடியையும், அதிருப்தியையும் உருவாக்கலாம். இது தவறாக பயன்படுத்தக்கூடிய அபாயம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்தியிருந்தார்.

    இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போலியாக வீடியோ, ஆடியோவை உருவாக்கும் 'டீப்பேக்' விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி அந்த நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் 'டீப்பேக்' விஷயத்தில் இன்னும் தீவிரமான நடவடிக்கையை சமூக ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    எனவே அடுத்த 3, 4 நாட்களில், சமூக ஊடக நிர்வாகிகளுடன் நாங்கள் கூட்டம் நடத்தவிருக்கிறோம். அதில் 'டீப்பேக்' தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டு, அதை தடுப்பதற்கும், 'டீப்பேக்' படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும். மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களும் அதில் அடங்கும்.

    'டீப்பேக்' படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை அகற்றாத சமூக ஊடகங்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் பாதுகாப்பு பெற முடியாது.'

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×