search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதயாத்திரை வரலாறு"

    • பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது.
    • பழனிக்குப் பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார்.

    போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ம் நூற்றாண்டிலேயே மிகவும் தைரியமாக பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமூகத்தினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனதிலே பிரார்த்தனை செய்து கொண்டார். பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது.

    செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டு தோறும் தன் ஊரில் இருந்து பழனிக்குப் பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார். முருகனின் கருணை வெள்ளத்தில், அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார்.

    இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதற்காக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர். இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது.

    ஒரு குழு, பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்து பழனி வருகின்றனர். இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களில் இருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடிகளுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

    இதேபோன்று பல்வேறு பிரிவினர்களும் காவடி எடுத்துப் பழனிக்கு நடந்து வருவர். வழியில் நாட்டார் காவடிகள் என்றும் நகரத்தார் காவடிகள் என்றும், நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை.

    நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து விட்டு மறுபடியும் பயணம் மேற்கொள்வர். இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும் ஆடியும் நடந்து செல்வார்கள்.

    பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள். அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடி களை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள்.

    இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது. தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் வேறு எந்த கோவிலிலும் பாதயாத்திரைப் பக்தர்கள் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×