search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை மோசடி"

    • விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
    • அவர் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்வதுண்டு.

    நேற்று ஒரு ஜோடியினர், கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். காலையில் அறையில் இருந்து வெளியே சென்ற அவர்கள் மாலையில் மீண்டும் விடுதி அறைக்குத் திரும்பினர்.

    இரவு உணவுக்குப் பிறகு அவர்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை அறையில் இருந்து ஆண் மட்டும் அரக்கப்பரக்க வெளியே ஓடி வந்தார். அவர் தன்னுடன் இருந்த பெண் எங்காவது நிற்கிறாரா? என தேடியதால் விடுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவரது பரபரப்பை பார்த்த விடுதி நிர்வாகிகள், அவரிடம் விசாரித்த போது கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது அறையில் இருந்த 9 பவுன் நகை மாயமாகி விட்டதாக முதலில் அவர் கூறினார்.

    2 பேர் மட்டும் அறையில் இருந்த நிலையில் நகை மாயமானது எப்படி? என கேட்டபோது தன்னுடன் வந்த பெண்ணையும் காணவில்லை என அவர் கூறினார். எனவே அந்தப் பெண் தான் நகையை எடுத்துச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகையை இழந்தவர் பெயர் ஆல்பர்ட் (வயது 52) என்பதும் நெல்லை டவுணைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கார் புரோக்கரான நான், தொழில் விஷயமாக சமூக வலைதளங்களில் எப்போதும் செயல்பாட்டில் இருப்பேன். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் என்னுடன் தங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் தனது பெயர் சத்யா (29) என்றும் சொந்த ஊர் மதுரை என்றும் தெரிவித்தார்.

    கடந்த 3 மாதங்களாக அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தேன். இந்த நிலையில் நேரில் சந்திக்கும் ஆவலுடன் அவரை கன்னியாகுமரி அழைத்து வந்தேன். இங்கு நேற்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தோம். படங்களும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு இரவில் விடுதியில் வந்து தங்கினோம்.

    இந்த நிலையில் இன்று காலை சத்யாவை காணவில்லை. அறையில் எனது கைப்பையில் வைத்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்கள் ஆகியவையும் மாயமாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சத்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் போலீசாரிடம் ஆல்பர்ட் கொடுத்துள்ளார். அதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்தப் பெண் இரவே விடுதியில் இருந்து சென்று விட்டாரா? அல்லது அதிகாலையில் தான் சென்றாரா? என்பது மர்மமாக உள்ளது.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். அவர் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்தாலும் சிலர் அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்றுதான்.

    • 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விட்டுள்ளார்.

    அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்துகேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    நேற்று கேத்தனூரில் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகம் தரப்பில் மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர் என தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்குவந்தது. இதையடுத்து நேற்று மாலை கேத்தனூர் வங்கிக் கிளையில், பாரத் ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஸ்வரி, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்ட அதிகாரிகள், வங்கி நகை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நகை மீட்பு இயக்கத்தினர், விவசாயிகள்பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நகை மோசடியால் பாதிக்கப்பட்ட 584 பேருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டது. வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்களின் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றும், வங்கியில் இருந்து நகை திருப்பி எடுத்தவர்களுக்கு, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். 31ந் தேதி திங்கள்கிழமை முதல் டோக்கன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்தொகையை பெற ஆதார் கார்டு, இரண்டு போட்டோ, வங்கி ரசீது நகல் கொண்டு வர வேண்டும் என்று வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திற்கும், பல்லடம் வருவாய் துறைக்கும், காவல் துறைக்கும் கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

    • விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
    • நகைக்கடையின் முன்னாள் ஊழியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பத் சிங் என்பவரிடம் நகைகளை கொடுத்தது தெரிய வந்தது.

    கோவை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லிகார் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி (வயது 60). நகை மொத்த வியாபாரி.

    இவர் பெங்களூருவில் அன் மோல் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகை ஆபரணங்களை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறார்.

    ஷாகன்லால் சாத்ரி கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது நகைக்கடையில் இருந்து கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு நகை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கோவைக்கு அனுப்பப்படும் நகைகளில் மீதமுள்ள விற்காத மற்றும் விரும்பாத மாடல் நகைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் எனது நகைக்கடைக்கு திரும்ப அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த பணிகளை எனது நகை கடையில் விற்பனை பிரிவில் மேலாளராக பணியாற்றிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் திவேஷி (45) என்பவர் கவனித்து வந்தார். கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக மீதமுள்ள 15 கிலோ 447 கிராம் தங்க நகைகள் லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் கடைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    ஆனால் விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி 1 கிலோ 867 கிராம் தங்கத்தை மட்டுமே ஒப்படைத்து விட்டு மீதமுள்ள ரூ.6 கோடி மதிப்பிலான 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை முறைப்படி காட்டாமல் மோசடி செய்தார். இது குறித்து நான் மேலாளரிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பின்னர் கோவையில் பதுங்கி இருந்த விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நகைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் நகைக்கடையின் முன்னாள் ஊழியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பத் சிங் என்பவரிடம் நகைகளை கொடுத்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். நகைகளுடன் தப்பி ஓடிய தல்பத் சிங் என்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

    நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • வாலிபரால் ஏமாற்றப்படும் பெண்கள் சிலர் வெளியில் சொன்னால் அவமானம் என கருதி புகார் தெரிவிக்கவில்லை.
    • வாலிபர் மீது திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டா மண்டலத்தை சேர்ந்தவர் சந்திரா. இவர் சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சில ஆண்டுகள் கூடூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

    அப்போது வீட்டில் தனிமையில் வசிக்கும் பெண்களிடம் நைசாக பேசி தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

    பெண்களிடம் தங்க நகை வியாபாரம் செய்வதாக கூறி வசதியானவரைப் போல் காட்டிக் கொண்டார். பல பெண்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தூக்க மாத்திரை கொடுத்து மயக்கத்தில் உல்லாசமாக இருந்த நேரத்தில் அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

    இவரால் ஏமாற்றப்படும் பெண்கள் சிலர் வெளியில் சொன்னால் அவமானம் என கருதி புகார் தெரிவிக்கவில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் உள்ளது.

    2010-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்து சென்றுள்ளார். 2 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தை சேர்ந்த பெண்ணிடம் பேசத் தொடங்கி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

    அதேபோல் கிருஷ்ணா லங்காவில் மற்றொரு பெண்ணை ஏமாற்றி 10 பவுன் நகை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து பாதித்த பெண் ஒருவர் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா நகர் பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த சந்திராவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்த விவரம் ஆராய்ந்த போது அதில் 13 பேரின் நகைகள் போலியானது என தெரிய வந்தது.
    • வங்கியில் அடமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நாளை முழுவதுமாக சோதனை செய்யப்படும்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அவல்பூந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து புதிதாக நகை மதிப்பீட்டாளராக ஒருவர் பணிக்கு வந்தார். அவர் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை சோதனை செய்தார்.

    அப்போது அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் 13 பேரின் நகை போலி என தெரிய வந்தது. இந்த போலி நகை மூலம் ரூ.25 லட்சத்துக்கு மேல் கடனாக பெற்றுள்ளதும் தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக அந்த 13 பேரும் வங்கிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் நாங்கள் போலி நகைகளை அடமானம் வைக்கவில்லை. நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் அவசர தேவைக்காக அவரது நகையை கொடுத்து வங்கியில் அடமானம் வைத்து தருமாறு கேட்டுக் கொண்டதால் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர்.

    இதனால் வங்கியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது குறித்து தகவல் பரவியதும் வங்கியில் நகை அடமானம் வைத்த 50-க்கும் மேற்பட்டோர் வங்கியை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

    தங்களது நகைகளும் போலி நகையாக மாறி இருக்குமோ என்ற அச்சத்தில் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை வங்கியில் உள்ள மற்ற நகைகள் முழுவதுமாக சோதனை செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    சம்பந்தப்பட்ட வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்த விவரம் ஆராய்ந்த போது அதில் 13 பேரின் நகைகள் போலியானது என தெரிய வந்தது. இந்த போலி நகைகள் மூலம் ரூ.25 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது அவர்கள் நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் சொல்லி தான் அவருடைய நகையை அடமானத்துக்கு வைத்தோம் என்று கூறியுள்ளனர்.

    தற்போது பிரகாஷ் உயிரோடு இல்லை அவர் இறந்து விட்டார். அவர்கள் கூறியது உண்மைதானா? அப்படியே அவர்கள் கூறியது உண்மை என்றால் நகையை அடமானம் வைப்பதற்காக இவர்களுக்கு அவர் பணம் ஏதும் கொடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணை முடிவில் உண்மையான நிலவரம் தெரியவரும்.

    இதேப்போல் வங்கியில் அடமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நாளை முழுவதுமாக சோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்..
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் (வயது57) என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளை மோசடி செய்தார்.இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள் தரப்பில், இழப்பீடு குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம் இன்னும் பதில் கிடைக்கவில்லை, வரும் ஜூலை30க்குள் இழப்பீடு குறித்த உறுதியான தகவல்கள் அளிக்கப்படும் என வங்கியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை ஆட்சேபித்த வாடிக்கையாளர்கள் இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடந்தும் இழப்பீடு குறித்து எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உயரதிகாரிகளிடம் பேசுகிறோம், பேசுகிறோம் என்று காலதாமதம் செய்கின்றனர்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். 584 பேருக்கு சமரச பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அடகு வைத்த நகைகளை திருப்பிய 84 பேருக்கும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். நகை மோசடி பிரச்சனை தீரும் வரை வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக்கூடாது. வரும் 30-ந்தேதிக்குள் இழப்பீடு குறித்த உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    • தங்கமாயாள் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பூசாரி பழனிகுமார் என்பவரிடம் அருள்வாக்கு கேட்டார்.
    • நகையை பெற்று கொண்ட அவர் பின்னர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கமாயா (வயது 42). கடந்த சில மாதங்களாக பாலமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் காய்கறி வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அருகில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடம் அருள் வாக்கு கேட்டால் பலிக்கும் என தங்கமாயாளிடம் அப்பகுதியினர் தெரிவித்தனர். இதை நம்பி தங்கமாயாள் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பூசாரி பழனிகுமார் என்பவரிடம் அருள்வாக்கு கேட்டார்.

    அப்போது உங்களின் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும். எனவே உங்கள் வீட்டில் உள்ள நகையை பூஜையில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமாயாள் தனது வீட்டில் இருந்த 26 பவுன் 6 கிராம் நகையை பழனிகுமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

    நகையை பெற்று கொண்ட அவர் பின்னர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இதற்கு பழனிகுமாரின் மனைவி ரம்யாவும் உடந்தையாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கமாயாள் நகை மோசடி குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின்படி பழனிகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    நகை மோசடி தொடர்பாக பழனிகுமார், அவரது மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்திய போது தங்கமாயாளை ஏமாற்றியது போல், அதே பகுதியை சேர்ந்த பலரை ஏமாற்றி இந்த தம்பதியினர் 60 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×