search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மோசடி செய்த விற்பனை மேலாளர் கைது
    X

    ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மோசடி செய்த விற்பனை மேலாளர் கைது

    • விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
    • நகைக்கடையின் முன்னாள் ஊழியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பத் சிங் என்பவரிடம் நகைகளை கொடுத்தது தெரிய வந்தது.

    கோவை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லிகார் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி (வயது 60). நகை மொத்த வியாபாரி.

    இவர் பெங்களூருவில் அன் மோல் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகை ஆபரணங்களை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறார்.

    ஷாகன்லால் சாத்ரி கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது நகைக்கடையில் இருந்து கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு நகை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கோவைக்கு அனுப்பப்படும் நகைகளில் மீதமுள்ள விற்காத மற்றும் விரும்பாத மாடல் நகைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் எனது நகைக்கடைக்கு திரும்ப அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த பணிகளை எனது நகை கடையில் விற்பனை பிரிவில் மேலாளராக பணியாற்றிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் திவேஷி (45) என்பவர் கவனித்து வந்தார். கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக மீதமுள்ள 15 கிலோ 447 கிராம் தங்க நகைகள் லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் கடைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    ஆனால் விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி 1 கிலோ 867 கிராம் தங்கத்தை மட்டுமே ஒப்படைத்து விட்டு மீதமுள்ள ரூ.6 கோடி மதிப்பிலான 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை முறைப்படி காட்டாமல் மோசடி செய்தார். இது குறித்து நான் மேலாளரிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பின்னர் கோவையில் பதுங்கி இருந்த விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நகைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் நகைக்கடையின் முன்னாள் ஊழியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பத் சிங் என்பவரிடம் நகைகளை கொடுத்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். நகைகளுடன் தப்பி ஓடிய தல்பத் சிங் என்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×