search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கோவில்"

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

    வேங்கிக்கால்:

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 1 மணிக்கு நிறைவடைந்தது.

    நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதிகாலை தொடங்கி இரவு 11 மணி வரை இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    சுமார் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்.

    தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    கடந்த சில மாதங்களாக கிரிவல பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியிலும் அதிகபட்சமாக 10 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

    பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. பவுர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர். பவுர்ணமி நாட்களில் சென்னை, விழுப்புரத்திற்கு சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.

    அதோடு, போக்குவரத்து மாற்றம், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பவுர்ணமி நாளில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவிவட அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். மேலும் கட்டண தரிசனம் வழியிலும் பக்தர்கள் 2 மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசனம் வழியில் வந்த பக்தர்கள் போதிய குடிநீர் வசதி இல்லாமல் அவதி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆடி மாத பவுர்ணமி, நாளை 1-ந் தேதி அதிகாலை 3.26 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் 2-ந் தேதி அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவுர்ணமி கிரிவலத்தை யொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 சிறப்பு பஸ்களும், தெற்கு ரெயில்வே சார்பில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி நாளில், அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
    • இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 5 மணி முதல் 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும் திருப்பதி மத்திய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    சிறப்பு பஸ்களில் அமராவதி, கருடா, இந்திரா ஏ.சி, ஏ.சி அல்லாத சூப்பர் அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் உள்ளன. ஏற்கனவே 100 சிறப்பு பஸ்களில் பாதி அளவு டிக்கெட் முன்பதிவு முடிந்து உள்ளது.

    பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளன. இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.
    • மகா தீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டு தீ பரவியது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இங்குள்ள அண்ணாமலை உச்சியில் கார்த்திகை மாதம் திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள்.

    சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. நேற்று மகாதீபமலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென்று பரவி சுமார் பல மீட்டர் தூரம் வரை எரிந்தது. தீ விபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஏக்கரில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமாகி விட்டன. மகா தீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டு தீ பரவியது தெரியவந்துள்ளது.

    மலையில் தீ வைத்தவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் புனிதமாக கருதப்படும் அண்ணாமலை மீது தீ வைப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இவர்களை போன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வழிபடுகின்றனர். ஆனி மாத பவுர்ணமி என்பது வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குவதால், தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கணித்துள்ளனர்.

    இதையொட்டி, அருணாசலேஸ்வரர் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி தெற்கு ரெயில்வே துறை சார்பில் சென்னை கடற்கரை-வேலூர் மெமு ரெயில், தாம்பரம்-விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • திருக்கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவி சமேதராக காட்சி தருகிறார்.
    • மூலவரின் முன்பாக வரதராச பெருமாள் அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.

    அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதி...

    இந்த சன்னதியே ஆரம்பத்தில் இத்தலத்தில் அமைக்கப்பட்ட பெருமையுடையதாக இருந்து வருகிறது.

    இத்திருக்கோவில் திருவண்ணாமலை திருத்தலத்தில் பிரதி ரூபமாக முதன் முதலில் நிர்மாணித்து ஸ்ரீ காசிஸ்தலத்திலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி என வழங்கும் ஜோதி ரூபமாகிய திருவண்ணாமலை ஐதீகத்தில் இத்திருக்கோவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. முதலில் சின்னக் கோவிலென வழங்கும் இத்திருக்கோவில் நிர்மானிக்கப்பட்டு பிறகு பெரிய கோவிலும் அதனை சுற்றி சன்னதிகளும் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

    இத்திருச்சன்னதியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக திண்ணைச் சாமியார் என அனைவராலும் அழைக்கப்படும் சித்தர் சாமியாரான மௌனகுருசுவாமிகள் நிஷ்டையில் இருப்பார்களாம். இரவில் சுவாமிகள் நவகண்ட யோகம் செய்வார் என்றும் தலை அணி அண்ணாமலையார் சந்நிதியிலும் அங்கங்கள் சிதறிய நிலையிலும் இவருடைய வழிபாடு நிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    இவர் திருக்கோவிலின் எதிரே தற்போதுள்ள பள்ளியப்பன் தெரு 1/13-ம் எண் வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறே இத்திருத்தலத்தினை தன் உள்ளத்திலேயே கண்டு நிஷ்டையில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

    வடலூர் வள்ளலார், சுரக்காய் சித்தர் போன்ற மகிமை வாய்ந்த சித்தர்களும் ஆடம்பரம் இல்லாமல் இச்சன்னதியில் வழிபட்டுச் சென்றதாக வழிவழியாக வந்தவர்கள் மூலம் அறிய முடிகிறது.

    அருள்மிகு மகிஷாசுர மர்த்தினி

    அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதியில் இடது புறம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகா காளி இத்திருத்தலத்தில் சாந்தஸ்வரூபியாக தெற்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சியளித்து தன்னை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து அருள்பாளித்து வருகிறார்.

    பொதுவாக உக்கிரமான கோர ஸ்வரூபத்தில் இருக்கும் மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக மகிஷாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

    சென்னையில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அளவிற்கு நம் அம்பாள் வீற்றிருந்து, அருளை அளித்து, சங்கடங்களை தீர்த்துவருகிறார். ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அம்பாளுக்கு வெண்ணெய் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத வியாதியும் நீங்கி, மனநிறைவும் காரியத்தில் வெற்றியும், சுபச்செய்தியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும். நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் பக்தர்களால் செய்யப்பட்டு வரப்படுகிறது. வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் பெருவாரியான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.

    அருள்மிகு வாராஹி அம்மன்

    ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை மாய்த்து தந்தத்தால் ஆன மாலை சூடிய பூவராக மூர்த்தியின் ஸ்த்ரீ அம்சமான வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள். இவளே வாக்தேவி என்று ரிக் வேதம் சொல்லும் பெண்மையின் மஹா சக்தியான இவள், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரம். வெவ்வேறு வகையான கோலங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, சுதை பத்மம், மீன், குழந்தை முதலியவற்றைக் கையில் ஏந்தி காட்சி தருபவள்.

    கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம் முதலியவை இவள் வாகனங்கள். ஸ்ரீவித்யா உபாசனையில் பரவித்யாவாக போற்றப்படுபவள். விஷ்ணுவின் யோகமாயையான இவளே ஸ்ரீலலிதையின் தண்ட நாயகியாகவும், தண்டினி என்றும் வழங்கப்படுகிறாள். பூமி தானேஸ்வரியான இவள் நமக்கு பூமி சம்மந்தமான சொத்துக்கள் பெறவும், வழக்குகள் வியாஜ்யங்கள் இவற்றில் வெற்றி பெறவும் உதவுவாள்.

    இவளை வழிபட வாஸ்து தோஷம் நீங்கும். தானிய வளம் பெருக இவள் கருணை வேண்டும். இவளை உபாசிப்பவர்களை எதிரிகள் எதிர்க்கமாட்டார்கள். வணங்குபவர்களின் குலத்திற்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து சகல சங்கடங்களிலிருந்து நிவாரணம் தரும் இந்த மஹா சக்தியான கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான ஸ்ரீவராஹி அஸ்வாரூடா, கஜாரூடா, வியாக்ராரூடா, மந்திர வாராஹி சொப்ன வாராஹி என்று பல ரூபங்களில் தரிசனம் வருகிறாள்.

    இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த ஜகன்மாதா இத்திருத்தலத்தில் அணி அண்ணாமலையர் சன்னதியின் மேற்கு புறத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.

    ஸ்ரீபைரவர் சன்னதி

    இத்திருத்தலத்தில் தெற்கு முகத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் இச்சன்னதியில் ஸ்ரீபைரவருக்கு மாலையில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், பக்தகோடிகளால் மிகவும் சிறப்புற செய்யப்பட்டு வரப்படுகிறது. தொடர்ந்து எட்டு அஷ்டமிகளில் நடைபெறும் அபிஷேகத்திலும் பூஜையிலும் கலந்து கொள்பவர்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு வருவதாக பக்தர்களால் அறிய முடிகிறது. இந்த மூர்த்தியை தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி வடை மாலை சாற்றி செந்நிற முழு மலர்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் சகல சௌபாக்கிங்களும் கிடைக்கும்.

    அருள்மிகு வரதராச பெருமாள் சன்னதி

    இத்திருக்கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவி சமேதராக காட்சி தருகிறார். மூலவரின் முன்பாக வரதராச பெருமாள் அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.

    பொதுவாக இறைவன் கிழக்கு முகமாகவே அருள் பாலிப்பார். ஆனால், இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வரதராசப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் சுவாமிக்கு வழிபாடும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது.

    திருமணத்தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவ்வரதராச பெருமாள் இறைவனை உள்ளன்போடு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு விரைவில் திருமணமும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபட்டு மகப்பேறும், பெறுவதாக ஐதீகம். திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் பூஜா முறையான வைகானச ஆகமப்படி இவ்வரதராச பெருமாளுக்கு பூஜை முறைகள் முதலியன மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. காஞ்சிபுரம் சென்று வரதராசரை தரிசிக்க இயலாதவர்கள் இத்திருத்திலத்தில் தரிசித்து அருளைப் பெறுகின்றனர்.

    • கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு.
    • வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    கார்த்திகை தீப திருவிழா மிகப் பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை அகநானூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களில் நக்கீரர், அவ்வையார் போன்றோரின் பாடல்களால் அறிய முடிகிறது. சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானின் திருமயிலைத் திருப்பதிகத்திலும் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

    இவ்விழாவை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தினத்தன்று தொடங்கி தினமும் வீட்டு வாசலில் வரிசையாக விளக்கேற்றி வைத்து தமிழ்நாடு முழுவதம் கொண்டாடுகின்றனர். முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு நடத்துபவர்களும் உண்டு.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும் விளக்கு என்றாலே அதைத் தீபலட்சுமியின் அம்சமாகவே கருதி மங்களங்கள் பொங்கச் செய்யும் மாபெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். விளக்கின் ஜோதியில் நெருப்பு சிவபெருமான்; நெருப்பின் வெப்பம் அம்பிகை; ஒளி முருகன்; ஜோதி விஷ்ணுவும் சூரியனும் என்பது ஐதீகம்.

    இந்த தீபத் திருவிழா தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மற்ற எந்த தலத்திலும் இல்லாதபடி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மண் அகல் விளக்கை ஏற்றினால் வீரிய விருத்தி மிகும். இரும்பு அகல் கெட்ட சகவாசங்களை அகற்றும். வெண்கல விளக்கு பாபங்களைப் போக்கும். பித்தளை விளக்கிலும் தீபமேற்றலாம். எவர்சில்வர் விளக்கு கூடாது. வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    • மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.
    • இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.

    அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 11-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டிற்கான மகா தீபம் ஏற்றப்படும் நிறைவு நாளையொட்டி மகா தீபத்தை தரிசனம் செய்ய நேற்று மாலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.

    மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
    • முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுக்கு பிறகு, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.29 கோடி வசூலாகியுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.

    விழாவில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

    அருணாசலேஸ்வரர் கோவில் ஆதி அண்ணாமலையார், திருநேர் அண்ணாமலையார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், அஷ்ட லிங்க கோவில்களில் நிரந்தம் மற்றும் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த 86 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

    கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 450 பேர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2,29,20,669 ரொக்கம், 228 கிராம் தங்கம், 1,478 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக வசூலாகியுள்ளது.

    மீதமுள்ள 60 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடந்து வருகிறது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    கோவில் உண்டியல் காணிக்கை தொகை அதிகளவில்‌ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது.
    • தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மலையில் மகா தீபத்தை தரிசித்தபடி, விடிய விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர்.

    இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    சிறப்பு பஸ்கள் இன்றும் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நாளை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
    • நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்கிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் தங்க விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக எழுந்தருளினர்.

    சரியாக மாலை 6 மணிக்கு கோவில் கொடிமரம் முன், இறைவிக்கு இறைவன் தன் உடலின் சரிபாதியை கொடுத்ததை விளக்கும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் வலம் வந்து ஒரு நிமிடம் தரிசனம் தந்தார்.

    அப்போது சிவாச்சாரியார்கள் பஞ்சமுக தீபாராதனை காட்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட சங்கு, தாளம், பெருந்தாள், பேரிகைகள் முழங்க சிவதொண்டர்கள் ஆனந்த நடனமாட, மலையை நோக்கி தீப்பந்தங்கள் காட்ட, அதிர்வேட்டுகள் முழங்க 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மீது தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 16-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை வியாழக்கிழமை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்கிறார்.

    • சென்னையில் இருந்து நேற்று 400 சிறப்பு பஸ்களும், இன்று 1000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • நாளை பவுர்ணமி சிறப்பு தினமாக இருப்பதால் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சேலம், திருப்பத்தூர், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து நேற்று 400 சிறப்பு பஸ்களும், இன்று 1000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இன்று மாலையில் மகா தீபம் ஏற்றப்படுவதால் அதை காண செல்லும் பக்தர்கள் கூட்டம் பஸ் நிலையங்களில் அதிகரித்தது.

    சுமார் ஒரு லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலம் பயணம் செய்துள்ளனர். நாளை பவுர்ணமி சிறப்பு தினமாக இருப்பதால் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கார்த்திகை தீபம், பவுர்ணமியையொட்டி 3000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,430 பஸ்கள் இன்று செல்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக தேவையான அளவு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    தீபம், பவுர்ணமி முடிந்து திரும்பி வரவும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை வரை சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்த வசதி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×