search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பாவை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
    • விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டி கையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார்.
    • சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

    அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகக்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

    இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல; சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.

    சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.

    பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.

    பெரியாழ்வார் அதிர்ச்சி

    ஒரு நாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டு கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கி கொண்டது. ஆண்டாள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் கவனித்துவிட்டார்.

    உடனே, அந்த மாலையை பெருமாளுக்கு சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் அவரது கனவில் தோன்றி, முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை தான். அவள் சூடி களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு சாற்ற வேண்டும் என்று அருளினார்.

    இதனாலேயே ஆண்டாளுக்கு சூடி கொடுத்த சுடர்கொடியாள் என சிறப்பு பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு சாற்றப்பட்டு வருகிறது.

    ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்றுபொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.

    திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்து, தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதிகொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். அதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்றபோதிலும், 108 எம்பெருமான்களில் யாரை திருமணம் செய்ய விரும்புகிறாய்? என்று கேட்டார். அப்போது ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்து கூறினார். கடைசியில் ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்கு பிடித்து இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள்.

    ஆண்டாள் விருப்பப்படி அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்து சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார்.

    பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய் போனதை கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்து கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாளை ரங்கமன்னராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

    • 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும்.
    • இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது.

    ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்புகள் ஏராளம். பெரியாழ்வார் மட்டுமின்றி, ஆண்டாளும் ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். பெருமாள் மீது கொண்ட காதலால், அவர் நினைவாக பாடிய 30 பாடல்கள், திருப்பாவையாக மிளிர்கின்றன. ஆண்டாளுக்கு 'கோதை', 'நாச்சியார்' என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. கோதை ஆண்டாள், 'தமிழையும் ஆண்டாள்' என்பது சொல் வழக்கு. ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களை, எந்த மொழியில் மொழிபெயர்த்து பாடினாலும் கேட்பவருக்கு தமிழில் பாடுவது போன்ற உணர்வு இருக்குமாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் விழா நடக்கும். மற்ற மாதங்களைவிட மார்கழியில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதத்தில் பகல் பத்து உற்சவமும், பின்னர் ராப்பத்து உற்சவமும் நடைபெறும். அதன் பிறகு 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும். பகல் பத்து உற்சவம் தொடங்கும் போது, ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளி, தான் வளர்ந்த வீட்டிற்கு வருவார். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அங்கு வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பெரியாழ்வார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வீட்டில் தயார் செய்து, பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிப்பார்கள்.

    திருப்பாவை பாடல்களை இயற்றிய ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவை பட்டு ஒன்றை ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர். அது அரக்கு நிறம் கொண்டது. இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், அதில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடல்கள் இருக்கும். இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது மார்கழி முதல் தேதியில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பல லட்ச ரூபாய் செலவில் பக்தர் ஒருவர் சமர்ப்பித்திருந்த, 30 திருப்பாவை பாடல்களுடன் அச்சிடப்பட்ட ஊதா நிற பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுப்புடவையில், ஆண்டாள் முழு உருவத்தையும் பட்டு நூல்களால் சேர்த்துள்ளனர்.

    இந்த பட்டுப்புடவையின் நீளம் 18 கெஜம். ஒரு கெஜம் என்பது கிட்டத்தட்ட 3 அடி ஆகும். மிக மெல்லிதாகவும், வேலைப்பாடுடனும் நெய்யப்பட்டு இருக்கும் இந்த புடவையானது, அப்படியே ஆண்டாள் விக்ரகத்துக்கு சாற்றப்பட்டு, அவர் எழுந்தருளும் போது, அவ்வளவு நீளமான பட்டுப்புடவையை எப்படி இவ்வளவு சிறிதாக மடித்து சாற்றினார்கள் என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.

    இந்தப்பட்டின் பெருமைகள் குறித்து ஆண்டாள் கோவில் ஸ்தாணிகம் ரமேஷ் கூறியதாவது:-

    ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தேதியில் திருப்பாவைப்பட்டு அணிவிக்கப்படும். இந்த புடவையில் 30 திருப்பாவை பாடல்களும், ஆண்டாள் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டு நூல்களால் இழைக்கப்பட்ட இந்தப் பட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆண்டாளுக்கு சாத்தப்படும். அதிகாலை அணிவிக்கப்படும் இந்தப் புடவையிலேயே, அன்றைய தினம் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சி அளிப்பாா்.

    திருப்பாவைப் பட்டில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளிப்பதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும், ஆண்டாளே வந்து பிறந்ததாக கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெண்கள் வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்றாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து ஆண்டாளை தரிசித்துச் செல்வார்கள். தற்போதும் அந்த ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டாள் வேடம் அணிந்து அழகு பார்ப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆண்டாள் வேடம் அணிந்து குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வருவர். மார்கழி மாதத்தில் ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் இன்றும் உள்ளது. பூமா தேவியாக பிறந்த ஆண்டாளின் கோவிலுக்கு, வாழ்நாளில் ஒரு முறையேனும் வந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புடவைக்கு சிறப்பு பூஜை

    ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டாளுக்கு அணியப்படும் பட்டுபுடவையை மற்ற நாட்களில் பீரோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். மார்கழி மாதம் அன்று அந்த புடவையை பீரோவில் இருந்து எடுப்பர். பின்னா் அந்த புடவையை ஆண்டாள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்வர். ஆண்டாளுக்கு பிடித்த பழங்கள், பொருட்கள் ஆகியவை இந்த பூஜையின் போது இருக்கும். சிறப்பு பூஜை முடிந்த பிறகு திருப்பாவை பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படும்.

    • தன் விருப்பப்படியே திருமாலை கணவராக மணம்புரிந்தார் ஆண்டாள்.
    • ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளன.

    மார்கழி மாதத்தில் பெண்கள் திருப்பாவை படிக்க வேண்டும். ஆண்டாள் பாடிய பாடல் என்பதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடலாக இருப்பதால் திருப்பாவை எனப் பெயர் பெற்றன. திருமாலை மணம் புரிய வேண்டும். தன் விருப்பப்படியே திருமாலை கணவராக மணம்புரிந்தார் ஆண்டாள்.

    திருமாலைத் தவிர வேறு எவரையும் மணவாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளன. திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்ட நோக்கத்தை எடுத்துரைப்பது முதல் பாடல். 2 முதல் 5 வரை உள்ள பாடல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணரின் சிறப்பைக் கூறும் பாடலாக அமைந்துள்ளன.

    6 முதல் 15 வரை துதிப்பாடல்கள் பெண் தோழர்களை கற்பனை செய்து ஆழ்வார்களுக்கு ஒப்பாக கொண்டு அவர்களை எழுப்பி நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை பற்றி எடுத்துரைக்கும்.

    16 முதல் 30 வரையில் உள்ள பாடல்கள் வெண்ணை உண்ட கிருஷ்ணனை உருகி பாடப்படும். உன்னையே கணவனாக எண்ணி கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாடப்பட்டது.

    இத்தனை பெருமையை கொண்ட ஆண்டாளை மனமுருகி வேண்டி பாட வேண்டும். ஆண்டாள் மகாலட்சுமி, பூமாதேவி அவதாரம் என்பதால் பொறுமைக் குணம் வாழ்ந்தவர். அறிந்து அறியாமல் செய்த தவறுகளை உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்க மனமிரங்கி அருள்புரிவாள்.

    ×