search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் கொலை"

    • சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணக்குமார் (வயது 29). கோவையில் உள்ள கண்ணாடி கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார்.

    நேற்று மதியம் தத்தனேரி பகுதியில் இருந்து வைகை வடகரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சரவணக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், காரில் வந்த ஒரு கும்பல் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து கிடந்த சரவணக்குமாரை, காரில் வந்த 5 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சரவணக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சரவணக்குமாரை பிரிந்து சென்ற அவரது மனைவி பரத் என்பவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார். இது மனைவி குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணக்குமாரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. குழந்தையை கேட்ட விவகாரத்தில் அவரது மனைவி குடும்பத்தினர் சரவணக்குமாரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பரத் மற்றும் வல்லரசு உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரவணக்குமார் கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அலங்காநல்லூர் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா(24). ரவி கடந்த ஒரு வருடமாக கோவில்பாப்பாக்குடியில் வசித்து வந்தார். அவர் அங்கு சிலருடன் நட்பாக பழகி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ரவி கோவில்பாப்பாக்குடி பகுதியில் இருந்தபோது ஒரு கும்பல் வந்தது.

    அவர்கள் ரவியிடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், மருதமுத்து ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி னர்.

    எதற்காக ரவி கொலை செய்யப்பட்டார்? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார்?யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்ேடா டிரைவர் ரவியை கொலை செய்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரவியை அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.
    • தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா புகார் அளித்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே தென்கலம் கிராமம் அருகே உள்ள குளத்தின் கரைக்கு அருகே கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது.

    இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

    கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா(வயது 35) புகார் அளித்திருந்தார். இதனால் எரித்துக்கொல்லப்பட்ட நபர் ராஜா தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அவரது மனைவி வினிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வினிதாவுடன் திருமணமாகி உள்ளது. ராஜா சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அங்கு தொழில் சரியாக இல்லாததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்துக்கு வந்துவிட்டார்.

    அங்கு கயத்தாறு அருகே உள்ள வலசல் பகுதியை சேர்ந்த தர்மராஜா(25) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ராஜாவின் லாரியில் தர்மராஜா கிளீனராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தர்மராஜா அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்றுவந்துள்ளார்.

    அப்போது அவருக்கு ராஜாவின் மனைவி வினிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ராஜா இல்லாத நேரத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா அவர்களை கண்டித்துள்ளார்.

    ஆனாலும் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த தர்மராஜா, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜா, அதனைப்பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    அப்போது ராஜாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தர்மராஜா ஆத்திரம் அடைந்து ராஜாவை கொலை செய்தார். பின்னர் வினிதாவின் உதவியுடன் ராஜா உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி, மானூர் குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு வைத்து ராஜாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வினிதாவும், தர்மராஜாவும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல வினிதா தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சபாபதி இந்த வழக்கில் வினிதா, தர்மராஜா ஆகியோரை கைது செய்தார்.

    • கடந்த 6 மாதத்திற்கு முன்பு முருகன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பாண்டியன் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 33). பஸ் டிரைவர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு முருகன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.

    பின்னர் கடந்த 23-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று காலை 7 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தைலம் தோப்பில் நின்று கொண்டிருந்தார்.

    அங்கு மறைந்திருந்த சிறுமியின் உறவினர்கள் முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகனை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்யார் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்து தலைமறைவாக இருந்த சிறுமியின் உறவினர்கள் தணிகை மலை (வயது 45), வேல்முருகன் (26), தேவிகா (40), சுரேஷ் (21), விக்னேஷ் (19) ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் மனவேதனை அடைந்து கடந்த 6 மாதங்களாக ஆத்திரத்தில் இருந்ததாகவும், ஜாமினில் வெளியே வந்த முருகனை நோட்டமிட்டு வெட்டி கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    • பிரசாந்த் உள்பட 5 பேரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு கால்டாக்சியை பதிவு செய்து உள்ளனர்.
    • கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த வல்லம் அருகே மேலமையூர் கோவில் ஆர்ச் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையுண்டது சென்னை, சோழிங்கநல்லூர், கழனி பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் அர்ஜூன் (வயது 30) என்பது தெரிந்தது.

    விசாரணையில் கோயம்பேட்டில் தங்கி தொழிலாளி களாக வேலைபார்த்து வந்த பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி, கத்திமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 2 பேர் சேர்ந்து கால்டாக்சி டிரைவர் அர்ஜூனை கொலைசெய்துவிட்டு காரை கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து பிரசாந்த், திருமூர்த்தி, கத்திமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 25-ந்தேதி இரவு பிரசாந்த் உள்பட 5 பேரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு கால்டாக்சியை பதிவு செய்து உள்ளனர். காரில் சென்றபோது டிரைவர் அர்ஜூன் சந்தேகம் அடைந்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வல்லம் அருகே சாலை ஓரத்தில் வீசிவிட்டு காரை கடத்தி தப்பி சென்றுள்ளனர்.

    பின்னர் போலீசில் சிக்கி கொள்வோம் என்று பயந்து கொலையாளிகள் காரை மேல்மருவத்தூர்- அச்சரப்பாக்கம் இடையே விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையுண்ட அர்ஜூனுக்கு ஜோதிகா என்ற மனைவியும், 3 மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளனர்.

    இதற்கிடையே அர்ஜூன் கொலையை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க கோரியும் இன்று மதியம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கால்டாக்சி டிரைவர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×