search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள்"

    • நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பெண்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன், நகரமைப்பு வளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் துவங்கியவுடன் நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில்:-

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி தனது வார்டில் உள்ள சித்திவிநாயகர் கோவில் தெருவில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய பொதுமக்கள் பங்களிப்பாக 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    உறுப்பினர் ராணி குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம் ஜி ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகள் உள்ளன.

    அதன் பின்புறம் 2 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது இந்த கடையை மாற்றவேண்டும் வலியுறுத்தினார்.

    உறுப்பினர் ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேதாஜி சவுக் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்ற வேண்டும் ஒரு வழி பாதையாக உள்ள அங்கு டாஸ்மாக்கடை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள் பலர் எழுந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே காலை முதலே மது விற்பனை செய்கிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இந்த டாஸ்மாக் கடை விற்பனை தவிர மற்ற நேரங்களிலும் அங்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது, குடியாத்தம் நகரில் அதிகளவு கஞ்சா விற்பனை உள்ளது இதனையும் நகர போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

    உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது நானும் உடன் சென்றிருந்தேன் அப்போதே இரண்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது இருப்பினும் அந்த மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க வேண்டும் இறைச்சி கழிவுகளை எக்காரணம் கொண்டு பொதுவெளியில் கால்வாயிலோ கொட்ட அனுமதிக்க கூடாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் கூறிய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • மதுபானம் சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் நாளை (ஞாயிற்றுகிழமை) மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்றைய தினங்களில் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தன.

    • தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.
    • நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தில் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உள்பட ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுகிறது.

    நாளை (26-ந்தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளை சரக்கு கிடைக்காது என்பதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் பணியில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.

    இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் இன்று குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது. எல்லோருமே நாளைக்கும் இருப்பு வைக்கும் வகையில் பாட்டில் பாட்டிலாக வாங்கிச் சென்றனர்.

    இன்று கடை திறந்தவுடனேயே பெரும் அளவில் படையெடுத்து வந்து மது பாட்டில்களை வாங்கினார்கள்.

    தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.

    • டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடப்படுகிறது.
    • மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.
    • பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்கள் கடந்த 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் மதுக்கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள் பார்களில் அமர்ந்து மது அருந்த முடியாத சூழல் இருந்து வருகிறது.

    இதனால் ரோட்டோரங்களில் அமர்ந்தே சென்னை குடிமகன்கள் மது குடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி பார்களுக்கான உரிமத்தை வழங்கக்கோரி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயலாளர், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

    சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

    இந்த மாத இறுதிக்குள் பார்களுக்கான உரிமத்தை வழங்காவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 900 மதுக்கடைகளையும் பூட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.
    • வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது.

    டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

    தற்போது தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 7 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1 ஒயின் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. அதாவது 15 வடிப்பாலைகள் தனியார் துறையில் உள்ளன. 2 வடிப்பாலைகள் கூட்டு துறையிலும் உள்ளன.

    இந்த ஆலைகள் மது உற்பத்தி செய்வதற்கு பயன்படும் மூலப்பொருளான சாராவியை உற்பத்தி செய்கின்றன.

    இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களில் உயர்தர மதுபான வகைகளை தயாரிப்பதற்கு தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி பயன்படுத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    2021-2022-ம் ஆண்டில் 8.26 கோடி லிட்டர் தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் உரிய சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர், பிற நாடுகளில் இருந்து அயல்நாட்டு மதுபான வகைகளை இறக்குமதி செய்வதற்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரால் அனுமதி ஆணைகள் வழங்கப்படுகிறது.

    துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் சாராவி மற்றும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம்-பீர்-ஒயின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும், அவற்றை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துவதை தடுக்கவும் ஆயத்தீர்வை விதிக்கப்பட வேண்டிய பொருட்களுக்கு ஆயத்தீர்வை விதிப்பதை கண்காணிக்கவும், இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    தொழிற்சாலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனத்துக்கு பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு கடைகளுக்கும் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வருகிறது.

    இந்த மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.

    2003-04-ம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், 2005-06-ம் ஆண்டில் ரூ.6,030.77 கோடியும், 2006-07-ம் ஆண்டில் ரூ.7,473.61 கோடியும், 2007-08-ம் ஆண்டில் ரூ.8,821.16 கோடியும், 2008-09-ம் ஆண்டில் ரூ.10,601.50 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

    இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்தது.

    கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

    இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தற்போது 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின் பிரிவின் கீழ் பிற மாநிலங்களில் இருந்தும் மற்றும் இந்தியாவின் சுங்க எல்லையைக் கடந்தும் தமிழ்நாடு மாநிலத்திற்குள் கொண்டு வரப்படும் ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அனைத்து பொருட்கள் அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றின் மீது புருப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.450 ரூபாய்க்கு மிகாத அளவில், அரசால் அவ்வப்போது அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கக் கூடியவாறான விதத்தில் சிறப்புக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    சிறப்பு கட்டணத்தின் அதிகபட்ச வீதமானது, அரசினால் 2014-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டது. அதன் பின்பு சிறப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அத்தகைய அனைத்து பொருட்களின் மீதும் விதிக்கக்கூடிய சிறப்பு கட்டணத்தின் அதிகபட்ச வீதமானது புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.450-லிருந்து 1000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதற்கிணங்க, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு அவசர சட்டமானது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு அது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதியிட்ட தமிழக அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளதால் கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

    முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

    • மதுரை மண்டலத்தில், கடந்த 2020-ம் ஆண்டு 303 கடைகளும், 2021-ம் ஆண்டு 246 கடைகளும், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 164 கடைகளும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளன.
    • டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதி பெறாத சட்டவிரோத கடைகள் எதுவும் இயங்கவில்லை.

    மதுரை:

    மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரியிடம், சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளது.

    அதில் மதுரை மண்டலத்தில், கடந்த 2020-ம் ஆண்டு 303 கடைகளும், 2021-ம் ஆண்டு 246 கடைகளும், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 164 கடைகளும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளன. டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதி பெறாத சட்டவிரோத கடைகள் எதுவும் இயங்கவில்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்று நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் எண்ணிக்கை, ஒரு கடையை மட்டும் பார்க்கும் சூப்பர்வைசர், 2 கடைகளை பார்க்கும் சூப்பர்வைசர் எண்ணிக்கை, சூப்பர்வைசர் இல்லாமல் காலியாக உள்ள கடைகள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை தர இயலாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.
    • பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான் கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்நிலையில், பார்களுக்கான உரிமம் தொடர்பான டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் எனவும், யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

    • டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து குடிமகன்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து பார்களும் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில் வாங்குபவர்கள் இந்த பார்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இதற்கிடையே இந்த பார்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பார்களை நடத்துவதற்கு அரசு சமீபத்தில் டெண்டர் கோரியது.

    ஆனால் இந்த டெண்டர் செயல்முறை வெளிப்படையானதாக இல்லை என்பதால் டெண்டர் முடிவை அறிவிக்க சென்னை ஐகோர்ட்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை தடை விதித்திருந்தது. இதையடுத்து டாஸ்மாக் பார்களுக்கு இதுவரை டெண்டர் விடப்படவில்லை.

    டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து குடிமகன்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் பார் சங்க தலைவர் அன்பரசன் கூறுகையில், 'டாஸ்மாக் முடிவு குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். இனி பார்களை திறக்க கூடாது என்று எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் பார்களை திறக்க தயாரானோம்.

    டெண்டர் முடிவடையும் வரை பார்களை திறக்க அனுமதிக்கலாம். அதற்கான மாத தவணையை எங்கள் வைப்புத்தொகையில் இருந்து கழித்துக்கொள்ளலாம். இது டாஸ்மாக் அதிகாரிகள் சட்டவிரோதமாக பார்களை நடத்த வழி வகுக்கும்' என்றார்.

    • சென்னை உள்பட 8 மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களில் டாஸ்மாக் ஏலம் நடத்தப்பட்டது.
    • மொத்தம் உள்ள 3,220 பார்களில், 20 சதவீதம் அளவுக்கே அப்போது ஏலம் விடப்பட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் டாஸ்மாக் பார்கள் ஏலத்தில் விடப்பட்டன.

    சென்னை உள்பட 8 மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களில் டாஸ்மாக் ஏலம் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 3,220 பார்களில், 20 சதவீதம் அளவுக்கே அப்போது ஏலம் விடப்பட்டது.

    முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மற்ற பார்களுக்கு ஏலம் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் மீதம் உள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் பார்களுக்கு வருகிற 18-ந்தேதி ஏலம் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்களின் ஏலமும் அன்றைய தினமே நடைபெறுகிறது.

    இந்த நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அன்பரசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் எழும்பூரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில், 30 மாவட்டங்களில் 80 சதவீத பார்களின் ஏலம் உறுதி செய்யப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே இனி நடைபெற உள்ள பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அரசியல் தலையீட்டால் பார் டெண்டரில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக அறிகிறோம். அதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
    • ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப் புள்ளியின் காலம் டிசம்பர் 2023 முடிய உள்ள காலம் வரை இருத்தல் வேண்டும்.

    சென்னை:

    டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் 38 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    30 மாவட்டங்களுக்கு மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு செய்ய வேண்டி அறிவுறுத்தப்பட்டு, முறையே இரண்டு வரு டங்களுக்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மதுக்கூடங்கள் மூடப்பட்ட நிலையிலும் மற்றும் மதுக்கூட இடவசதி இருந்தும், டெண்டர் பெறப்படாமல் உள்ள மதுக்கூடங்கள் தற்போது செயல்படாமல் உள்ள நிலையில் உள்ளது என மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப் புள்ளியின் காலம் டிசம்பர் 2023 முடிய உள்ள காலம் வரை இருத்தல் வேண்டும்.

    மேலும் மதுக்கூட ஒப்பந்தம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள் அதாவது சென்னை வடக்கு, தெற்கு, மத்திய, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, கிருஷ்ணகிரி மற்றும் அரக்கோணம் போன்ற மாவட்டங்களுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்திடவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன், டாஸ்மாக் பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    டாஸ்மாக் பார் ஏலத்தில் கடந்த முறை பல்வேறு தடைகள், குறுக்கீடுகள் இருந்தன. இதனால் டெண்டர் முறைப்படி நடத்தவில்லை. பல இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் கூட பார் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் எந்தவித முறைகேடும் இன்றி வெளிப்படையான முறையில் ஏலத்தை நடத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு முறைகேடு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு பார் உரிமையாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலையீடு இல்லாமல் ஏலத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள மகேஸ்வரி நகர், புவனேஸ்வரி நகர், சுப்பிரமணி காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "புதிதாக திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டும் பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

    இதையெல்லாம் மீறி டாஸ்டாக் கடையை திறக்க சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

    பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேளச்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களும், டாஸ்மாக் கடைய திறந்தால் பாதிக்கப்படுபவார்கள் என்றும் எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×