search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி வரி"

    • ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையை விட 28 சதவீதம் அதிகமாகும்.

    புதுடெல்லி:

    நடப்பாண்டு மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.41 லட்சம் கோடியாகவும். ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடியாகவும் இருந்தது.

    இந்தநிலையில் ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையை விட 28 சதவீதம் அதிகமாகும்.

    • ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் 180 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் 180 இடங்களில் நடந்தது.

    சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வேலையின்மை, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, அண்ணாசாலையை முற்றுகையிட முயன்றனர். முன்னெச்சரிக்கையாக போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். இதையும் மீறி சாலையில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200- க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றி சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    • இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்திய பொருளாதார உயர்ந்து வருகிறது.
    • பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

    திருப்பதி:

    இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்திய பொருளாதார உயர்ந்து வருகிறது. இதனால் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவை அடுத்து 2-வது இடத்திற்கு இந்திய முன்னேறி செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் செல்வங்களை கொள்ளையடித்து சென்றனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு வணிகம் நசுக்கப்பட்டது.

    மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர்களுடைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்ற பிறகு 1947 ஆம் ஆண்டு நேரு பிரதமராக பதவியேற்ற பின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பசுமை புரட்சி கொண்டு வரப்பட்டன. 2-வது ஐந்தாண்டு திட்டத்தில் தொழிற்சாலை உற்பத்தியும் 3-வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய மற்றும் தொழிற்சாலை உற்பத்தியும், 4-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிலையான பொருளாதார திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் 1950-ம் ஆண்டு பிளானிங் கமிட்டி உருவாக்கப்பட்டன.

    1990-92-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார ஏற்றம் காண பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது. பின்னர் 2015-ம்ஆண்டு ஜி.எஸ்.டி. வாட் உள்ளிட்ட வரிகள் விதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு திட்டம் கிடப்பில் இருந்தது.

    பின்னர் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் மாதத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா முன்னேறி வருகிறது 2-வது இடத்தில் இருந்த சீனா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.

    1947-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 36 கோடியாக இருந்தது தற்போது 141 கோடியாக உள்ளது. விவசாய உற்பத்தி 52 சதவீதத்திலிருந்து தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது.

    தொழில்துறை 15 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், சேவை துறை 33 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1947 இல் ஏற்றுமதி ரூ.60 கோடியில் இருந்து தற்போது ரூ.33 லட்சத்து 76 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது.

    இறக்குமதி ரூ.612 கோடியில் இருந்து ரூ.4,80,800 கோடியாக உள்ளது. ரூ.382 கோடி கடனாக இருந்தது. தற்போது ரூ.4 கோடியே 90 லட்சத்தி 60 ஆயிரம் கோடியாக உள்ளது. தற்போது 44 கோடி பேர் அரசு வேலையில் உள்ளனர்.

    • பால் மற்றும் பால் பொருட்கள் மீதான வரியையும் திரும்பப் பெற வேண்டும்.
    • அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

    பாராளுமன்ற மேல் சபையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரிசி, கோதுமை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது அவமானமாகும். இது பொருளாதாரத்தில் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும்.

    தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக, எண்ணெய் இறக்குமதி கட்டணம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன.

    எனவே, உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்து கிறேன். பால் மற்றும் பால் பொருட்கள் மீதான வரியையும் திரும்பப் பெற வேண்டும்.

    அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளையும் கண்காணித்து கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார்.
    • உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    சென்னை:

    தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில் செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந்நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45-வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

    1. வரி விகிதங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல்.

    2. தற்போதைய வரி விகிதங்களை மறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.

    இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்-மந்திரி ஒருங்கிணைப்பாளராகவும், பீகார், கோவா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இக்குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை. இக்குழு தனது பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.

    அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் இவை மீதான வரி விதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680/ஆ1 / 2021-இல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு எழுத்துப் பூர்வமாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியால் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

    2022 ஜூன் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் சண்டிகரில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தின் 47-வது கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

    இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்கு பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார்.

    உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கருத்தொற்றுமை முடிவின் படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை தொடர்ந்து விதித்து வருகிறது.
    • இதற்கு பொது மக்களும், வணிகர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு -தமிழக அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில நிர்வாகிகளோடு கலந்தாலோசித்த கூட்டத்தில் 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கும், இதர மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் மீதான வரி உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் வரி விதிப்பை கைவிட கோரியும், மாநில வேளாண் விளை பொருட்களுக்கான செஸ்வரி விதிப்பினை மறுபரிசீலனை செய்து திரும்பபெறக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 22-ந்தேதி (வெள்ளி) காலை 10.05 மணிக்கு நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய வணிகர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது.

    திட்டமிட்டு சில குழப்பமான செய்திகளை பதிவிட்டு, ஆர்ப்பாட்ட உணர்வினை நீர்த்துபோகச் செய்கின்ற செயலை ஒருசிலர் பரப்ப முற்படுகிறார்கள். பேரமைப்பை பொறுத்தவரை மக்கள் நலனிலும், வணிகர் நலனிலும் ஒருமித்த கருத்தோடு எப்போதும் போல் தனது உணர்வினை வெளிப்படுத்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு, பேரமைப்பைச் சார்ந்த வணிகர்கள் எந்தவித ஒற்றுமைச் சிதறலுக்கும் இடமளிக்காமல், கட்டுக்கோப்போடு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவும், நமது நோக்கத்தினை நிறைவேற்றிடவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள், சாமான்ய மக்கள் உட்பட அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.

    பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், காய்கறிகள், நாட்டுச் சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாருமாறாக உயரும் என்ற காரணத்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் குறிப்பாக தாய்மார்கள் இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    இந்த வரி விதிப்பினால், உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல, சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும், அதில் பணிபுரிபவர்களும் இந்த வரி விதிப்பினால் ஏற்படும் தொழில் பாதிப்பை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.

    ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும் இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு, விடியா திமுக அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை சிரமமின்றி நடத்திட தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் லயாலி குளோபல் குசின் ரெஸ்ட்டா ரண்டில் வணிகர்கள் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், பழைய பொருள் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல்செய்துள்ள அபி டெவிட்படி தடுப்பூசி, முகக்கவசம் போன்றவை கட்டாயம் அல்ல என்பதால், மாநில அரசு மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அபராதம், தண்டனை போன்றவற்றை நீக்கி விழிப்புணர்வை அதிகப்படுத்தி வணிகர்கள் தங்கள் வணிகத்தை சிரமமின்றி நடத்திட தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியது.

    கூட்டத்தின் முடிவில் பெறப்பட்ட ஆலோசனையின்படி, செஸ்வரி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைகளைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்துவது எனவும், ஜி.எஸ்.டி வரி சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படாவிட்டால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ட அறிவிப்பு தேதி வெளியிடப்படும் என முடி வெடுக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி பிரச்சினைக்கு தீர்வுகள் காணப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
    • மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை.

    சண்டிகர்:

    47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் 2 ஆம் நாளான இன்று பல்வேறு பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    மேலும், அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

    அதேசமயம், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை.

    அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில வாட் வரியையும் சேர்த்து பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
    புதுடெல்லி:

    தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மிக, மிக அதிக அளவில் வரிகள் விதிப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.48-ம் ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.15.33-ம் மத்திய அரசால் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. இது தவிர பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகளும் வாட் வரியை விதிக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பாதி அளவு மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிக அளவில் உயர்ந்தன. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் இது பற்றி ஆய்வு செய்தது. அப்போது கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்தது. அதாவது கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தால் கூட அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய அரசின் வரியை குறைப்பது போல மாநில அரசுகளும் வரியை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகைய நடைமுறையால் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவு குறையாது என்று கூறப்படுகிறது.

    மத்திய-மாநில அரசுகளின் தற்போதைய வரி விதிப்பும், பரிசீலிக்கப்பட்டு வரும் வரி விதிப்பும் பெரிய அளவில் வித்தியாசமாக இல்லை. எனவே பெட்ரோல், டீசல் விலையை எப்படி குறைப்பது என்று தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

    உலகில் எந்த நாட்டிலும், பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் இல்லை. ஆகையால் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் அவை வரும்பட்சத்தில் ஏற்படும் சாதக-பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
    ×