search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில வாட் வரி சேர்த்து பெட்ரோல், டீசல் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி- மத்திய அரசு பரிசீலினை
    X

    மாநில வாட் வரி சேர்த்து பெட்ரோல், டீசல் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி- மத்திய அரசு பரிசீலினை

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில வாட் வரியையும் சேர்த்து பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
    புதுடெல்லி:

    தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மிக, மிக அதிக அளவில் வரிகள் விதிப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.48-ம் ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.15.33-ம் மத்திய அரசால் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. இது தவிர பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகளும் வாட் வரியை விதிக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பாதி அளவு மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிக அளவில் உயர்ந்தன. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் இது பற்றி ஆய்வு செய்தது. அப்போது கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்தது. அதாவது கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தால் கூட அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய அரசின் வரியை குறைப்பது போல மாநில அரசுகளும் வரியை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகைய நடைமுறையால் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவு குறையாது என்று கூறப்படுகிறது.

    மத்திய-மாநில அரசுகளின் தற்போதைய வரி விதிப்பும், பரிசீலிக்கப்பட்டு வரும் வரி விதிப்பும் பெரிய அளவில் வித்தியாசமாக இல்லை. எனவே பெட்ரோல், டீசல் விலையை எப்படி குறைப்பது என்று தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

    உலகில் எந்த நாட்டிலும், பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் இல்லை. ஆகையால் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் அவை வரும்பட்சத்தில் ஏற்படும் சாதக-பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×