search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் போட்டி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேரு ஸ்டேடியத்தில் செஸ் போட்டி தொடக்க விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையை பார்வையிட்ட முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
    • மேடையில் ஆங்காங்கே செஸ் காய்கள் இருக்கும்படி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

    இதில் பங்கேற்க 187-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்-வீராங்கனைகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

    இவர்கள் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளனர். இவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி தொடக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

    நேரு ஸ்டேடியத்தில் செஸ் போட்டி தொடக்க விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையை பார்வையிட்ட முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். மேடையில் ஆங்காங்கே செஸ் காய்கள் இருக்கும்படி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.

    நேரு உள் விளையாட்டு அரங்கின் நுழைவு வாயிலில் செஸ் காய்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளையும் ஒலிம்பியாட் போட்டி சின்னமான தம்பி உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.

    விழா ஏற்பாடு பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    • செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர்.
    • சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில் தங்கி உள்ளனர்.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நாளை துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

    இது தவிர செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர்.

    இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில் தங்கி உள்ளனர். விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள அனைத்து ஓட்டல்களும், இவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதற்காக மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா நட்பு வாகனம் என்ற பெயரில் 25 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார்.

    வெளிநாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும்போது அதிக கட்டணம் கேட்கக்கூடாது என்றும், இன்முகத்துடன் சரியான கட்டணம் வாங்க வேண்டும் என்றும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 10 சொகுசு பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

    மாமல்லபுரத்தில் இருந்து 5 பஸ்களும், அடையாறில் இருந்து 5 பஸ்களும் அவ்வப்போது சென்று வரும். இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.விளையாட்டு வீரர்கள் வசதிக்காக சுற்றுலா தலங்களில் பஸ்கள் நின்று செல்லவும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் மீது அந்த நாடு போர் தொடுத்ததால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற முடிவு செய்தனர்.

    எந்த நாட்டில் நடத்தலாம் என்று ஆய்வுகள் நடந்த போது செஸ் ஆட்டத்தின் தாயகமாக கருதப்படும் தமிழகத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி தெரிவித்ததும் அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்து உள்ள மாமல்லபுரத்தில் நடத்தலாம் என்று உறுதி அளித்தார். இந்த போட்டிக்காக உடனடியாக அவர் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உற்சாக மூட்டினார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் 15 துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பூஞ்சேரி பகுதியே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    நாளை (28-ந் தேதி) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அணிகளை 187 நாடுகளும் அறிவித்து விட்டன. அவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னைக்கு வர தொடங்கி உள்ளனர். நேற்று மட்டும் 256 வீரர்கள், வீராங்கனைகள் சென்னை வந்தனர்.

    இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷியா, பாலஸ்தீனம், அங்கோலா, தான்சானியா, ஜிம்பாப்வே, நைஜிரியா, ஜெர்மனி, ஸ்வீடன், பாகிஸ்தான், அங்கேரி, டென்மார்க், கயானா, கேமன் தீவுகள், மங்கோலியா, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, சீன தைபே, பிரேசில், அமெரிக்கா, தென் கொரியா, கொலம்பியா, பொலிவியா, கேமரூன் உள்பட பல்வேறு நாட்டு வீரர்கள் சென்னை வந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் துருக்கி, சவுதி அரேபியா, பாலஸ்தீனம், கிரீஸ், உருகுவே, மாண்டினீக்ரோ, ஜார்ஜியா, அஜர்பைஜான், ஈரான், சூடான், இத்தாலி, இஸ்ரேல், எகிப்து, பெல்ஜியம், ஜெர்சி, லாட்வியா, கயானா, ஜமைக்கா, அமெரிக்கா, சைவ்ரஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பஹாமாஸ், வியட்நாம், ஜப்பான், ஹாங்காங், குவாம் ஆகிய நாடுகளை சேர்ந்த 321 வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்.

    இன்று காலை 6.35 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பாலஸ்தீனம், போலந்து, ருமேனியா, பிரேசில், இலங்கை, உக்ரைன், சுவிட்சர்லாந்து, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கான்மரினோ, ரஷியா, பராகுவே, பனாமா, நார்வே, நெதர்லாந்து, மொனாக்கோ, சிலி, போட்ஸ்வானா, அர்ஜென்டினா, அல்பேனியா, டோகோ, தான்சானியா, அங்கோலா, சவுதி அரேபியா, ஓமன், குவைத் ஆகிய நாடுகளை சேர்ந்த 255 வீரர்கள் சென்னை வந்தனர்.

    இன்று மாலை புருனே, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வேல்ஸ், சீஷெல்ஸ், ஹங்கேரி, பரோயே தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, பஹாமாஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 169 வீரர்கள் வர உள்ளனர்.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வெனிசுலா, கியூபா, செயிண்ட் லூசியா, மங்கோலியா, பார்படாஸ், லிதுவேனியா, வடக்கு மாசிடோனியா, மொரீஷியஸ், ஜிம்பாப்வே, ருவாண்டா, செனகல், பார்படாஸ், டொமினிகா, மெக்சிகோ, கரினாம், மலாவி, லிபெரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 240 வீரர்கள் வந்தனர்.

    இன்று இரவு நேபாளம், கானா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் டொபாகோ, செயிண்ட் வின்சென்ட், பூட்டான் ஆகிய நாடுகளை சேர்ந்த 60 வீரர்கள் வர உள்ளனர். மொத்தத்தில் இன்று மட்டும் 1,045 செஸ் வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வீரர்களும் தங்குவதற்கு நட்சத்திர வசதி கொண்ட இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயணத்துக்காக சொகுசு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர்களை உபசரிக்கவும் தனிக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு மாநில அமைச்சர்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்கவும், உணவுகளை பரிசோதித்து விட்டு பரிமாறவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாளை மாலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க விழாவுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் சென்னை புறப்பட்டு வருகிறார்.

    சென்னை விமான நிலையத்துக்கு 4.40 மணிக்கு அவர் வந்து சேருகிறார். அங்குள்ள ஓய்வு அறையில் சுமார் 50 நிமிடங்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் 5.45 மணிக்கு ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து தொடக்க விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார்.

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மதியம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சுமார் 800 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான கலைஞர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். 5.45 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இதன்பிறகு 75 முக்கிய நகரங்களை கடந்து வந்துள்ள ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்படும். இதையடுத்து பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைப்பார்.

    பிரதமர் மோடியுடன் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், 187 நாட்டு செஸ் வீரர்கள் பங்கேற்க இருப்பதால் நேரு ஸ்டேடியம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு அமைத்துள்ளனர். டிரோன்கள், பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளை மதியம் முதல் இரவு வரை நேரு ஸ்டேடியம் பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டுள்ளது. நேரு ஸ்டேடியம் தவிர பிரதமர் செல்லும் வழிகள், செஸ் வீரர்கள் தங்கி உள்ள ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் அவர்கள் செல்ல இருக்கும் கடற்கரை பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது
    • உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது சென்னை திகழ்கிறது.

    உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கிறார். அவர் தலைமையிலான நார்வே அணி 3-வது தரவரிசையில் இருக்கிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது. வியக்கத்தக்க வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் இரண்டு அணிகளும் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது தமிழ்நாடு அல்லது சென்னை திகழ்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம். இதனால் தான் நானும் இங்கு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது.
    • 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார்.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

    அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி (31 வயது) நிரைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார். உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ளார். ஹரிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது 9 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டம் வெற்றார். தனது 10-வது வயதிலும் ஹரிகா மீண்டும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பதக்கத்தையும் வென்றார்.

    செஸ் உலகின் வெற்றிநடைபோட்டு வரும் ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார். இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக 2019-ல் ஹரிகாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஹரிகா மனதளவிலும், உடலளவிலும் தயாராகி வருகிறார். ஹரிகா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்காக மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது. செஸ் விளையாட்டை பொறுத்தவரை நீண்ட நேரம் அமர்ந்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடம் அருகே 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது.
    • மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தினமும் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. 29-ந்தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் தொடங்குகின்றன.

    இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 187 வெளிநாடுகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்டமான அரங்கம் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் வருகை தந்துள்ளதால் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 14 நாட்கள் தொடர்ச்சியாக செஸ் போட்டிகள் நடைபெறுவதையொட்டி சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மத்திய போலீஸ் படையுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணிக்காக திருவாரூர், தஞ்சை, சேலம், நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காவலர்கள் தங்குவதற்கு வசதியாக 20 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடம் அருகே 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தற்காலிக கழிவறைகளும், 10 நடமாடும் கழிவறை வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தங்கும் சொகுசு விடுதிகளை சுற்றி வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தினமும் சோதனை நடைபெற்று வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை உள்ளூர் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அடுத்த 2 வாரங்களும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    • திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவில் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சனி, ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (28-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியை பொதுமக்கள் டிக்கெட் பெற்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவில் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். வார இறுதி நாட்களில் போட்டியை காண செல்ல வாய்ப்பு இருப்பதால் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டு வருகிறோம்.

    பொதுமக்கள் பயன்பாட்டை பொறுத்து தான் பஸ் சேவையை அதிகரிக்க முடியும். தற்போது மாமல்லபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் ஆய்வு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் மாமல்லபுரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர வீரர்களுக்கு தனியார் ஆபரேட்டர்கள் மூலம் பஸ்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

    • செஸ் விளையாட்டில் உள்ள ராஜா, சோல்ட்ஜரை வெட்டி விளையாடும் வகையில் மற்றொரு மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர்.
    • மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகள் கலந்து கொள்வதை வித்தியாசமான கோணத்தில் உணர்த்தும் வகையில் உலோக சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு படிக்கும் 3 மாணவர்கள் தங்கள் செய்முறை கூட வகுப்பறையில் உலக உருண்டை வடிவில் செஸ் போர்டு மெழுகு சிற்பம் வடித்து அசத்தி உள்ளனர்.

    மெழுகில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வரும் இதில் உலக உருண்டை மீது செஸ் போர்டு மற்றும் காய்கள் உள்ளது போல் இந்த மெழுகு சிற்பத்தை மாணவர்கள் மெழுகினை உருக்கி செய்து வருகின்றனர்.

    அதேபோல் செஸ் விளையாட்டில் உள்ள ராஜா, சோல்ட்ஜரை வெட்டி விளையாடும் வகையில் மற்றொரு மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர். மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம் பகுதியில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் இந்த செஸ் விழிப்புணர்வு மெழுகு சிற்பம் மற்றும் மரச்சிற்பத்தினை வடிவமைத்து வருவதாக இந்த கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ‘ஸ்விஸ்’ விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும்.
    • வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி வழங்கப்படும். தோல்விக்கு புள்ளி கிடையாது.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * 'ஸ்விஸ்' விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.

    * ஒவ்வொரு ஆட்டத்திற்கான அணியில் மொத்தம் 5 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒருவர் மாற்று வீரராக (ரிசர்வ்) இருப்பார். அணியின் கேப்டன் ஆடும் வீரராக இருக்க வேண்டும்.

    * முதல், 2-வது, 3-வது, 4-வது செஸ் போர்டுகளில் யார்-யார் ஆடுவார்கள் ? என்பதை அணி நிர்வாகம் வரிசைப்படுத்தி முன்கூட்டியே எழுதி கொடுத்து விட வேண்டும். கடைசி நேரத்தில் வரிசையை மாற்ற முடியாது.

    * ஆட்டத்தில் முதல் போர்டில் ஆடும் வீரருக்கு ஓய்வு கொடுத்தால், 2-வது வரிசை வீரர் முதல் போர்டில் ஆடுவார். அந்த மாதிரியான சூழலில் மாற்று வீரர் 4-வது போர்டில் தான் விளையாட முடியும். எந்த காரணத்தை கொண்டும் மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் ஆட வைக்கப்படமாட்டார்.

    * வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி வழங்கப்படும். தோல்விக்கு புள்ளி கிடையாது. 4 வீரர்கள் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதுடன், அந்த அணிக்கு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும். ஆட்டம் 2-2, 1½-1½ என்ற வீதம் டிராவில் முடிந்தால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.

    * ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக்கொண்டே போகும்.

    * 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக் கொள்ள முடியாது.

    11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளி குவித்துள்ள அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். ஒருவேளை இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால் ஆட்டங்களில் அதிக வெற்றி மற்றும் தங்களிடம் வீழ்ந்த அணிகளின் வலிமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெறும் அணிக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படும்.

    இது தவிர டாப்-3 தனிநபருக்கும் பதக்கங்கள் உண்டு. இதற்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இந்த பதக்கத்தை பெற ஒரு வீரர் குறைந்தது 8 ஆட்டங்களில் ஆட வேண்டியது அவசியமாகும்.

    • சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
    • பாளை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அந்த ஜோதி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்டம் தோறும் உள்ள பொதுமக்களுக்கு இந்த நிகழ்ச்சி குறித்து கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு சதுரங்க போட்டிகள் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டத்திலும் கலெக்டர் விஷ்ணு ஏற்பாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம் பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு மதுரையில் இருந்து ஜோதியை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் தலைமையில் அதிகாரிகள் எடுத்து வந்தனர்.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அந்த ஜோதி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை செஸ் போட்டி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விளையாடினர்.

    தொடர்ந்து இன்று காலை கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு செஸ் போட்டி விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார்.

    பின்னர் தொடர் ஜோதி ஓட்ட பேரணியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து கலர் வண்ண விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டார். இந்த பேரணியானது வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி நெல்லை மருத்துவக்கல்லூரி வழியாக அண்ணா விளையாட்டரங்கம் வந்து நாங்குநேரி, வள்ளியூர் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர், ஒருங்கிணைப்பாளர்கள், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
    • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    சென்னை:

    மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    எனவே வருகிற 28-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அன்று அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பணி நாளாக இயங்கும் என்று அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    • பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • முதலிடம் பிடித்த இந்த மாணவ-மாணவிகள் 4 பேரும், இன்று காலை 44-வது செஸ் ஒலிம்பியாட் நடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சித்தோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி தலைமை தாங்கினார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.

    மாணவிகளில் 9, 10-ம் வகுப்பு பிரிவில் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைபள்ளி மாணவி மகதி, பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு பிரிவில் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவி சந்தியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    மாணவர்களில் 9,10ம் வகுப்பு பிரிவில் ஈரோடு இடையன்காட்டு வலசு அரசு மேல்நிலை பள்ளி மாணவன் எஸ்.விக்னேஸ்வரன், பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்பு பிரிவில் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவன் நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.இவர்களுக்கு சான்றிதழ்- பதக்கம் வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இந்த மாணவ-மாணவிகள் 4 பேரும், இன்று காலை 44-வது செஸ் ஒலிம்பியாட் நடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். பின்னர், வரும் 28-ந் தேதி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடக்க விழா, கொடி அணி வகுப்பில் மாணவ, மாணவிகள் 4 பேரும் பங்கேற்க உள்ளனர்.

    இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×