என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ஈரோடு மாணவ-மாணவிகள் 4 பேர் பங்கேற்பு
- பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
- முதலிடம் பிடித்த இந்த மாணவ-மாணவிகள் 4 பேரும், இன்று காலை 44-வது செஸ் ஒலிம்பியாட் நடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்றனர்.
ஈரோடு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சித்தோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி தலைமை தாங்கினார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.
மாணவிகளில் 9, 10-ம் வகுப்பு பிரிவில் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைபள்ளி மாணவி மகதி, பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு பிரிவில் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவி சந்தியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மாணவர்களில் 9,10ம் வகுப்பு பிரிவில் ஈரோடு இடையன்காட்டு வலசு அரசு மேல்நிலை பள்ளி மாணவன் எஸ்.விக்னேஸ்வரன், பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்பு பிரிவில் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவன் நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.இவர்களுக்கு சான்றிதழ்- பதக்கம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இந்த மாணவ-மாணவிகள் 4 பேரும், இன்று காலை 44-வது செஸ் ஒலிம்பியாட் நடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். பின்னர், வரும் 28-ந் தேதி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடக்க விழா, கொடி அணி வகுப்பில் மாணவ, மாணவிகள் 4 பேரும் பங்கேற்க உள்ளனர்.
இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






