என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மையினர்"

    • சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
    • உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.

    வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். குமில்லா மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் சந்திர பவுமிக்(வயது 23). இவர் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு கும்பல் கடையின் ஷட்டரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியது. இதில் கடைக்குள் தீ பரவியதில் சஞ்சல் சந்திர பவுமிக் சிக்கி கொண்டார்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.

    வாலிபரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதற்கு காரணமான வர்களை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட் டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

    • ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை
    • கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் வீட்டில், முன் அனுமதி இன்றி தொழுகை நடத்தியதாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பரேலி மாவட்டத்தின் முகமதுகஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு காலி வீடு மதரஸாவாகப் பயன்படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதற்கு அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

    தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அனுமதியின்றி புதிய மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும் என்று தெரிவித்து, அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.

    ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்குப் ஜாமீன் வழங்கப்பட்டது. 

    • சமீர் தாஸ் என்ற 28 வயது ஆட்டோ ஓட்டுனரை கும்பல் ஒன்று வழிமறித்தது.
    • இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு தலைவர் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின.

    கொல்லப்பட்டவர் இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தவர் என்பதால் அவரது கொலையை கண்டித்து நடந்த போராட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    மேலும் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

    இந்நிலையில் வங்கதேசத்தின் சிட்டகாங்கில் சமீர் தாஸ் என்ற 28 வயது ஆட்டோ ஓட்டுனரை கும்பல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர்.

    முதற்கட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறத. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். 

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

    இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.

    நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. 

    • எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
    • கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

    பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

    மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

    எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! என்று கூறியுள்ளார். 



    • டெல்லியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.
    • பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டாட்டத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டதற்கு தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன.

    டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.

    ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்தை சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடித்திருக்கிறான்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம்.

    உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது.

    இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான்.

    இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது. இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

    "எம்மதமும் நம்மதமே" என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
    • பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மக்களவையில் நீதிபதிகள் நியமனம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அந்த பதிலில், "நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. ஆதலால் 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலினத்தவர் 3.8% பேரும் பழங்குடியினர் 2.0% பேரும் ஓபிசி பிரிவில் 12.2% பேரும் சிறுபான்மையினர்கள் 5.5% பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

    • 2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர்.
    • நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.

    கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

    சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.

    சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

    • கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது.
    • வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு.

    மத மாற்ற புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சத்தீர்கரில் பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாவது கவலையளிக்கிறது.

    வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு. சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது.

    இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா?
    • இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா?

    பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறும் ஒரே நாடு இந்தியா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், " நீங்கள் இந்தியக் குடியரசின் அமைச்சர், மன்னர் அல்ல. நீங்கள் இருப்பது அரசியலமைப்புச் சட்டப் பதவி , அரியணை அல்ல. சிறுபான்மை உரிமைகள் அடிப்படை உரிமைகள், தொண்டு அல்ல.

    இந்திய முஸ்லிமகள் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானியர், வங்கதேசியர், ஜிஹாதி அல்லது ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுவது ஒரு நன்மையா? கும்பல் கொலை செய்யப்படுவது பாதுகாப்பா? இந்தியக் குடிமக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்திற்குள் தள்ளப்படுவது ஒரு பாதுகாப்பா?

    நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா? சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றப்படுவதா?

    இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா? இந்தியாவின் சிறுபான்மையினர் இனி இரண்டாம் தர குடிமக்கள் கூட அல்ல. நாங்கள் பணயக்கைதிகள்.

    உதவிகள் பற்றிப் பேச விரும்பினால், இதற்கு பதிலளிக்கவும்: முஸ்லிம்கள் இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக இருக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க கட்டாயப்படுத்துகிறது. மேலும் அவர்கள் பெரும்பான்மையை உருவாக்க அனுமதிக்கிறது.

    முஸ்லிம் மாணவர்களுக்கு பயனளிக்க கூடாது என்பதால் நீங்கள் மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் மெட்ரிக்-க்கு முந்தைய மற்றும் தகுதி மற்றும் சராசரி உதவித்தொகைகளை குறைத்துள்ளீர்கள்.

    உயர்கல்வியில் எண்ணிக்கை குறைந்து வரும் ஒரே சமூகம் முஸ்லிம்கள் மட்டுமே. முறைசாரா பொருளாதாரத்தில் அவர்களின் இருப்பு அதிகரித்துள்ளது. உங்கள் பொருளாதாரக் கொள்கைகளால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உங்கள் சொந்த அரசாங்கத்தின் தரவு.

    இந்திய முஸ்லிம்களின் குழந்தைகள் மட்டுமே தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை விட மோசமாக வாழ்க்கை சூழலில் உள்ளனர். தலைமுறைகளுக்கு இடையேயான இயக்கம் தலைகீழாக மாறிவிட்டது.

    மற்ற நாடுகளின் பிற சிறுபான்மையினருடன் ஒப்பிட நாங்கள் கேட்கவில்லை. பெரும்பான்மை சமூகம் பெறுவதை விட அதிகமாக நாங்கள் கேட்கவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி என்று அரசியலமைப்பு வாக்குறுதியளிப்பதை நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஹோலி பண்டிகையில் வண்ணம் பூசி விளையாடும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது.

    பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். ஜெய்சங்கர்

    இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் அகமதியா சமூக மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. பிப்ரவரி மாதத்தில், இந்துக்கள் மீது 10 கடுமையான தாக்குதல்கள் நடந்தன.

    இவற்றில் கடத்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் ஹோலி பண்டிகையில் வண்ணம் பூசி விளையாடும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை போன்ற சம்பவங்களும் அடங்கும்.

    சீக்கிய சமூகத்தினருக்கு எதிராகவும் 3 அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முதல் சம்பவத்தில் ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது. மற்றொரு நிகழ்வில் ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததற்காக ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது.

    மேலும் ஒரு சம்பவம் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது. அகமதியா சமுதாய மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு வழக்கில் ஒரு மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது.

    மற்றொரு வழக்கில் 40 கல்லறைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மன நிலை சரியில்லாத கிறிஸ்தவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அரசு தனது நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக தனது பங்கை வகிக்கிறது, ஆனால் வேறு எந்த நாட்டின் மதவெறி மனநிலையையும் மாற்ற முடியாது. இந்திரா காந்தியால் கூட இதைச் செய்ய முடிந்திருக்காது என்று தெரிவித்தார். 

    • கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
    • அரியலூர் மாவட்டத்தில் விரா சாட் திட்டத்தில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "விராசாட்" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையினராக (இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இருத்தல் வேண்டும். 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விராசட் 1ல் பயன்பெறாத நபராகவும், ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமலும் இருகக வேண்டும். கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டி வீதத்திலும், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரார் கோரும் கடன் தொகையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் மூலம் 90 சதவீதம் கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத் தொகை 5 சதவீதம் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    ×