search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை நடமாட்டம்"

    • மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் சிறுத்தை நடமாடுவதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தையை தெரு நாய்கள் விரட்டி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அப்பகுதியின் சாலை ஓரத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதும் தெரியவந்தது. இதனை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இந்நிலையில், நேற்றிரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும், வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை யாராவது கண்டால் 93608 89724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்த சிறுத்தை திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக வந்திருக்கலாம் என்றும், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வரும் போது வழி தவறி நகருக்குள் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதற்காக வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை ஆகியவை இணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும் என்றனர்.

    வனப்பகுதி எதுவும் அருகில் இல்லாத நிலையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மயிலாடுதுறை நகரின் மையமான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை உலாவும் சம்பவம் அப்பகுதி மக்கள் மனதில் அச்சத்தையும், பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
    • கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

    ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை அடித்து கொன்றது. அதற்கு முன்பு ஒரு சிறுவன் படுகாயத்துடன் மீட்கப்பட்டான்.

    இதனையடுத்து கூண்டுகள் வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி அருகே உள்ள நடைபாதை அருகே அடிக்கடி மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் மூங்கில் கம்பு வழங்கி வருகின்றனர்.

    இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் தனியாக செல்லாதபடி கண்காணித்து 100 பேர் குழுவாக அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியொட்டி நாளை முதல் 9 இடங்களில் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதனை பெற்று நேரடியாக சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

    இதன் மூலம் விரைவாக தரிசனம் செய்யலாம். டோக்கன் தீரும் வரை பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    இன்று இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது.
    • வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சிறுத்தைகள் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

    அந்த வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது. இதை அறிந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதூர் கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

    அதில் சிறுத்தைப்புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம் என்றும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கூறி பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.

    சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது.
    • தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு எருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அதிக அளவில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிறுத்தை ஊருக்குள் புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.
    • தற்போது மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கன்று குட்டியை கொன்று உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் சமீப காலமாக சிறுத்தை ஊருக்குள் புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவர் தன்னுடைய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று செல்வகுமார் தோட்டத்தில் புகுந்து தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து கொன்றது. நேற்று காலை வழக்கம் போல் செல்வகுமார் தோட்டத்திற்கு சென்றபோது கன்றுக்குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அதன் அருகே சிறுத்தை கால் தடம் பதிவாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். ஏற்கனவே இதே போல் சிறுத்தை பலமுறை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. தற்போது மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கன்று குட்டியை கொன்று உள்ளது.

    இதனால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சாமனூர், படகாண்டஅள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதை வனத்துறையினர் கண்டு அறிந்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஅள்ளி கிராமத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்பு பிராணிகளை கடித்து சென்று உள்ளது.

    இதையடுத்து திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

    அதனை உற்று பார்த்த போது அது சிறுத்தை என தெரிய வந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்தும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஅள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதை வனத்துறையினர் கண்டு அறிந்துள்ளனர்.

    இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். அதே போல் வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

    அவ்வாறு ஈடுபடும் நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் (பொன்னூதி மாமலை) வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை ஒன்று வழி தவறி மலைப்பகுதிக்குள் வந்தது. கடந்த 8 மாதங்களாக மலையில் பதுங்கியிருந்து அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இந்த சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மலையில் புள்ளிமான், கடமான், குரங்குகள், மயில்கள், கீரிகள், உடும்புகள், எறும்புத்தின்னி, முள் எலி, முள்ளம் பன்றி, முயல்கள், பாம்புகள் அதிகம் உள்ளன. மேலும் காங்கயம் வட்டாரத்தில் பிடிக்கப்படும் அரிய வகை விலங்குகள், பறவைகளை இந்த மலையில் வனத்துறையினர் விடுவதும் வழக்கம்.

    சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. அந்த சிறுத்தை சுமார் 7 முதல் 10 வயதுடையதாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுத்தையை கண்காணிக்க ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள பகுதியில் கேமராக்களை வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

    இதுவரை சுமார் 4 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 1 நாய் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளதாகவும் 2 கன்று குட்டியை தாக்கி காயங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் வனத்துறையினர் சார்பில் கூறப்படுகிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டும் கடந்த 8 மாதங்களாக பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க மனிதனை தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஒரு சம்பவம் அரங்கேறுவதற்குள் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வனத்துறையினருக்கு உத்தரவிட்டு கூடிய விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். ஒரு வேளை சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு காங்கயம் இந்து முன்னணி இயக்கத்தினர் உடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று காலை சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய பகுதியான கள்ளிப்பாளையம், தண்ணீர் பந்தல், புத்தெரிச்சல், வலையபாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியாததால் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை இங்கு வந்து இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • வனத்துறையினர் 12 பேர் இரவு முழுவதும் ரோந்து
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.

    அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறியது காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.

    அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பொது மக்கள் பீதி அடைந்து அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலே உஷாராக இருக்க வேண்டும். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 12 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது சிறுத்தை தானா என்பது முழுமையாக தெரியவில்லை. நாய் போன்ற உருவம் பதிவாகி உள்ளது.

    பூனையை துரத்தி சென்று கடித்துக் குதறியது நாய் தான் என்பது 60 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    எனவே இதனை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து கூறிய பிறகே, அது என்ன விலங்கு என தெரியவரும்.

    இருப்பினும் அது என்ன விலங்கு? என்பதை கண்டறிய 12 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது
    • சிறுத்தைகளை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது

    திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோருடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்து சென்று கடித்து கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடைபாதை அருகே கூண்டுகள் வைத்தனர்.

    அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் திருப்பதியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடைபாதையில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    5-வதாக ஒரு சிறுத்தை நடைபாதை பகுதியில் சுற்றி திரிந்தது. கேமரா மூலம் அதனை கண்காணித்தனர். வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் சிறுத்தை ஆட்டம் காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    நடைபாதை அருகே அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கி உள்ள சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளிடமிருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15 ஆயிரம் கம்புகள் வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதைகளில் கம்புகளுடன் பக்தர்கள் மலையேறி செல்கின்றனர்.

    • நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
    • பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது.

    அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்று விட்டது.

    கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் பெற்றோரை விட்டு முன்னால் வேகமாக ஓடிய 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது.

    நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    இதனை தொடர்ந்து அலிபிரி நடைபாதையில் பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.

    இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்தி வன உயிரின பூங்காவில் பராமரித்து வருகின்றனர்.

    மலைப்பாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள் அனைத்தும் பிடிக்கப்பட்டு விட்டன. பக்தர்கள் அச்சமின்றி கோவிலுக்கு வரலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    நடைபாதையில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிறுமி சிறுத்தையால் தாக்கி கொல்லப்பட்ட பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடியது.

    இந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

    இதனை கண்டு தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தையை பிடிக்க மேலும் அந்த பகுதியில் கூடுதலாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் நடைபாதை பகுதியில் நடமாடிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

    சிறுத்தைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வனச்சாலை இரைச்சல் இன்றி இயல்பாக இருப்பதால் வன விலங்குகள் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் திம்பம் 6-வது வளைவில் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து காரை நிறுத்தி உள்ளனர். பின்னர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

    வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் சிறுத்தை சிறிது நேரம் நடந்து சென்று பின்னர் சாலையோர தடுப்பு சுவரில் பதுங்கி கொண்டது. காரில் சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    இது குறித்து வனத் துறையினர் கூறும்போது:

    தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றன. இந்த சமயம் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து சென்றால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தங்களது வாகனங்களை விட்டு இறங்கி செல்போன்களில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். சில சமயம் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல் பட வேண்டும். இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
    • வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி சமனாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து கடித்து கொன்றது.

    அந்த கன்று குட்டியின் உடல் பாகங்கள் அருகே உள்ள விவசாய சோளகாட்டில் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அந்த சிறுத்தை சோளகாட்டுக்கு வந்தது. அங்கு சிதைந்த நிலையில் கிடந்த கன்று குட்டியின் மீதமுள்ள உடல் பாகங்களை உணவுக்காக எடுத்து சென்றதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

    இதனால் சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை விரைவில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×