search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்
    X

    சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

    • சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் (பொன்னூதி மாமலை) வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை ஒன்று வழி தவறி மலைப்பகுதிக்குள் வந்தது. கடந்த 8 மாதங்களாக மலையில் பதுங்கியிருந்து அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இந்த சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மலையில் புள்ளிமான், கடமான், குரங்குகள், மயில்கள், கீரிகள், உடும்புகள், எறும்புத்தின்னி, முள் எலி, முள்ளம் பன்றி, முயல்கள், பாம்புகள் அதிகம் உள்ளன. மேலும் காங்கயம் வட்டாரத்தில் பிடிக்கப்படும் அரிய வகை விலங்குகள், பறவைகளை இந்த மலையில் வனத்துறையினர் விடுவதும் வழக்கம்.

    சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. அந்த சிறுத்தை சுமார் 7 முதல் 10 வயதுடையதாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுத்தையை கண்காணிக்க ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள பகுதியில் கேமராக்களை வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

    இதுவரை சுமார் 4 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 1 நாய் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளதாகவும் 2 கன்று குட்டியை தாக்கி காயங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் வனத்துறையினர் சார்பில் கூறப்படுகிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டும் கடந்த 8 மாதங்களாக பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க மனிதனை தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஒரு சம்பவம் அரங்கேறுவதற்குள் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வனத்துறையினருக்கு உத்தரவிட்டு கூடிய விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். ஒரு வேளை சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு காங்கயம் இந்து முன்னணி இயக்கத்தினர் உடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று காலை சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய பகுதியான கள்ளிப்பாளையம், தண்ணீர் பந்தல், புத்தெரிச்சல், வலையபாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியாததால் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை இங்கு வந்து இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×