search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை எச்சரிக்கை"

    • வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது.
    • வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சிறுத்தைகள் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

    அந்த வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது. இதை அறிந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதூர் கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

    அதில் சிறுத்தைப்புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம் என்றும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கூறி பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.

    சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதியின் அழகை காண தடையை மீறி வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன.
    • யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.

    ஆனால் கோடை காலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை இழந்து விடுவதால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதனால் தண்ணீருக்காக திருமூர்த்தி அணை மற்றும் மலையடிவார பகுதிக்கு வனவிலங்குகள் வருகின்றன.

    கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மலை அடிவாரப் பகுதியான உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பசி தாகத்தோடு வருகின்ற வனவிலங்குகள் எதிர்பாராத விதமாக கம்பி வேலிகளை சேதப்படுத்திவிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் உடுமலை- மூணாறு சாலையை கடக்க முற்பட்டால் வாகன ஓட்டிகள் அமைதி காக்குமாறும், அவை சாலையை கடந்த பின்னர் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் வனவிலங்குகள் மிறட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது, கற்களை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும்.
    • வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, யானை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வால்பாறையை சேர்ந்த ஒருவர் நேற்று காரில், அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் படுத்து கிடந்தது. எனவே அவர் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வனவர்களுக்கு உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. எனவே அங்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, யானை உலா வந்தால், மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து முடிந்தவரை விலகி செல்ல வேண்டும். அதனை விடுத்து வனவிலங்குகளை போட்டோ எடுப்பது, சத்தம் போட்டு கூச்சலிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • பச்சை கிளிகளை வேட்டையாடி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளில் ரகசியமாக ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் கிராமப்புறங்களில் பனை மரங்கள், தென்னை மரங்கள் நிறைந்த தோப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பச்சை கிளிகள் வசித்து வருகின்றன. தற்போது அவகைளை பார்ப்பது அரிதாகி விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கிளிகளை அரிய வகை பறவைகள் பட்டியலில் இணைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

    இந்த வகை கிளிகளை வேட்டையாடுவதில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிடிக்கப்படும் கிளிகளை ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளில் ரகசியமாக ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கிளிகளுக்கு பேசும் திறன் இருப்பதால் வீடுகள், நிறுவனங்களில் பச்சை கிளியை விரும்பி வளர்க்கின்றனர். இவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை பறிமுதல் செய்து வனத்தில் விட ணே்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, இந்திய வனச்சட்டப்படி மைனா, பச்சை கிளிகள் விற்பது, வீடு, கடைகளில் வளர்க்க தடை உள்ளது.

    குறிப்பாக பறவைகளை விற்பனை செய்ய முறைப்படி வனத்துறை அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். சோதனையின்போது பிடிப்பட்டால் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பச்சை கிளிகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

    ×