search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரகுப்தர் வழிபாடு"

    • சித்தரகுப்தருக்கு உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் உள்ளது.
    • சித்திர குப்தரை வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.

    இந்துக்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்மராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவ- புண்ணியங்களை வைத்து எமதர்மராஜா அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு, சித்திரகுப்தருடையது.

    புராண வரலாறு

    புராணத்தின்படி சிவன் மற்றும் பார்வதி பூமியில் உள்ள அனைத்து மனிதர்களிடையும், நல்லொழுக்கமும் தர்மமும் அதிகம் இருக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், ஈடுபவர்களும், நற்செயல்கள் செய்பவர்களையும் கண்காணிக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனர் எனவும், அதன் அடிப்படையில் சிவன் தங்கத்தட்டில் ஒரு படத்தை வரைந்தார் எனவும், பார்வதிக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

    இருவருடைய அருளால் படம் உயிர் பெற்றது. சித்திரத்தில் இந்து உருவானதால் அவருக்கு சித்திரகுப்தர் என பார்வதி மற்றும் சிவன் ஆகியோர் பெயர் வைத்து, சித்திரகுப்தரிடம் மக்களின் பாவ-புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஐதீகம். இதனைத்தொடர்ந்து எமனின் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டார் என்பது புராண கால நம்பிக்கையாக உள்ளது.

    வரவு கணக்கு செலவுகளை பார்க்கும் மிக முக்கிய கடவுளாக பார்க்கப்படும் சித்தரகுப்தருக்கு உலகில் எங்கும் கோவில் கிடையாது.

    ஒரே ஒரு கோவில் மட்டுமே உலகில் சித்திரகுப்தற்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு கோவில் சீரமைப்பு பணியின் பொழுது சித்திரகுப்தன் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள் ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அமைவிடம்

    சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.

    சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து கேதுவுக்கு அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குவதால் இவரை வணங்கினால் கேதுவால் உண்டாகும் தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே கேது தோஷம் இருப்பவர்கள் சித்தரகுப்தரை வணங்கி வந்தால், வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை

    சித்ரா பவுர்ணமி

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்ற பின், பவுர்ணமி அன்று நகர்வலம் கொண்டு செல்லப்படுகிறார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கினால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடிவு பிறந்து, ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ×