search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைக்காலம்"

    • வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
    • ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

    கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

    குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

    மருத்துவ உதவியை நாடுங்கள்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

    அதிக நேரம் சூரிய ஒளி

    வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    வீட்டில் இருந்தபடி வேலை

    கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.

    சிக்கனுக்கு டாடா

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.

    பழங்கள், காய்கறிகள்

    அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.

    திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

    சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்

    எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

    கூடுதல் குடிநீர்

    மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.

    வெளியில் தலைகாட்டவில்லை

    விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.

    • அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது.
    • 6-வது நாளாக தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து முதல் 10 நாட்கள் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அதன் கோரத் தாண்டவத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. 6-வது நாளாக நேற்றும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

    அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொறுத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 5 டிகிரி வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நேற்று பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.98 டிகிரி

    சென்னை மீனம்பாக்கம் - 101.12 டிகிரி

    கோவை - 97.7 டிகிரி

    கடலூர் - 96.44 டிகிரி

    தர்மபுரி - 99.68 டிகிரி

    ஈரோடு - 101.84 டிகிரி

    கன்னியாகுமரி - 91.76 டிகிரி

    கரூர் - 106.7 டிகிரி

    கொடைக்கானல் - 70.88 டிகிரி

    மதுரை நகரம் - 102.2 டிகிரி

    மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி

    நாகப்பட்டினம் - 100.4 டிகிரி

    நாமக்கல் - 100.4 டிகிரி

    பாளையங்கோட்டை - 101.3 டிகிரி

    சேலம் - 101.48 டிகிரி

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி

    திருப்பத்தூர் - 102.56 டிகிரி

    திருச்சி - 102.38 டிகிரி

    திருத்தணி - 103.28 டிகிரி

    தூத்துக்குடி - 93.38 டிகிரி

    ஊட்டி - 69.98 டிகிரி

    வால்பாறை - 84.2 டிகிரி

    வேலூர் - 107.24 டிகிரி

    • கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

    தஞ்சாவூர் :

    தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திர தொடக்க காலத்தில் வெயிலின் தாக்கம் இன்றி சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் மனிதர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை காணப்பட்டது..

    வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, கூழ், மோர் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் நேற்று ஸ்கூட்டரின் முன்பகுதியில் தண்ணீர் நிரம்பிய வாளியை வைத்துக்கொண்டு, வாகனத்தில் சென்றவாறே தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் அவர் இது போன்று தலையில் தண்ணீர் ஊற்றியபடியே இருசக்கர வாகனத்தில் சென்றதையும், அதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சிரித்தபடியே சென்றதையும் அதில் காண முடிந்தது.

    • அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
    • சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் உக்கிரமாகி வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 19 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    அதிலும் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    5-வது நாளாக நேற்றும் சில இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. 13 இடங்களில் 100 டிகிரியை வெயில் அளவு கடந்து இருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி பதிவானது.

    ஊட்டி, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கத்தை தவிர மற்ற இடங்களில் இயல்பான அளவைவிட 1 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிகமாக கரூரில் 5.2 டிகிரி வெயில் இயல்பை காட்டிலும் அதிகமாக கொளுத்தியது.

    இந்த நிலையில் இன்றும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - -98.78 டிகிரி(37.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - -102.92 டிகிரி(39.4 செல்சியஸ்)

    கோவை - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)

    கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    தர்மபுரி - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

    ஈரோடு - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)

    கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)

    மதுரை நகரம் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)

    மதுரை விமான நிலையம்-104 டிகிரி(40 செல்சியஸ்)

    நாகை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)

    நாமக்கல் - 98.6 டிகிரி (37.7 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

    சேலம் - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருச்சி - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)

    திருத்தணி - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

    ஊட்டி - 69.26 டிகிரி (20.7 செல்சியஸ்)

    வால்பாறை - 83.3 டிகிரி (28.5 செல்சியஸ்)

    வேலூர் - 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்)

    • வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர்.
    • சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தில் லீத் கேஸ்டல் தெருவில் நேற்றிரவு மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர்.

    உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் வேறு பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததா என்று ஆய்வு செய்ய வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு இறந்து போன மயிலை கொண்டு சென்றனர்.

    • கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • நேற்று சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை

    சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ந் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது.

    இன்று (நேற்று) பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.

    இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரமடைந்து வருகிறது.
    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது.

    தொடக்கத்திலேயே வீறு கொண்டு வெப்பத்தை கக்கிய நிலையில், இதையே தாங்க முடியவில்லையே? மே மாதத்தில் எப்படி தாக்கு பிடிக்க போகிறோமோ? என்றுமக்கள் பேசும் அளவுக்கு அப்போது இருந்தது.

    மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து கோடை மழையும் தமிழ்நாட்டில் பெய்யத்தொடங்கியது. சில இடங்களில் கனமழையும் பதிவானது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

    ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கோடை மழை தயவு காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இது கோடை காலமா? அல்லது மழை காலமா? என்று யோசிக்கும் அளவுக்கு மழை பதிவானதை பார்க்க முடிந்தது. இதனால் கோடை காலத்தில் பதிவாகும் இயல்பான அளவை விட 88 சதவீதம் அதிகமாக இதுவரை மழை பெய்திருக்கிறது.

    இந்த தொடர் மழை காரணமாக, கடந்த 4-ந் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

    பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கும் முடியாமல், வீடுகளில் இருக்கலாம் என்று நினைத்தால் வெப்பக்காற்றாலும், புழுக்கத்தாலும் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏதோ அனல் அதிகம் நிறைந்த அடுப்புக்கு அருகில் இருந்தால் எப்படி இருக்குமோ? அதே போல் பகல் நேரங்களில் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், பகல் நேரத்தில்தான் அப்படி என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்வதாகவும், அதிகாலை 3 மணிக்கு மேல் தான் ஓரளவுக்கு குளிர்ச்சியை உணர முடிவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

    ஏ.சி. இருக்கும் வீடுகளில் கூட வெயிலினால் ஏற்படும் உஷ்ணத்தால், கூடுதலாக மின்விசிறிகளையும் இயக்க வேண்டியிருப்பதாக சொல்கின்றனர். பணியின் நிமித்தமாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் வெயிலின் உக்கிரத்தால் வாடிவதங்கினா். இதனால் சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்பட பழ ஜூஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 19 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதுதவிர புதுச்சேரியில் 106.16 டிகிரியும், காரைக்காலில் 100.94 டிகிரியும் வெயில் பதிவானது.

    சென்னையில் நேற்று பதிவான 109 டிகிரி தான் இதுவரை பதிவானதிலே அதிகமானது என்று பேசப்பட்ட நிலையில், இதற்கு முன்பும் இதைவிட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு 113 டிகிரியும், 2012-ம் ஆண்டு மே மாதம் 110 டிகிரியும் வெயில் பதிவாகியிருப்பதாகவும், 109 டிகிரியை பொறுத்தவரையில் கடந்த 2008-ம் ஆண்டும், அதற்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதியும், 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதியும் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பிறகு, நடப்பாண்டில் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், பதிவான அதிகபட்ச வெயில் அளவாக இது பார்க்கப்படுகிறது

    வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இருப்பினும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவுக்கு குடிக்க வேண்டும் என்றும், வெளிர்நிற, இலகுரக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    வெளியில் செல்ல அவசியம் இருந்தால் குடை, தொப்பி எடுத்து செல்லவும், கூடுமான வரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, வடித்த கஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்கவும் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.

    • சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது.
    • இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும்.

    சென்னை :

    தமிழகம் முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதேவேளை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வாட்டி வதைப்பதால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். இதற்கிடையே 'நானும் இருக்கிறேன் பார்' என்று உருவான 'மோக்கா' புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது.

    சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. ஓட்டலில் அடுப்பு அருகே நின்று சமைக்கும் 'மாஸ்டர்' போலவே, மக்கள் அனைவருமே அனல் தாக்கத்தில் இருப்பது போல உணர்ந்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் -105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கோவை - 96.8 டிகிரி - (36 செல்சியஸ்)

    குன்னூர் - 77 டிகிரி - (25 செல்சியஸ்)

    கடலூர் - 102.92 டிகிரி - (39.4செல்சியஸ்)

    தர்மபுரி - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    ஈரோடு - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.12 டிகிரி - (33.4 செல்சியஸ்)

    கரூர் - 104.9 டிகிரி - (40.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 73.58 டிகிரி - (23.1 செல்சியஸ்)

    மதுரை - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    நாகை - 100.04 டிகிரி - (37.8 செல்சியஸ்)

    நாமக்கல் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.02 டிகிரி - (38.9 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    சேலம் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    திருச்சி - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    திருத்தணி - 105.8 டிகிரி - (41 செல்சியஸ்)

    தொண்டி - 94.64 டிகிரி - (34.8 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.2 டிகிரி - (34 செல்சியஸ்)

    ஊட்டி - 78.62 டிகிரி - (25.9 செல்சியஸ்)

    வால்பாறை - 83.3 டிகிரி - (28.5 செல்சியஸ்)

    வேலூர் - 108.14 டிகிரி - (42.3 செல்சியஸ்)

    தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 'இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்' என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

    'மோக்கா' புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மழை ஆறுதலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது.
    • பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது.

    மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி சென்னைவாசிகளுக்கு எப்போதுமே தவிப்புக்கு மட்டும் பஞ்சம் இல்லை. அந்தவகையில் கோடை வெயில் தொடங்கிய காலத்தில் இருந்தே சென்னை மக்களின் தவிப்பு தொடங்கியது. இதற்கிடையில் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்தரி வெயில்' காலம் தொடங்கியது. ஏற்கனவே கொளுத்தி எடுக்கும் வெயிலின் நடுவே கத்தரி வெயிலின் கொடூரம் எப்படி இருக்குமோ... என்று பயந்த மக்களுக்கு, கோடை மழை கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது.

    அந்த ஆறுதலும் நீடிக்காத வகையில், வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை விட இனி வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மக்களுக்கு அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளுக்கு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்தவகையிலேயே சில நாட்களாகவே சென்னையில் வெயிலின் உக்கிரம் கொடூரமாக இருந்து வருகிறது.

    சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. பங்குனி வெயில் பல்லை காட்டி அடிச்சுட்டு இருக்கு என்று படத்தில் நடிகர் வடிவேல் சொல்வது போல, சித்திரை வெயில் சென்னையை சிதறடித்துவிட்டது என்றே சொல்லலாம். காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருந்தது.

    பகல் 12 மணிக்கு மேல் வெயில் பட்டையை கிளப்பியது. தரையில் விழுந்த வெயிலின் கீற்று கண் கூசும் அளவு பிரகாசித்தது. இதனால் சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருமே வெயிலில் குளித்தபடி பயணத்தை தொடர்ந்தனர். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல, எங்கேயாவது மர நிழல் இருக்குமா, சற்று இளைப்பாறலாமா? என்று அலை பாய்ந்து கொண்டிருந்தனர். அதேவேளை சாலையோரம் இருந்த ஜூஸ் கடைகள், இளநீர், சர்பத் கடைகள், பதனீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

    விடுமுறை நாட்கள் என்றாலே, வெளியே குடும்பத்துடன் குதூகலமாக 'ரவுண்ட்' செல்லும் சென்னைவாசிகள், நேற்று பகலில் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஏராளமான வீடுகளில் பகலிலும் நேற்று ஏ.சி. எந்திரம் ஓடிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது. இதனால் மதியம் 3 மணிக்கு மேல் அனல் காற்றுடன் கூடிய ஊமை வெயில் மக்களை வாட்டியது. மாலை 6 மணி கடந்தும் இதே நிலைமை தொடர்ந்ததால், ஒட்டுமொத்தமாக சென்னைவாசிகள் தவித்து போய்விட்டார்கள்.

    அதேவேளை கடற்கரைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டு குளிர்ந்த காற்றை எதிர்கொண்டனர். இப்போதே வெயில் இப்படி இருக்கிறதே, போக போக எப்படியெல்லாம் வாட்டி வதைக்க போகிறதோ... என சூரியனை திட்டி வருகிறார்கள்.

    • ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட வானிலை முன்னறிவிப்பை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வெப்ப அலையின் தாக்கத்தால் தொழிலாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம். பணியிடங்களில் போதிய குடிநீர் வசதிகள் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான உபகரணங்களையும், ஐஸ் பேக்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

    சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும். தரமான குளிர்ந்த நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் அசவுகரியமாக உணர்ந்தால், வேலையை மெதுவாக செய்ய அனுமதிக்க வேண்டும். ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். குளிர்ச்சியான நேரத்தில் கடினமான வேலைகளை செய்யும்வகையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    வெயிலால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை தணிக்கும் வழிகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல் சூளை தொழிலாளர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் கோடை வெயில் கடந்த 2 மாதமாகவே கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கிறது.

    தமிழகத்தில் கடந்த மாதமே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

    இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் 9 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களிலும் வெப்ப அலை கடுமையாகும் என்று கூறியுள்ளது.

    இந்த 3 மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த 3 மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த வெயிலில் நின்று அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    மகாராஷ்டிரத்தில் திறந்தவெளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 13 பேர் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலியானார்கள்.

    எனவே பகலில் வெயிலில் வெளியே செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த வெப்ப அலைகளால் கைக்குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோய் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை கோடை வெயில் 113 டிகிரியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் பூபால் பள்ளி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 112.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

    அதற்கு அடுத்தபடியாக பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் 111 டிகிரி வெயில் பதிவானது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான் பூர் பகுதியில் 110.13 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. பீகார் மாநிலம் சுபால் பகுதியில் 108.32 டிகிரி வெயில் பதிவானது.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், ஜான்சி, கான்பூர் மற்றும் ஆக்ரா, பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ஆகிய பகுதிகளில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது.

    வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவில் பள்ளி நேரம் அதிகாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    தமிழகத்தை பொருத்தவரை நேற்று 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வறுத்தெடுத்தது. பரமத்திவேலூரில் 105.44 டிகிரியும், சேலத்தில் 105.08 டிகிரியும், திருப்பத்தூர், மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் 103.64 டிகிரியும், திருச்சியில் 103.46 டிகிரி வெயிலும், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் 103.10 டிகிரி வெயிலும், மதுரை விமான நிலையம், தருமபுரி ஆகிய இடங்களில் 102.2 டிகிரி வெயிலும், சென்னையில் 101.60 டிகிரி வெயிலும், கோவையில் 101.3 டிகிரி வெயிலும், தஞ்சாவூரில் 100.40 டிகிரி வெயிலும் பதிவானது.

    தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் பகல் வேளைகளில் வெளியே செல்வதை பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை குடித்து தாகத்தை தவிர்த்தனர்.

    அடுத்த மாதம் (மே) அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும்.

    • கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும்.
    • டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மனிதர்களே வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறார்கள்.

    வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் எனக்கருதி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலைய வளாகங்களிலும் சிறிய சிமெண்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்து அதன் தாகத்தை தணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.

    விலங்குகள் நல உரிமைகள் ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக காவல்துறை பறவைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

    அனைத்து உயிர்களையும் முடிந்தவரை பாதுகாக்க உதவி செய்வது முக்கியமாகும். கொரோனா காலத்தில் தீயணைப்பு நிலையங்களில் தண்ணீர் கிண்ணம் வைக்கப்பட்டதால் அதன் மூலம் பறவைகள் தாகத்தை தணித்துக் கொண்டது. அந்த பணி திருப்தியளித்தது.

    போலீஸ் நிலையங்களில் உள்ள மரங்கள், பறவைகளுக்கு வீடுகளாக அமைந்தது. தொடர்ந்து பறவைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். உதவி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×