search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெயில்"

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.

    பழனி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் மற்றும் இரை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானை உள்ளது. இந்த யானை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவது மற்றும் தேரை பின்னால் இருந்து தள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். மற்ற நாட்களில் இந்த யானை காரமடை தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கு புல், தீவனம் போன்ற உணவு வழங்கப்படுகிறது. கோவில் யானைக்கு என இங்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. காலையில் ஷவர் பாத்தும், மாலையில் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியலும் போட்டு வருகிறது. நீச்சல் தொட்டிக்குள் இறங்கி சிறு குழந்தைப்போல 1 மணி நேரத்துக்கும் மேலாக கோவில் யானை கஸ்தூரி ஆனந்தமாக குளித்து வருவதாகவும், இதனால் இரவில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
    • இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குடகனாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருளினார்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    • குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வழக்கமாக வெப்ப நிலை அதிகரிக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதத்தில் படிப்படியாக அதிகரித்த வெப்ப நிலை ஒரு சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை எகிறியது. வட தமிழக உள் மாவட்டங்களில்தான் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

    மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளிலும் புழுக்கம் இருந்து வருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் வெளியே மக்கள் செல்லவே பயப்படுகிறார்கள்.

    குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் வேளையில் மக்களின் நடமாட்டம் குறைந்து உள்ளது.

    ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. இன்றும் 110 டிகிரி வரை வெப்பம் தாக்கியது.

    சுட்டெரிக்கும் கோடை வெயில் பெரும்பாலான மாவட்டங்களில் நீடித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வெப்ப அலை தாக்கம் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு நாட்களும் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்கள் தவிர ஏனைய பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். வானிலையை பொறுத்தவரை 5 நாட்களுக்கு மட்டும் முன் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படும். அந்த வகையில் வருகிற நாட்கள் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும், அதாவது 110 டிகிரி வரை வெயிலின் உக்கிரம் இருக்கும்.

    காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதம் ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதம் ஆகவும் இருக்கக் கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    இயல்பை விட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி, வால்பாறை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது.
    • வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர்.

    சென்னை:

    வெயில் சுட்டெரிக்கிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி? சமாளிப்பது எப்படி? என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கோணத்தில் யோசிக்கிறார்கள்.

    குடிமகன்களுக்கு 'தண்ணி' தாராளமாக வேண்டும். அதாவது பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். பீர் குடித்தால் வெயிலோடு விளையாடலாம் என்பது அவர்களின் எண்ணம்.

    ஆனால் அதுவும் ஆல்கஹால்தான் என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதிலும் 10 சதவீதம் வரை ஆல்கஹால் கலக்கப்படுகிறது. குடிமகன்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக தட்டுப்பாடு இல்லாமல் பீர் சப்ளை செய்ய டாஸ்மாக் நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது. தற்போது 10 லட்சம் பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.

    தற்போது டிராபிக்கல் நிறுவனத்திடம் இருந்தும் தண்டர் போல்டு, காட்பாதர் ஆகிய இருவகை பீர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டுப்பாட்டை சமாளிக்க முடிகிறதாம்.

    இந்த நிலையில் இப்போது காப்பர் போல்டு என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர். இந்த பீர் ரூ.190 விலைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி மதுவகை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-

    பீர் வகைகள் எல்லாமே ஏதாவது ஒரு தானியத்தில் இருந்துதான் தயாராகிறது. இதில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் அனைத்துமே உடலுக்கு தீங்கானதுதான்.

    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவிருக்கும் கோதுமை தயாரிப்பான பீர் உற்பத்தி செய்ய கூடுதல் நாட்கள் ஆகும். டிராபிக்கல் பீர் விலையே ரூ.170 முதல் ரூ.180 ஆக இருக்கும் போது இறக்குமதி செய்யப்படும். பீர் விலை ரூ.230-க்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றார்.

    • வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
    • ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    ஏற்காடு பகுதியில் கோடை விழா மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது.

    மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஏற்காடு மலைபாதை 8 வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனப்பகுதியில் மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி சுமார் 4 ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்தது. இதனால் மலைப்பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர் ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீ கொளுத்தி விட்டு எரிந்தது.

    இதையடுத்து சேலத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பாதையில் இருபுறமும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணித்தனர்.

    காட்டுத்தீ காரணமாக மலை பாதை முழுவதும் புகையும் சாம்பலுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது விற்பனை மளமளவென உயர்ந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இப்போது விதவிதமாக பீர் வகைகளை கேட்டு வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்காக எப்போதும் தட்டுப்பாடின்றி பீர் வழங்குகிறோம். சூப்பர் ஸ்டிராங்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது.

    40 சதவீதம் அளவுக்கு பீர் வகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மே மாதம் இன்னும் விற்பனை அதிகமாகும் என்பதால் மதுபான தொழிற்சாலைகளில் மது உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.
    • ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவான நிலையில், நேற்று சேலத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×