search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பரிசோதனை"

    • திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    • சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இச்சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கும் பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நோய் அறிகுறியுடன் வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபோன்று 2 சதவீத வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    தமிழகம் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது.
    • விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை (‘ரேண்டம்’) நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ளது.

    இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அந்த வகையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகிற விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ('ரேண்டம்') நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச, இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
    • சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

    சென்னை :

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

    அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலைய இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், 'விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் கொரோனா பரிசோதனை இனிமேல் தேவையில்லை. இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. விமான பயணிகளில் அறிகுறி உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி வெப்பமானி மூலம் மேற்கொள்ளப்படும் உடல் வெப்பநிலை பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    அதேபோன்று மற்றொரு சுற்றறிக்கையில், 'அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் இதர நோய்களுக்கான சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது. அதாவது, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், கர்ப்பிணி உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படுவதை உறுதி செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார்.
    • கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாம்பென்:

    இந்தோனேசியாவில் பாலி நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது நாட்டுக்கு திரும்பினார்.

    • கொரோனா பாதிப்பு கடந்த 25-ந் தேதி 10,725 ஆக இருந்தது.
    • கொரோனா பாதிப்பால் மேலும் 45 பேர் இறந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 25-ந் தேதி 10,725 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 44 ஆயிரத்து 25 ஆயிரத்து 816 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 10,828 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 852 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,065 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 64,667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் மேலும் 45 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,874 ஆக உயர்ந்துள்ளது,

    • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை.
    • கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை.

    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது பெருமளவு குறைந்து வருகின்றன.

    மேலும் சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர்.

    அதோடு, சென்னை விமானநிலைய டுவிட்டா் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே விமான பயணிகள், விமான நிலையத்துக்கு வருபவர்கள், விமானநிலைய ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

    முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. அதை போல் விமான பயணிகள் அனைவரும், பயண நேரம் முழுமையும் கண்டிப்பாக முக கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும்.

    சில பயணிகள் முகக்கவசம் தொடா்ந்து அணிவதால், சுவாச பிரச்சினை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முகக்கவசம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    முககவசம் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை, விமான நிலையத்தில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.
    • சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனாவை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே தயாரான இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன்அடிப்படையில் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பவேக்சை பயன்படுத்தலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

    இதைஏற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு இன்று அனுமதி அளித்து உள்ளது. இதனால் கோவாக்சின், கோவிஷீல்டு முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 3-வதாக இந்த பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

    • குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.
    • குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21,519 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

    இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. தற்பொழுது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று மாவட்டம் முழுவதும் 682 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் ஆண்கள் 14 பேர் பெண்கள் ஆவார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21,519 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கொரோனா தொற்று மற்ற முக்கிய உறுப்புகளை போலவே மூளையிலும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • அறிவாற்றலையும், நினைவுத்திறனையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன.

    கொரோனா தொற்றின் பின் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஹூஸ்டண் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜாய் மித்ரா, முரளிதர் எல்.ஹெக்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நீண்டகால மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக வயதானவர்கள், இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

    கொரோனா தொற்று மற்ற முக்கிய உறுப்புகளை போலவே மூளையிலும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மூளை வரைபட ஆய்வுகளில் ரத்தம் கசியும் ஆழமான புண்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இவை அறிவாற்றலையும், நினைவுத்திறனையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. இதன் கூறுகள் அல்சைமர், பார்கின்சன் ஆகிய நோய்களுடன் ஒத்திருக்கின்றன. உரிய நேரத்தில் கண்டறியா விட்டால் இந்த பாதிப்புகளை சரிசெய்ய இயலாது.

    கொரோனா நோயாளிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர் தங்களுக்கு நினைவு இழப்பு, தினசரி நடவடிக்கைகளை மறத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளனர். கொரோனா தொற்றால் மூளை செல்கள் வயதாவது விரைவுபடுத்தப்படுகிறது.

    கொரோனா வைரஸ் செல்களில் ஊடுருவும் போது அந்த செல்கள் செயலற்றதாகிறது அல்லது இறந்துவிடுகிறது. இதனால் வயதாகும் போது ஏற்படும் மூளை சுருக்கம் விரைவிலேயே ஏற்படுகிறது.

    கொரோனா தொற்றால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள், மூளை புண்களால் ஏற்படும் நுரையீரல், இதயம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த பல்வேறு நிலைகளில் தொடர் ஆய்வுகள் மேற் கொண்டு வருகிறோம்.

    தடுப்பூசி செலுத்துவது, உரிய சுகாதார முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவராமல் தடுப்பதுடன் நீண்ட கால பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×