search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்மியாட்டம்"

    • இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர்
    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்று உற்சாக நடனத்தினை இசைக்கேற்றார் போலும் ,பாடலுக்கு ஏற்றார் போலும் வெளிப்படுத்தினர்.

     

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சினிமா, ஆடல் பாடல் என கவனம் செலுத்தி வரும் நிலையில் அழிந்து வரக்கூடிய இந்த பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.மேலும் இந்த மாதிரியான பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள்.

    உடுமலை:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன்,மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி ஆனந்தன் தொடங்கி வைத்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள். ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இதில் உடுமலை தாசில்தார் சுந்தரம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை அமராவதி அணைப்பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார்.

    அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    • ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர்.
    • வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது .

    இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பவளக்கொடி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் பாடினர். குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர். சிறு வயது முதல் 50 வரையிலான ஆண்கள், பெண்கள் உலக சாதனை நிகழ்ச்சிக்காக பாரம்பரியமான உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். வள்ளி கும்மியாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    • நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.
    • தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும்

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக மங்கை வள்ளி கும்மி குழுவின் 75-வது பவள விழாவையொட்டி வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கும்மியாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ரசித்து பார்த்தார்.

    2ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கொங்கு பாரம்பரிய கும்மியாட்ட கலை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நாட்டுப்புற பாடல் பாடி ஆடுவது தான் இதன் சிறப்பம்சம். பல்வேறு இடங்களில் இந்த கலையை நடத்தி வரும் கலைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொங்கு மண்டலத்தில் கோவில் திருவிழாக்களின் போதும், குடமுழுக்கின் போதும், திருமண நிகழ்ச்சியின் போதும் பெண்கள் ஒன்று கூடி பாடுவது மட்டுமல்லாமல், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கலந்து கொண்டு கிராமிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான கலை ஆகும். நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.

    திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்ற நமது முன்னோர்களின் கனவை நமது சகோதரிகள் நிறைவேற்றி வருகிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது இந்த கும்மியாட்ட கலையை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடினர். 

    • கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் ஆடினர்.
    • ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அங்காள அம்மன் கோவிலில் வெற்றிவேல் முருகன் கும்மியாட்ட குழுவினர் 60 நாள் கும்மியாட்ட பயிற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் ஆடினர். முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மியாட்டம் ஆடினர். ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.

    • கொங்கு மண்டல பகுதியில் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது முளைப்பாரி எடுத்து கும்மியடிக்கின்றனர்.
    • கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளை பற்றிய பாடலை பாடி கும்மியடித்து ஆடுகின்றனர்.

    பல்லடம்:

    தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மி ஆட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்களால் மறுமலர்ச்சி பெற்று வருகிறது. கும்மியாட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கும்மியில் பூந்தட்டு கும்மி, குலவை கும்மி, தீப கும்மி, கதிர் கும்மி, முளைப்பாரி கும்மி என பல வகை உண்டு. நாளடைவில் இதற்காக இலக்கியங்களும் உருவாகி விட்டன.

    வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி என பலவகை கும்மி இலக்கியங்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு கும்மி ஆட்டத்திற்கு என்று பண்டை கால சிறப்புகள் உள்ளன.

    இந்தநிலையில் அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கும்மி ஆட்டக்குழு ஆசிரியர் ஒருவர் கூறுகையில், கும்மி கொட்டுதல் என்ற சொல் கை கொட்டுதல் என்று பொருள்படும். இது மெல்ல நடந்து நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிந்து அடித்தல், குதித்துக்குதித்து அடித்தல், தன் கையைக் கொட்டி அடித்தல், எதிரில் உள்ளவர்கள் கைகளுடன் கொட்டியடித்தல் ஆகிய 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களை கொண்டே வந்துள்ளது.

    கொங்கு மண்டல பகுதியில் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது முளைப்பாரி எடுத்து கும்மியடிக்கின்றனர். முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன் 6 நாளும் கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடப்படுகிறது. இந்த கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளை பற்றிய பாடலை பாடி கும்மியடித்து ஆடுகின்றனர்.

    எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தாலும் விநாயகரை வணங்கியே மக்கள் அந்நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். அதுபோல கும்மி அடிக்க ஆரம்பிக்கும் பொழுது முதலில் விநாயகரை வணங்கியே ஆரம்பிக்கின்றனர். முந்தி முந்தி விநாயகரே என்று விநாயகரை வணங்கி ஆரம்பித்து தொடர்ந்து முளைப்பாரியின் படி நிலைகளை பாடுகின்றனர்.

    கும்மியின் இறுதியில் ஊரைப்பாடுவது மட்டுமல்லாமல் பாடியோருக்கு மாரியம்மன் பரிசு கொடுப்பதாகவும் பாடி முடிப்பார்கள். கொங்கு மண்டலத்தில் பழங்காலத்தில் இருந்தே வள்ளி கும்மி ஆட்டம் இருந்து வந்துள்ளது. விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவதே வள்ளி கும்மியாட்டம் ஆகும். அக்காலத்தில் தினைக்காட்டில் இரவில் பரண் மீது இருந்தவாறு காவல் காக்கும் பொறுப்பை ஏற்று பெண்கள் செய்து வந்துள்ளனர் என்பது வள்ளி கும்மியில் தெரியவருகிறது. 1987 ம் ஆண்டு வரை கோவில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி ஆட்டம் மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் தான் முதன் முதலாக வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. முன்பு ஆண்கள் மட்டுமே ஆடி வந்த வள்ளி கும்மியாட்டத்தில் தற்போது பெண்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று ஆடி வருகின்றனர். இந்த கும்மியாட்டத்தை 30 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் கற்றுக்கொள்ளலாம். தினசரி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2½ மணி நேரம் ஆகும். இது வரை 2 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து உள்ளோம். வள்ளி கும்மி ஆட்டம் மூலம் மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை வளம், மது, புகை, பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பாடல்கள் பாடி நடனம் மூலம் புதுமையாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வருகிறோம்.

    அரசு விழாக்கள், கோவில் திருவிழாக்களில் கும்மி ஆட்டம் உள்ளிட்ட பழங்கால கலைகள் நடத்திட சன்மானத்துடன் அனுமதி வழங்கினால் இது போன்ற நாட்டுப்புறக் கலைகள் புத்துயிர் பெறும். மேலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை கற்று கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. அப்பயிற்சி பெற விரும்புவோருக்கு பயிற்சி ஊக்கத்தொகையை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. இது போல் தமிழக அரசும் நம்முடைய மாநிலத்தில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    கும்மி என்பது உடலுக்கும், மனதிற்கும் மகிழ்ச்சி அளிக்கும் சிறந்த கலை ஆகும். இக்கலையை கற்கும் ஆர்வம் தமிழகத்தில் மக்களிடையே அண்மைக்காலமாக பெருகி வருகிறது. இதனால் காலப்போக்கில் மறந்து போன கும்மி ஆட்டக்கலை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள்,பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி, கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகி சின்னச்சாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    ×