search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் ஆர்வமுடன் கும்மியாட்ட பயிற்சி பெறும் பெண்கள்- அரசு உதவித்தொகை வழங்க கோரிக்கை
    X
    பல்லடம் கோவில் திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்ற காட்சி.

    திருப்பூரில் ஆர்வமுடன் கும்மியாட்ட பயிற்சி பெறும் பெண்கள்- அரசு உதவித்தொகை வழங்க கோரிக்கை

    • கொங்கு மண்டல பகுதியில் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது முளைப்பாரி எடுத்து கும்மியடிக்கின்றனர்.
    • கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளை பற்றிய பாடலை பாடி கும்மியடித்து ஆடுகின்றனர்.

    பல்லடம்:

    தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மி ஆட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்களால் மறுமலர்ச்சி பெற்று வருகிறது. கும்மியாட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கும்மியில் பூந்தட்டு கும்மி, குலவை கும்மி, தீப கும்மி, கதிர் கும்மி, முளைப்பாரி கும்மி என பல வகை உண்டு. நாளடைவில் இதற்காக இலக்கியங்களும் உருவாகி விட்டன.

    வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி என பலவகை கும்மி இலக்கியங்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு கும்மி ஆட்டத்திற்கு என்று பண்டை கால சிறப்புகள் உள்ளன.

    இந்தநிலையில் அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கும்மி ஆட்டக்குழு ஆசிரியர் ஒருவர் கூறுகையில், கும்மி கொட்டுதல் என்ற சொல் கை கொட்டுதல் என்று பொருள்படும். இது மெல்ல நடந்து நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிந்து அடித்தல், குதித்துக்குதித்து அடித்தல், தன் கையைக் கொட்டி அடித்தல், எதிரில் உள்ளவர்கள் கைகளுடன் கொட்டியடித்தல் ஆகிய 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களை கொண்டே வந்துள்ளது.

    கொங்கு மண்டல பகுதியில் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின்போது முளைப்பாரி எடுத்து கும்மியடிக்கின்றனர். முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன் 6 நாளும் கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடப்படுகிறது. இந்த கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளை பற்றிய பாடலை பாடி கும்மியடித்து ஆடுகின்றனர்.

    எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தாலும் விநாயகரை வணங்கியே மக்கள் அந்நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். அதுபோல கும்மி அடிக்க ஆரம்பிக்கும் பொழுது முதலில் விநாயகரை வணங்கியே ஆரம்பிக்கின்றனர். முந்தி முந்தி விநாயகரே என்று விநாயகரை வணங்கி ஆரம்பித்து தொடர்ந்து முளைப்பாரியின் படி நிலைகளை பாடுகின்றனர்.

    கும்மியின் இறுதியில் ஊரைப்பாடுவது மட்டுமல்லாமல் பாடியோருக்கு மாரியம்மன் பரிசு கொடுப்பதாகவும் பாடி முடிப்பார்கள். கொங்கு மண்டலத்தில் பழங்காலத்தில் இருந்தே வள்ளி கும்மி ஆட்டம் இருந்து வந்துள்ளது. விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவதே வள்ளி கும்மியாட்டம் ஆகும். அக்காலத்தில் தினைக்காட்டில் இரவில் பரண் மீது இருந்தவாறு காவல் காக்கும் பொறுப்பை ஏற்று பெண்கள் செய்து வந்துள்ளனர் என்பது வள்ளி கும்மியில் தெரியவருகிறது. 1987 ம் ஆண்டு வரை கோவில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி ஆட்டம் மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் தான் முதன் முதலாக வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. முன்பு ஆண்கள் மட்டுமே ஆடி வந்த வள்ளி கும்மியாட்டத்தில் தற்போது பெண்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று ஆடி வருகின்றனர். இந்த கும்மியாட்டத்தை 30 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் கற்றுக்கொள்ளலாம். தினசரி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2½ மணி நேரம் ஆகும். இது வரை 2 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து உள்ளோம். வள்ளி கும்மி ஆட்டம் மூலம் மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை வளம், மது, புகை, பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பாடல்கள் பாடி நடனம் மூலம் புதுமையாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வருகிறோம்.

    அரசு விழாக்கள், கோவில் திருவிழாக்களில் கும்மி ஆட்டம் உள்ளிட்ட பழங்கால கலைகள் நடத்திட சன்மானத்துடன் அனுமதி வழங்கினால் இது போன்ற நாட்டுப்புறக் கலைகள் புத்துயிர் பெறும். மேலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை கற்று கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. அப்பயிற்சி பெற விரும்புவோருக்கு பயிற்சி ஊக்கத்தொகையை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. இது போல் தமிழக அரசும் நம்முடைய மாநிலத்தில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    கும்மி என்பது உடலுக்கும், மனதிற்கும் மகிழ்ச்சி அளிக்கும் சிறந்த கலை ஆகும். இக்கலையை கற்கும் ஆர்வம் தமிழகத்தில் மக்களிடையே அண்மைக்காலமாக பெருகி வருகிறது. இதனால் காலப்போக்கில் மறந்து போன கும்மி ஆட்டக்கலை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×