search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிக்குடம்"

    அவினாசி அருகே குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகளை கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் காசிக்கவுண்டன் புதூர், கருணைபாளையம் கொடிக்காத்த குமரன் நகர், வி.பி.கார்டன், பாரதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீர், ஆழ்குழாய் தண்ணீர் எதுவும் கிடைப்பதில்லை.

    கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10 மணி அளவில் அவினாசி-மங்கலம் சாலையில் ராயன் கோவில் பிரிவு அருகே அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் “எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக 20 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குறைந்த அளவே கிடைக்கிறது. தெருவில் எந்த மின்விளக்குகளும் எரிவதில்லை, வருடகணக்கில் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே குவிந்து கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளது. குடி நீருக்காக காலை நேரத்தில் குடங்களை எடுத்துக்கொண்டு அவினாசிக்கு சென்றுவரவேண்டிய அவல நிலை உள்ளது.

    இதனால் எங்களது அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் முறையாக வழங்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்களால் எந்த பயனும் இல்லை. எனவே தடையின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் ” என்று கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்திலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    முடிவில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், தெருவிளக்குகள் எரிவதற்கும், கழிவுநீர்கால்வாய்களை தூர்வாரவும் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
    குடிநீர் வினியோகம் செய்ய கோரி தஞ்சையில், காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி முத்துசாமிநகர், ராதாகிருஷ்ணன் நகர், வி.எஸ்.காலனி, ஏ.கே.எல்.காலனி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி வைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள், காலிக்குடங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் சிலரும் குடங்களுடன் பங்கேற்றனர். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான ஆழ்குழாய் கிணற்றை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெண்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பெண்கள் சிலர் கூறும்போது, ஆறுகளில் தண்ணீர் நிரம்பி செல்லும் நேரத்தில் கூட நாங்கள் குடிநீருக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்படுகிறோம். வீட்டு வேலைகளும் செய்ய முடியவில்லை. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம் என்றனர். 
    விராலிமலை அருகே நம்பம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் நம்பம்பட்டி, கவரப்பட்டி மற்றும் கோட்டைக்காரன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ளவர்களுக்கு இதுவரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீரை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக போதிய அளவு குடிநீர் வராததால் பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி பொதுமக்கள் நேற்று காலை விராலிமலை-மணப்பாறை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டி சின்னம்மாள்(60) என்பவர் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.


    விராலிமலை ஒன்றியம் நம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சின்னம்மாளுக்குஅருகில் இருப்பவர்கள் உதவியதை படத்தில் காணலாம்.


    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பதாக கூறி சாலைமறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் கோட்டைக்காரன்பட்டி, கவரப்பட்டி ஆகிய ஊர்களிலும் பொதுமக்கள் குடிதண்ணீர் கேட்டு கோட்டைக்காரன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக கூறியதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலைமறியலால் அப்பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    கறம்பக்குடி அருகே சூரக்காட்டில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சாந்தம்பட்டி, தெற்குபல்லவராயன்பத்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 4 சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தில் இருந்த மின்மாற்றி வெடித்து பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மின்மாற்றியை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சூரக்காட்டில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெட்டன்விடுதி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மகாதேவராஜ், மழையூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றியை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வானதிராயன்பட்டி ஊராட்சியை சேர்ந்த செவனம்பட்டி, நடுப்பட்டி, நரியக்கோண்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செவனம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக நடுப்பட்டி மற்றும் நரியகோண்பட்டி ஆகிய ஊர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன் படுத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த நடுப்பட்டி மற்றும் நரியக்கோண்பட்டி ஊர்பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை செக்போஸ்ட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதுகுறித்து தகவல் அறிந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    1 மாதமாக குடிநீர் சரிவர வராததை கண்டித்து தஞ்சை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இந்த தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 1 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சரிவர தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் அன்றாடம் தண்ணீருக்காக அலைந்த வண்ணம் இருந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் இந்த மறியல் போராட்டம் நடந்ததால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்ட பின்னர் போக்குவரத்து சீரானது. 
    இளையான்குடி, ரசூலா சமுத்திரத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை செய்துதர கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இளையான்குடி:

    இளையான்குடியை அடுத்த ரசூலா சமுத்திரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு அடிப்படை வசதிகள் என்பது சரிவர செய்துதரவில்லை என்று பலமுறை இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ரசூலா சமுத்திரத்தில் சீராக குடிநீர் வழங்காததால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தெருக்களின் சாலை சேதமடைந்தும், மின்விளக்குகள் சரிவர எரியாமலும் உள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் ரசூலா சமுத்திரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டும், இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, தங்களது கோரிக்கைகளை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிடுமாறு கூறிவிட்டனர். அதன்பின்பு அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போலீசாரும், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாராமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    மன்னார்குடியில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காளிகவுண்டன் தெருவில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

    அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மீமிசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே அரசங்கரை மற்றும் துத்தனேந்தல் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வண்டிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ.20 கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று அரசங்கரையில் உள்ள கிழக்கு கடற்கரைசாலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் ஷாஜகான் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×