search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asking drinking water"

    சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் 1,400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 8 வார்டுகளும், இதன் துணை கிராமம் பாவளத்தில் 4 வார்டுகளும் உள்ளது.

    இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரவுபதியம்மன் கோவில், 4-வது வாய்க்கால், ஆற்றங்கரை, ஏரி ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் மேட்டுத்தெரு 12-வது வார்டு மற்றும் மேற்குத்தெரு 10-வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.30 மணி அளவில் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் காலை 7.15 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வி, கருணாநிதி ஆகியோர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் அப்பகுதியில் நேற்று மதியம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குகுப்பணாபுரம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் சரியான முறையில் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று காலை அந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

    அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிர மணியம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உடனே அந்த பகுதியில் ஆழ்துளைகிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் திடீர் முற்றுகையால் சிவகாசி யூனியன் அலுவலகம் காலை 10¾ மணி முதல் 11¾ மணி வரை பரபரப்பாக காணப்பட்டது. 
    குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வானதிராயன்பட்டி ஊராட்சியை சேர்ந்த செவனம்பட்டி, நடுப்பட்டி, நரியக்கோண்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செவனம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக நடுப்பட்டி மற்றும் நரியகோண்பட்டி ஆகிய ஊர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன் படுத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த நடுப்பட்டி மற்றும் நரியக்கோண்பட்டி ஊர்பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை செக்போஸ்ட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதுகுறித்து தகவல் அறிந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    செந்துறை:

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி செந்துறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×