search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.டி. ஊழியர்"

    • சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
    • ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

    அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • ரொம்ப சாரி அம்மா... மன்னித்து விடு... என குறுஞ்செய்தி அனுப்பினார்

    கோவை,

    கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரு டனான காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலை தொடர்ந்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி பெரியநாயக்கன்பாளையம் பகுதிையச் சேர்ந்த வாலிபர் ஒருவரை மணமகனாக பார்த்து வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திருமணம் செய்வது என பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இ னால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பு தனது காதலனுடன் சென்று விட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிரித்து விடு வார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் தனது தாயின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார்.

    அதில் நானும், காதலித்த வாலிபரும் திருமணம் செய்து கொண்டோம். ரொம்ப சாரி அம்மா, மன்னித்து விடு என அனுப்பி இருந்தார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகளை கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் தந்தை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு மணக்கோலத்தில் வந்தனர். போலீசாரிடம் இளம்பெண் தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    • வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை
    • கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல், சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் புத்தேரி பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சுஜித் குமார் (27), ஒழுகினசேரியை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (25) என்பது தெரியவந்தது.

    சுஜித் குமார் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீ ராமச்சந்தி ரன் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்கும், சுஜித் குமாரின் தாயாரின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்க நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி இடையே உள்ள காட்சி முனையை ஐ.டி. ஊழியர் பிரீதம் ரசித்து கொண்டிருந்தார்.
    • 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த பிரீதமை மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை பீளமேடு அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரீதம் (வயது 21). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு சென்றார்.

    செல்லும் வழியில் கோத்தகிரி -மேட்டுப்பாளையம் இடையே உள்ள காட்சி முனையில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் 25 பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று காட்சி முனையில் இருந்து தவறி விழுந்த பிரீதமை தேடினர். 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த அவரை மீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட பிரீதமை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×