search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருது விடும் விழா"

    • அரசுஅனுமதி பெற்று எருது விடும் விழா நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா இம்மிடிநாயக்கனப்பள்ளி அருகே பேடர்பள்ளி கிராமத்தில் அரசுஅனுமதி முலம் எருது விடும் விழா நடைபெற்றது.

    இந்தவிழாவிற்கு இம்மிடிநாயக்கனப்பள்ளி, பேடர் ப்பள்ளி, சின்னார், ஒடையனுர், சின்னகானப்பள்ளி, பீர்பள்ளி, முருக்கனப்பள்ளி, சாமல் பள்ளம், மேலுமலை, காளிங்காவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுக்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.

    300-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. அரசு விதிகளின் படி எருது ஒடுபாதை அமைத்து இரு புறமும் தடுப்பு சுவர் அமைத்து பார்வையாளர்களுக்கு எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அமைக்கப் பட்டு இருந்தது.

    எருதுகளை வரிசையில் நிற்க வைத்து அதன் பின் நம்பர் மூலம் அறிவிப்பு செய்த பின்பு ஒட விட்டனர் .இந்த விழாவிற்கு சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி தலைமையில் காவலர்கள் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கால்நடை மருத்துவர்கள் வருகை தந்து முகாம் அமைத்து இந்தனர். அரசு மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வாகனம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் எருது விடும் விழா நடந்தது.

    • அடுத்த வாரம் விழா நடத்த ஏற்பாடு
    • பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நரியம்பட்டு ஊராட்சி மற்றும் வீராங்குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடத்துவது குறித்து நடந்து வரும் பணிகளை வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் உமராபாத் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

    அடுத்த வாரம் 2 ஊராட்சிகளிலும் திருவிழா மற்றும் எருது விடும் திருவிழா நடைபெறுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து எருது விடும் சாலை சரியாக இருக்கிறதா பொது மக்களுக்கு இடையூறாக உள்ளதா மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

    • நாள் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தேசிய நெடுஞ்சாலை அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், எருது விடும் விழா குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் பேசியதாவது;-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த சம்பந்தப்பட்ட விழாக்குழுவினர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இடம், நாள் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காளைகளுக்கான உடற்தகுதி சான்று, எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் பங்கேற்பது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

    மாற்று நபர்களுக்கு அனுமதி கிடையாது. எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் 3 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர்கள் ராஜேந்திரன், இளங்கோவன், மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் எருது விடும் விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அணைக்கட்டு கொட்டாவூரில் எருது விடும் விழா நடந்தது
    • மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    சுமார் 300 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

    திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, போன்ற பல்வேறு மாவட்டங்களில், இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன.

    வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த விழாவை காண ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைக்கு மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும், மாடு விடும் திருவிழாவில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 3 பேர் கை, கால் முறிவு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காகவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அனுமதி மறுக்கப்பட்டதால் எருதுவிடும் விழாவிற்கு காத்திருந்த காளைகளை அவிழ்த்து விட்டனர்.
    • எருதுவிடும் விழா நடைபெறாமல் போனால் சாமிகுத்தம் ஏற்பட்டுவிடும் என ஊர் பெரியவர்கள் கூறினர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் பொங்கல் முடிந்த பிறகு ஆண்டு தோறும் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டும் எருதுவிடும் விழாவிற்கு கிராம மக்கள் பாரூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டனர்.

    ஆனால் எருதுவிடும் விழாவிற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால் காளைகளுடன் எதிர்பார்ப்பில் காத்திருந்த ஊர் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

    அனுமதி மறுக்கப்பட்டதால் எருதுவிடும் விழாவிற்கு காத்திருந்த காளைகளை அவிழ்த்து விட்டனர்.

    எருதுவிடும் விழா நடைபெறாமல் போனால் சாமிகுத்தம் ஏற்பட்டுவிடும் என ஊர் பெரியவர்கள் கூறினர். இதனால் கீழ்குப்பம் ஊர் கவுண்டர் சசிக்கு எருதுகளுக்கு போல் கயிறு கட்டி மாரியம்மன் கோவிலை மூன்று முறை வலம் வந்து அவிழ்த்து விட்டதன் மூலம் சாமி குத்தம் நீங்கியதாக கிராம மக்கள் நம்பினர்.

    போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் எருதுவிடும் விழா நடைபெறும் கிராமங்களில் விழா தடைப்பட்டால் ஊர் கவுண்டரை வைத்து சாமிகுத்தத்தை தவிர்ப்பதற்காக இது போன்று செயல்படுவது வழக்கம்.

    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டம் எஸ்பிக்கள் காமன் தொட்டி கிராமத்திற்கு வருகை.
    • சேலம் சரக டிஐஜி சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

    இதனிடையே ஓசூர் அருகே கோப சந்திரம் பகுதியில் சின்ன திருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர்.

    ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

    அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

    மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டம் எஸ்பிக்கள் காமன் தொட்டி கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். சேலம் சரக டிஐஜியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுகிறார்.

    • மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஜி.என்.பாளையத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    ஜி.என்.பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செங்கம் சுற்றுவட்ட பகுதியிலிருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டு ஓடியது.

    இந்த நிகழ்வில் மிக வேகமாக குறிப்பிட்ட எல்லையை குறித்த நேரத்தில் கடந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.

    • விநாயகர் கோவில் முன்பு 145-வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.
    • நாயுடுகள் நல சங்கம் , வாணியர் நல சங்கம் வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் எருதுகள் விடப்பட்டன.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் முன்பு 145-வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.

    இதனை ஊர் கவுண்டர் மகேந்திரன் எருதுவிற்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இருபதுக்கும் மேற்பட்ட எருதுகள் கோயிலை சுற்றி வலம் வந்தன. எருதுகளை பிடிக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.

    காவேரிப்பட்டினத்தை சுற்றியுள்ள கருகன்சாவடி, ஜமேதர் மேடு , நரிமேடு , சந்தாபுரம் ,காவேரிப்பட்டணம் மற்றும் நாயுடுகள் நல சங்கம் , வாணியர் நல சங்கம் வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் எருதுகள் விடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஊர் கவுண்டர் பெருமாள் சார்பாக ஊர் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வக்கீல் ரவிச்சந்திரன், சின்னசாமி, தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஜே .கே. எஸ். பாபு , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அருள், தவமணி,பசுபதி,சார்லஸ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் இருவருக்கு மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில்அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

    • பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
    • காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றன.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, கட்டில், குக்கர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.

    இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

    இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    • ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.
    • போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது.

    மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.

    ஆனால் பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகினர்.

    இதே போல், பழையபேட்டை மேல்தெருவில், 50-க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர். ஆனால் பாதுகாப்பிற்காக போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டன. இதற்காக அந்த பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    மாடுகள் துள்ளி குதித்தபடி ஓடி வந்தன. இதில் கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. இதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளைக் கொண்டு வந்திருந்தனர். எருது விடும் விழாவைக்காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரிநாள் பண்டிகையையொட்டி எருது விடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திகானூர் கிராமத்தில் இன்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

    டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.

    இதனால் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் கொத்து கொத்தாக விழுந்தனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் (வயது 12) என்ற சிறுவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அந்த சிறுவனுக்கு அங்கிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிசிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • எருது விடும் விழா நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
    • எருது விடும் விழா நிகழச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை நடத்த அரசின் முன் அனுமதி பெற்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எருது விடும் விழா நிகழச்சியை 2023-ம் ஆண்டில் நடத்த அரசின் முன் அனுமதி பெறுவதுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, எருது விடும் விழா நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

    அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு, அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    எருது விடும் விழா நிகழச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு நபர்களும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்த 2 நாட்களுக்கள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    முன் அனுமதி பெற்ற எருது விடும் விழா நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திட வேண்டும்.

    எருது விடும் விழா நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும், அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நிகழ்ச்சியை, அரசின் வழிகாட்டுதல்களின் படியும், சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×