search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ஜித சேவைகள் ரத்து"

    • வசந்தோற்சவம் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். அதன்பின் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு வசந்த உற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர். வசந்தோற்சவம் முடிந்ததும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

    கடைசி நாளான 23-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியுடன் வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்ததும், மாலை கோவிலை அடைகிறார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது.

    சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க உற்சவர்களுக்கு வசந்த காலத்தில் நடத்தப்படும் உற்சவம் என்பதால், `வசந்தோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வசந்தோற்சவத்தில் உற்சவர்களுக்கு மணங்கமழும் மலர்களை சமர்ப்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் வசந்தோற்சவத்தில் நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

    ஆர்ஜித சேவைகள் ரத்து

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டதள பாத பத்மாராதன சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    ×