search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவிநாசி"

    • அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.
    • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இரைத்தேடியும், தண்ணீருக்காகவும் மான்கள் காட்டைவிட்டு வெளியேறும். அப்போது நாய்கள் மான்களை கடித்து குதறுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தெக்கலூர் காட்டுப்பகுதியிலிருந்து இரண்டு மான்கள் தண்ணீர் தேடி தெக்கலூர் ஏரிப்பாளையத்தில் ஒரு கோவில் அருகே வந்துள்ளது. இதைப் பார்த்து அங்கிருந்த தெருநாய்கள் மான்களை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் ஒரு மான்காட்டுக்குள் மறைந்து தப்பியது. மற்றொரு 4 வயது மான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு பல நாட்களில் பலத்த மழை பெய்தது.
    அவிநாசி:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அவிநாசி, அன்னூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கு பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்படுகிறது.

    அவிநாசியில் உள்ள முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம், கருமாபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், கருவலூர், ராமநாதபுரம் என 7 ஊராட்சிகளை இணைத்து ரூ.55கோடி செலவில் புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கான பூமி பூஜை கடந்தாண்டு நவம்பர் 26-ந்தேதி முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் முறியாண்டம்பாளையம் ஊராட்சியில்  மட்டும் 9 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 3லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி,15கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    இப்பணி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவுற்று வெள்ளோட்டம் பார்க்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இப்பணி நிறைவுற்றால் தினசரி 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். மக்களின் தண்ணீர் தேவை    தன்னிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு பல நாட்களில் பலத்த மழை பெய்தது. மழையால் தத்தனூர், முறியாண்டம்பாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    தத்தனூரில் நெசவாளர்களின் வீடுகளில் தோண்டப்பட்டிருந்த தறிக்குழியில் தண்ணீர் ஊற்றெடுக்கும் அளவுக்குமழை பெய்தது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய வறட்சியால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    நீர்நிலைகள் வறண்டதால் மக்கள் தண்ணீருக்கு  அலை மோதினர். இதனால் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில்  நீரோட்டம் உள்ள இடங்களில் போர்வெல்  தோண்டப்பட்டது. அதிகபட்சம் 1000 முதல் 1200 அடி ஆழத்திற்கு போர்வெல் தோண்டப்பட்டு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டது.

    சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததில் வெறும் 50 முதல் 100அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தத்தனூர், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட சுற்றியுள்ள ஊராட்சிகளில் போர்வெல் ஆழத்தை குறைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    1000அடிக்கும் கீழ் தோண்டப்பட்டு பதிக்கப்பட்ட குழாய்கள் வெறும் 300 முதல் 500அடி வரை  மேல் எழுப்பி பொருத்தப்படுகின்றன. வரும் காலங்களிலும் நிலத்தடி நீர்மட்டத்தை தக்கவைக்க கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டை  உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கி  வைக்க கிராமஊராட்சிகள் முனைப்பு காட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
    தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    அவிநாசி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அவிநாசியில்  நடைபெற்றது. அவிநாசி கூட்டுறவு சங்கங்களில் நிலவி வரும் உர தட்டுப்பாட்டால் விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. 

    இதனால் வெளிச்சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க வேண்டும். 

    தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

    எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய நிர்வாகிகள் முத்துரத்தினம், வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    தென் மாவட்டங்களில் விதை பயன்பாட்டுக்கெனவும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று அங்கு சில்லறை விற்பனை செய்கின்றனர்.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர், ஈரோடு மாவட்டம் நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவு நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலக்கடலை அறுவடை சீசன் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    இருப்பினும் பெரிய விவசாயிகள் பலர் நிலக்கடலையை இருப்பு வைத்து சீசன் முடியும் தருவாயில் விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏலத்துக்கு எடுத்து வருகின்றனர். அதன்படி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்துக்கு எடுத்து வரப்படும் நிலக்கடலைக்கு அதிகபட்சம் கிலோவுக்கு ரூ.74 வரை விலை கிடைத்துள்ளது. ஆனால் சீசன் சமயத்தில் ரூ.68 வரை மட்டுமே விலை கிடைத்தது.

    ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் கூறுகையில், தற்போது சீசன் முடிவுற்ற தருவாயில் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்திக்கு இந்த ஏல மையத்தில் இருந்து அதிகளவு நிலக்கடலை கொள்முதல் செய்யப்படுகிறது.

    விளைச்சல் அதிகம் தருவதால் விருதுநகர், தென்காசி, அருப்புக்கோட்டை உட்பட தென் மாவட்டங்களில் விதை பயன்பாட்டுக்கெனவும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று அங்கு சில்லறை விற்பனை செய்கின்றனர் என்றனர்.
    கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிலை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பக்தர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் பழமை வாய்ந்த திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறையினர் நிர்வகித்து வருகின்றனர். கோவில் 5.96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

    இந்தநிலையில் கோவில் நுழைவுவாயில் பகுதியை ஒட்டி கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக பக்தர்கள் புகார் கூறி அற நிலையத்துறைக்கு மனு அனுப்பினர்.

    அதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிலை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பக்தர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். அமைச்சரின் உத்தரவின்படி நிலம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் அலுவலர்கள் ரூ. 2 கோடி  மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கம்பி வேலி அமைத்தனர். 
    குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    இதற்கிடையில், தெக்கலூர் அய்யன் கோயில் கருவேலங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: 

    தெக்கலூர் காமநாயக்கன்பாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பல தலைமுறைகள் கடந்த நிலையில் ஒரே இடத்தில் நான்கு குடும்பங்களாக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகிறோம். 

    வீட்டுமனை பட்டா கேட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தற்போது தெக்கலூர் அருகே அய்யன் கோயில் பின்புறம் அரசு நிலத்தில் குடிசை அமைத்துள்ளோம் என்றனர்

    இதுகுறித்து வட்டாட்சியர் ராகவி கூறுகையில்:

    இந்த இடம் வண்டி பாதை அல்லது குட்டை புறம்போக்கு என்று வருவாய் பதிவேட்டில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தநிலையில் இன்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    அவிநாசி, சேவூர் ரோடு சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 983 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
    அவிநாசி:

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் 5 ‘பிளாக்கு’களில், 225 வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில்  பயனாளிகள் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதற்காக தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினர் மூலம் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர், மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    அதன்படி 1,716 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் வருவாய்த்துறை சார்பில் 960 மனுக்கள் கலெக்டரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவிநாசி, சேவூர் ரோடு சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 983 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே 160 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    43 வீடுகள் விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 40 வீடுகள் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது எனவும், எஞ்சிய வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
    கருமாபாளையம் குட்டையில் தேங்கும் தண்ணீர், செம்மாண்டம்பாளையம் வழியாக சங்கமாங்குளத்துக்கு செல்கிறது.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் சேவூர் அடுத்த கருமாபாளையம் ஊராட்சி ஏ.டி., காலனியில் குட்டை உள்ளது. தற்போது பெய்த மழையில் குட்டை நிரம்பியுள்ளது. குட்டை நடுவில் உள்ள பாதை தான், கருமாபாளையம் ஊருக்கு செல்வதற்கான பிரதான வழித்தடம். 

    இது குளத்தின் மட்டத்துக்கே இருப்பதால் பெருமழை சமயத்தில் குட்டையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வழித்தடத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலையுள்ளது.

    மேலும் குட்டையில் உள்ள தடுப்புச்சுவர் பலவீனமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஊருக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து கருமாபாளையம் ஊராட்சி தலைவர் சக்திவேல் கூறுகையில்:

    கருமாபாளையம் குட்டையில் தேங்கும் தண்ணீர், செம்மாண்டம்பாளையம் வழியாக சங்கமாங்குளத்துக்கு செல்கிறது. இதன் மூலம் சுற்றியுள்ள, 4, 5 கிராம ஊராட்சிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 

    இக்குட்டைக்கு பாதுகாப்பாக ‘பிளாட்பாரம்‘ அமைத்துக் கொடுப்பதுடன், குட்டையின் நடுவில் தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு மனு வழங்கியுள்ளோம் என்றார்.
    மொத்தம் 1,058 கி.மீ., நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 261 கி.மீ.,க்கு இரும்பு குழாய் பதிக்கப்பட உள்ள நிலையில் இதுவரை 217 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது.
    அவிநாசி:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,652 கோடி செலவில் அத்திக்கடவு -அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. மொத்தம் 1,045 குளம், குட்டைகள், 24 ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் நீரேற்று நிலைய கட்டுமானப்பணி முழுமை பெற்றுள்ளது. மேலும் அனைத்து நீரேற்று நிலையங்களிலும் டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

    மொத்தம் 1,058 கி.மீ., நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 261 கி.மீ.,க்கு இரும்பு குழாய் பதிக்கப்பட உள்ள நிலையில் இதுவரை 217 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது. 798 கி.மீ.,க்கு உயர் அடர்த்தி பாலியுரேத்தின் குழாய் பதிக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 642 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில்:

    இதுவரை 87 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மழையால் பணியில் சற்று தொய்வு தென்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பணிகள் நடந்து வருகின்றன.

    அடுத்தாண்டு ஜனவரியில் திட்டப்பணி நிறைவு பெற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழை வெளியேறும் நீரின் அடிப்படையில்  வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்றார்

    பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் பவானிசாகர் அணை வழியாக காளிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் நீரை 1.5 டி.எம்.சி.. அளவுக்கு நீரேற்று நிலையங்கள் மூலம் பெற்று இத்திட்டப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்தாண்டு பெய்த மழையால் அணையில் இருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேறியது. அடுத்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதம் பலத்த மழை பெய்து காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரிநீர் வெளியேறும்போது அத்திக்கடவு திட்டம் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.   
    வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், காரணப்பெருமாள் கோவில், பாதிரிமரத்து அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது. 

    வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக குளியல் மற்றும் கழிவறை கோவில் வளாகத்தில் உள்ளது. 

    ஆனால் கழிவறைகள் பராமரிப்பின்றி சுத்தம் செய்யாமல் பக்தர்களின் முகம் சுழிக்கும் அவலநிலையில் உள்ளது. மேலும் சரிவர தண்ணீர் வசதியும் இல்லை என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

    எனவே தினசரி திரளான பக்தர்கள் கூடும் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறையை முறையாக பாரமரித்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    முறியாண்டம்பாளையம் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த குட்டையில் சேகரமாகிறது.
    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பனங்குட்டை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் ரூ. 1.10 லட்சம் செலவில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது. முறியாண்டம்பாளையம் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த குட்டையில் சேகரமாகிறது.

    கடந்த 2020 ஜூலையில் பெய்த மழையில் குட்டை நிரம்பியது. பின் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர் வற்றியது. சமீபத்தில் பெய்த மழையில் இக்குட்டை நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைப்படி ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
    அவிநாசி:

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் 100 சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளர் பட்டியலில் துல்லிய தன்மையை கொண்டு வர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சில நாட்களுக்கு முன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைப்படி ஓட்டுச்சாவடிகளை தயார் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ‘வாக்காளர் பட்டியலில் திருத்தம், குறைகளை சரி செய்து, வரும் 24-ந் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அச்சுப்பணியை முடிக்க வேண்டும் எனவும், வரும் 25ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டும். 

    27-ந் தேதி வாக்காளர் பட்டியல் இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தினர் வேகம் காட்டி வருகின்றனர்.
    ×