search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikasi visakam"

    • தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார்.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் தந்த பல்லக்கு, மாலையில் தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது. நேற்று வைகாசி விசாக திருவிழா கொடிஇறக்குதலுடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்து தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனிப்பல்லக்கில் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு தேவர் தெய்வானை அம்மனிடம் தூது சென்று சமாதானப்படுத்தினார். வீரபாகு தேவராக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று திருஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார்.

    அதன்பின் கோவில் நடை திறந்து முத்துக்குமாரசுவாமியுடன், தெய்வானை அம்மன் சேர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    • விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு வல்லபகணபதி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கியவீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதுார், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.பின்னர் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று சாமி படி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேவ புஷ்கரணியில் சாமி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மகா அபிஷேகமும் நடந்தது.

    இதை தொடர்ந்து தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து மூர்திகம் (மூஞ்சூர்) வாகனத்தில் விநாயகர், மயில் வானத்தில் முருகன், அன்னப்பட்சி வாகனத்தில் மதுரநாயகி அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி சாமி வீதி உலா நடந்தது.

    வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பிராயச்சித்த அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர்.
    • வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    அறுபடைவீடுகளில் முதற்படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் 2-ந்தேதி விசாக விழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது.

    இதனையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் தயாராக இருந்த தங்க குதிரையில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து தங்க குதிரையில் அமர்ந்தபடி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு சன்னதி தெருவழியாக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர். காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒவ்வொரு மண்டகப்படியாக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 100 மண்டகப்படியிலும் முருகப்பெருமானுக்கு பல்வேறு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, மகாதீப, தூப ஆராதனை நடந்தது.

    கோவிலில் இருந்து மொட்டையரசு திடலுக்கு தங்கக்குதிரையில் வந்த முருகப்பெருமான், வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பூப்பல்லக்கில் தன் இருப்பிடம் திரும்பினார். மொட்டையரசு திடலில் இருந்து கோவில் வரை வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    • பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும்.

    இந்த திருவிழா 10 நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    வைகாசி விசாகமான நேற்று விழாவின் சிகர நாள் ஆகும். இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க அங்கிருந்து சண்முகப் பெருமான் புறப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். பாலாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

    இதனையடுத்து அதிகாலை 5.45 மணியில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பால் கொண்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இதனையொட்டி மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக, சாரை, சாரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து கோவிலில் குவிந்தனர்.

    பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, மற்றும் பறவை காவடி என விதவிதமான காவடிகளுடன் வந்தும், 10 அடி, 15 அடி, 25 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.. அப்போது பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.

    திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே அக்னி வார்த்து பூக்குழி தயாராக இருந்தது.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள வெயிலு உகந்த அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள். பின்னர் அவர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சென்று பாலாபிஷேகம் செய்து சண்முகப் பெருமானை வழிபட்டனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலைப் பொறுத்தவரை மலையை குடைந்து கருவறை அமைந்து இருப்பதால் இங்கு விக்ரங்களுக்கு அபிஷேகம் இல்லை. அதேசமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி செவ்வாய்க்கிழமை தோறும் பெரும்பாலான பக்தர்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திருவிழா நாளில் சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவது தனி சிறப்பாகும்.

    விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை 5.45 மணியில் இருந்து மதியம் 3.45 வரை இடைவிடாது 10 மணிநேரம் சண்முக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 2 மணிநேரம் பாலாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது

    • முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
    • சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும்.

    விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

    சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார். விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன். மற்றொருவர் அக்னி.

    இவர்கள் சகல மங்களங்களையும் அளிப்பவர்களாக தமது இருதிருக்கரங்களில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள். அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர்.

    விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

    இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிஉலா நடைபெறும்.
    • கொடிமரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா தனித் தன்மை கொண்டது. இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

    அன்றைய காலத்தில் கூண்டு வண்டிகளில் கட்டுச் சோற்றினை கட்டித்தொங்க விட்டு கூண்டின் மேல் சமையலுக்குத் தேவையான விறகு, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றி வைத்திருப்பார்கள். அவல், மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், அரிசிமாவு போன்றவற்றை பைகளில் வைத்திருப்பார்கள், வண்டியின் மேலும், உள்ளும் அடியிலும் வைக்கோலைக்கட்டி வைத் திருப்பார்கள்.

    அரிக்கேன் விளக்கு வண்டியின் அடியில் தொங்கும் அந்த விளக்கொளியில் குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் முப்பது, நாற்பது வண்டிகள் முற்காலத்தில் உவரி விசாகத்திற்கு வந்து செல்வார்கள்.

    வழியில் கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவி லுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர். ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர்.

    விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும். வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள். குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள்.

    முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடு கின்றனர்.

    உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங் களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

    கடலில் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள். தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடிமரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.

    குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவ தற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிஉலா நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம். பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண் ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.

    • காஞ்சி மகா பெரியவர் அவதரித்தது வைகாசி மாதமே!
    • வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாக கொண்டாடப்படுகிறது.

    1. வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

    6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி" என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    13. முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

    14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    15. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    20. கன்னியாகுமரி அம்மனுக்கு 'ஆராட்டு விழா' இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    21. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடை பெற்று வருகிறது.

    22. ராம-ராவண யுத்தத்தின்போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் போரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

    23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

    24. திருச்சி அருகில் 'ஐயர் மலை' என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

    25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • நாளை விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது.
    • 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. 10-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலையில் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
    • பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகவிழாவையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    வைகாசி விசாகத்தையொட்டி இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

    இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிதம்பர சுவாமிகள் சிறிய கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்தனர். சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடைபெற்றன.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவில் அடி வாரத்தில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி விளக்கேற்றி வழிபட்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள 8-ம் படை முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் இன்று சிறப்பு பூஜை நடை பெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து தரிசனம் செய்தனர்.

    பாரிமுனை ராசப்பா செட்டி தெருவில் அமைந்துள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இன்று அதிகாலை முதல் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இன்று மாலையில் பூக்கடை பகுதியில் உள்ள தெருக்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    கீழ்க்கட்டளை பெரிய தெரு போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • இன்று இரவு சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுயம்புலிங்கசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

    திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பக்தர்கள் சுவாமியை அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி நீண்ட வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சாயரட்சய பூஜை நடந்தது. தொடர்ந்து தென்னாடுடைய சிவன், முழுமுதற்கடவுள் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, சுயம்புலிங்க சுவாமி வரலாறு, வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேச்சை கடன் செலுத்தினர். அது கடற்கரையில் குன்றுபோல் காட்சியளித்தது ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இன்று இரவு விழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார். விசாகத் திருவிழாவில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி. முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், உறுப்பினர்கள் ராஜாமணி, ஜீவரத்தினம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்துள்ளார்.

    • ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடந்தது. கடந்த 13-ந்தேதி திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் விழா தொடங்கியது. விழாவில் ஞானசம்பந்தருக்கு சாமி, அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. நேற்றுமுன்தினம் ஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்கொடை, முத்து சின்னங்களுடன் முத்து திரு ஓடத்தில் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தல் விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து முத்துப்பல்லக்கு திருமேற்றளிகை கைலாசநாதர் கோவிலுக்கும், காலை 10 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோவிலுக்கும், மதியம் 12 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர். இரவு தேனுபுரீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள் முத்து விமானத்தில் காட்சியளிக்க ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.

    ×