search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Temple"

    • இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை: 

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோமீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்க முடியும்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தது. விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர். பரணி தீபத்தை முன்னிட்டு 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலை திக்குமுக்காடியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் 101 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு 2,700 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கார்த்திகை தீபம் நாளை ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி இன்று மற்றும் நாளையும் சென்னையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் அந்த ரெயில் 2 நாட்கள் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இன்று மற்றும் நாளையும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.

    இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர் பண்ருட்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சிபுரம், பெங்களூரு, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    தீப தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்து வருகின்றனர்.

    நகரில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை சுத்தம் செய்யப்பட்டு பளிச்சிடுகிறது.

    பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த நகருக்குள் வரும் 9 சாலைகளிலும் பார்க்கிங் மையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை சார்பில் கிரிவலப்பாதையில் 85 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்களும் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் எங்கும் அரோகரா கோஷம் என்ற மந்திரங்கள் பக்தர்களிடம் இருந்து வெளிப்படுகிறது. ஆன்மிக நகரம் பக்தி பரவசமாக காட்சி தருகிறது.

    • திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது.
    • திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று திருவண்ணாமலை வந்தார். அவர் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ. வேலு, கலெக்டர் முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள்.

    இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.

    பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

    கார்த்திகை தீபத்தின் போது வி.ஐ.பி. பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்காரம் நடைபெற உள்ளது. கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும். அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

    ரூ.100 தரிசன கட்டணம் எப்போதும் போல் அமலில் உள்ளது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தில் ஏமாற்றப்படுகிறார்கள்.

    இதனை தடுக்க ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் அமலில் உள்ளது. இது தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பக்தர்களிடம் ஆட்சேபனை குறித்து முன்னறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது.

    அனைத்து முன்மொழிவுகளும் பெற்ற பிறகு சிறப்பு தரிசன கட்டணத்தில் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள்.

    இந்த ஆண்டு அறுபடை முருகன் கோவில் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் திமுக ஆட்சியின் மீது விஷம பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.
    • மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.

    தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, ½ கிலோ நெய் ரூ.150, ¼ கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கை வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வந்து நெய் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இணைய வழியில் நெய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பக்தர்கள் நெய் காணிக்கைக்கான கட்டணம் செலுத்தலாம்.

    இந்த தகவல் கோவில் நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூலவர் சாமிகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
    • கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரிவலப்பாதை அமைந்துள்ளது.

    இந்தப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகள் உள்பட ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இதில், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.

    அதன்படி, கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் பக்தர்கள் வணங்கிச் செல்லும் அஷ்டலிங்க சந்நிதிகள், பிற்காலத்தில் உருவான சூரியலிங்க சந்நிதி, சந்திரலிங்க சந்நிதி என மொத்தம் 10 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்றது.

    தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அஷ்டலிங்க சந்நிதிகளான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவற்றுக்கும், சந்திர லிங்கம், சூரிய லிங்கம் ஆகிய 10 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையொட்டி, 10 கோவில்களிலும் கணபதி பூஜை, மாலை 6 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, வெள்ளிக்கிழமை காலை 2-ம் கால யாக சாலைப் பூஜை, வேத பாராயணம், திருமுறைகள் பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, நேற்று காலை 10 கோவில்களுக்கும் ஒரே நேரத்தில் கோவில்களின் மூலவர் சந்நிதிகள், கோவில் மூலவர் சந்நிதி கோபுரங்கள் மீது யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஸ்ரீஅருணாச லேஸ்வரர் கோவில் சிவாச்சாரியர்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் மூலவர் சாமிகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • திருவண்ணாமலை-சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பவுர்ணமியையொட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், கரூர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    மேலும் திருவண்ணாமலை-சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வருகிற 28, 29-ந்தேதி (சனி, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி 28-ந்தேதி (நாளை) திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10,874 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
    • அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அதையொட்டி, தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் 7-ம் நாளன்று மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை சீரமைத்து, அதன் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது. மகாரதத்தின் அச்சு, பீடம், விதானம், ஹைடாலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, பொதுப்பணித்து றையின் (கட்டுமானம்) உறுதிச்சான்று பெறப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

    சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபத் திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.
    • கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.

    இதனை பயன்படுத்திக்கொண்டு கும்பல் ஒன்று பக்தர்களிடம் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்து நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பெண்கள் பிச்சை எடுக்கும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சமூகநலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டவைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கை குழந்தைகளை வைத்தபடி பெண்களும் மற்றும் சிறுவர்களும் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் கிரிவலப் பாதையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோசாலை உள்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சிறுவர், சிறுமிகளை பொம்மை விற்பனை செய்யலாம் என அழைத்து வந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தி உள்ளனர்.

    அதிகாரிகள் சிறுவர்களை பிடிப்பதைக் கண்ட கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர் சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் படிக்கக்கூடிய இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலைக்கு புதியதாக வந்துள்ள சாதுக்கள் சாமியார்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

    • ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் கோட்டத்தில் 130 பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பத்தூரில் 30 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூரில் இருந்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல பவுர்ணமியொட்டி கலசப்பாக்கம் அடுத்துள்ள பருவதமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் மலை மீது ஏரி தரிசனம் செய்தனர். குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.

    ×