search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுத்த 14 சிறுவர்கள் மீட்பு
    X

    திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுத்த 14 சிறுவர்கள் மீட்பு

    • கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.
    • கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.

    இதனை பயன்படுத்திக்கொண்டு கும்பல் ஒன்று பக்தர்களிடம் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்து நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பெண்கள் பிச்சை எடுக்கும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சமூகநலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டவைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கை குழந்தைகளை வைத்தபடி பெண்களும் மற்றும் சிறுவர்களும் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் கிரிவலப் பாதையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோசாலை உள்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சிறுவர், சிறுமிகளை பொம்மை விற்பனை செய்யலாம் என அழைத்து வந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தி உள்ளனர்.

    அதிகாரிகள் சிறுவர்களை பிடிப்பதைக் கண்ட கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர் சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் படிக்கக்கூடிய இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலைக்கு புதியதாக வந்துள்ள சாதுக்கள் சாமியார்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

    Next Story
    ×