search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samayapuram"

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலை கட்டுமான பணி தொடங்கியது.
    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்து கோவில்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

    இதைதொடர்ந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது தரை மட்டத்தில் இருந்து 103 அடி உயரம் கொண்டதாக இந்த ராஜகோபுரம் அமைய உள்ளது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்று நிலைகள் கட்டுமான பணி நிறைவு பெற்றது.

    இதைத் தொடர்ந்து 4-ம் நிலை கட்டுவதற்காக சாரம் அமைக்கும் பணியும், கீழே இருந்து கட்டுமான பொருட்களை மேலே எடுத்து செல்ல வசதியாக புதிதாக லிப்ட் அமைக்கும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று நான்காம் நிலை கட்டுவதற்கான பணி தொடங்கியது.

    கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு தடையில்லாமல் தேவையான சவுக்கு கம்புகள், செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு போன்ற பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளன.
    சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மூலவர் அங்காளம்மனுக்கும், மாரியம்மன் கோவிலின் குருவாயூரப்ப குருக்கள் தலைமையில் அரவிந்த் குருக்கள் உள்பட 23 பேர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    விழாவில் சமயபுரம் மற்றும் திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூஜகர் சிவகுமார், சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். 
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில்் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று அமாவாசை தினம் என்பதால் காலை 5 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கோவிலின் கிழக்கு பகுதியின் முன்புறத்தில் நெய்தீபங்கள் ஏற்றியும், கட்டண வரிசை, பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீசாரும் மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர். இதே போல் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமியை வழிபட்டனர். 
    அழகே வடிவான சமயபுரம் அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தபடி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது.
    விஜயநகர பேரரசரின் முயற்சியால் எழுப்பப்பட்ட சமயபுரம் கோயிலினுள் உயர்ந்து அமைந்துள்ள பீடம் ஒன்றில் அஷ்ட புஜ நாயகியாக அன்னை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். மாரியம்மனின் திருமுடி மீது இப்பூவுலகம் முழுமைக்கும் அருள் வழங்கிடும் வண்ணம் கிரீடம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
    அன்னையின் திருநயனங்கள் அன்னையின் பேரருளைப் பொழிந்த வண்ணம் கருணையோடு தம் அடியார்களை நோக்கி உள்ளன.

    உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை மாரியம்மன் இந்த உலகத்தை காத்து வருகின்றாள். அன்னையின் எட்டு திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவை அமைந்து உள்ளன. அழகே வடிவான அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தபடி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது. இவ்வாறு சமயபுரத்தாளின் திருஉருவம் அமைந்துள்ளது.

    மேலும் அன்னையின் திருவடிகளின் இடது பக்கத் திருவடி பீடத்தில் மடங்கியிருக்க வலது திருவடி ஐந்து அரக்கர்களின் தலைகளை மிதித்த வண்ணம் அமைந்துள்ளது.

    சமயபுரம் மாரியம்மனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சூர்ப்ப நாயக்கர் என்பவர் அம்மனின் திருவுருவத்திற்குப் பதிலாகப் புதிய திருவுருவம் ஒன்றை வார்த்துப் பிரதிஷ்டை செய்தார்.

    அம்மனின் அந்தப் புதுத் திருவுருவம் திருவிழா சமயத்தில் ஒன்பதாம் நாளன்று திரு உலாவாக எடுத்து வரப்படுகின்றது. அம்மனின் திருஉருவம், அருள்கருணை ததும்பும் திருவதனத்துடன் காட்சி தருகின்றது.

    இவ்வாறு வீற்றிருந்து சமயபுரம் தலத்தில் அருள் செய்திடும் இத்தாய்க்கு நம் உள்ளபூர்வ பக்தியைச் செலுத்தினால் அவள் மனம் கனிந்து நமக்கு திருவருள் செய்திடுவாள். அவள் பாதம் பணிந்தால் அவள் மனம் குளிர்ந்து போகும். இதனால் நம் மனம் உலக ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு ஒருமுகப்படுத்தப்படும்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்துக்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

    கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது.

    இந்த பணியில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்தபதிகள் சதாசிவம், பாஸ்கரன் மற்றும் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 40 பணியாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்றாம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்று நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக காலை 9.40 மணிக்கு மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கான்கிரீட் போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெருங்கலை, ஐம்பெரும் பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஷ்வர, சதாசிவம்) ஐம்பெரும் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள பஞ்சப்பிரகார உற்சவம் மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக 6-ந் தேதி முதல் வசந்த உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது. இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக ஒரு தங்க குடம் மற்றும் 24 வெள்ளிக்குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ, மேளதாளத்துடன் கொள்ளிடத்திலிருந்து யானை மீது கொண்டு வரப்பட்ட திருமஞ்சனம், கடைவீதி வழியாக கோவில் கொடிமரம் முன்பு உள்ளே நுழைந்து உற்சவர் சன்னதியை அடைந்தது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவ மண்டபத்தில் அம்மன் முன்பாக தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர் வைக்கப்பட்டிருந்த காட்சி.

    இதைத்தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் கொண்டு வரப்பட்ட திருமஞ்சனத்திற்கு சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகாபிஷேகம் நடை பெற்றது. மாலை 6 மணிக்கு திருச்சி மகாஜனங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் சாத்தார வீதி புஷ்ப வியாபாரிகள் சார்பாக அம்மனுக்கு புஷ்ப சாத்துப்படி நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் அம்மன் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் இரண்டாவது சுற்றும், தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்றும், தெற்கு ரதவீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்றும், கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் சுற்றி வந்து, பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) முத்துப்பல்லக்கிலும், 18-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 2-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ×