search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்துக்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

    கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது.

    இந்த பணியில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்தபதிகள் சதாசிவம், பாஸ்கரன் மற்றும் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 40 பணியாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்றாம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்று நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக காலை 9.40 மணிக்கு மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கான்கிரீட் போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×