search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மனின் 5 தலை நாகம்
    X

    சமயபுரம் மாரியம்மனின் 5 தலை நாகம்

    அழகே வடிவான சமயபுரம் அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தபடி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது.
    விஜயநகர பேரரசரின் முயற்சியால் எழுப்பப்பட்ட சமயபுரம் கோயிலினுள் உயர்ந்து அமைந்துள்ள பீடம் ஒன்றில் அஷ்ட புஜ நாயகியாக அன்னை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். மாரியம்மனின் திருமுடி மீது இப்பூவுலகம் முழுமைக்கும் அருள் வழங்கிடும் வண்ணம் கிரீடம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
    அன்னையின் திருநயனங்கள் அன்னையின் பேரருளைப் பொழிந்த வண்ணம் கருணையோடு தம் அடியார்களை நோக்கி உள்ளன.

    உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை மாரியம்மன் இந்த உலகத்தை காத்து வருகின்றாள். அன்னையின் எட்டு திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவை அமைந்து உள்ளன. அழகே வடிவான அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தபடி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது. இவ்வாறு சமயபுரத்தாளின் திருஉருவம் அமைந்துள்ளது.

    மேலும் அன்னையின் திருவடிகளின் இடது பக்கத் திருவடி பீடத்தில் மடங்கியிருக்க வலது திருவடி ஐந்து அரக்கர்களின் தலைகளை மிதித்த வண்ணம் அமைந்துள்ளது.

    சமயபுரம் மாரியம்மனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சூர்ப்ப நாயக்கர் என்பவர் அம்மனின் திருவுருவத்திற்குப் பதிலாகப் புதிய திருவுருவம் ஒன்றை வார்த்துப் பிரதிஷ்டை செய்தார்.

    அம்மனின் அந்தப் புதுத் திருவுருவம் திருவிழா சமயத்தில் ஒன்பதாம் நாளன்று திரு உலாவாக எடுத்து வரப்படுகின்றது. அம்மனின் திருஉருவம், அருள்கருணை ததும்பும் திருவதனத்துடன் காட்சி தருகின்றது.

    இவ்வாறு வீற்றிருந்து சமயபுரம் தலத்தில் அருள் செய்திடும் இத்தாய்க்கு நம் உள்ளபூர்வ பக்தியைச் செலுத்தினால் அவள் மனம் கனிந்து நமக்கு திருவருள் செய்திடுவாள். அவள் பாதம் பணிந்தால் அவள் மனம் குளிர்ந்து போகும். இதனால் நம் மனம் உலக ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு ஒருமுகப்படுத்தப்படும்.
    Next Story
    ×