search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Blockades"

    பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) விருதுநகர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. #FireCrackers

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்தி மையமாக இயங்கும் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் இருந்ததால் பட்டாசு தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

    பட்டாசு தொழிலை காப்பாற்ற விதிகளை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தி தொழிலாளர்கள் சிவகாசியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 வாரத்திற்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தற்போது வரை பட்டாசு ஆலையை திறப்பதற்கான எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை.

    2 மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பட்டாசு தொழிலாளர்கள் கூறுகையில், பல வருடங்களாக பட்டாசு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம். திடீரென வேலை நிறுத்தம் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம். வேறு வேலையும் தெரியாது. குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது.

    எனவே மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) விருதுநகர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

    இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மகாலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை.

    இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) சிவகாசி பஸ் நிலையம், திருத்தங்கல், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, மாரனேரி, சாத்தூர், கன்னிச்சேரி, ஆமத்தூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. #FireCrackers

    முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதி மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்தனர். இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் குடும்பங்கள் தங்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் புயல் பாதிப்பு ஏற்பட்டு 45நாட்கள் கடந்தும் இன்னும் இப்பகுதி மக்களுக்கு அரசின் எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை.

    இந்தநிலையில் அருகில் உள்ள மலையாகணபதி நகர் பகுதி மக்களுக்கு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் எங்களுக்கும் உடன் நிவாரண பொருட்கள் வழங்கவேண்டும் எனக்கோரி கீழக்காடு சுந்தரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலை மற்றும் முத்துப்பேட்டை- அதிராம்பட்டிணம் சாலையில் மாலை 3 மணிமுதல் இரவு 7 மணி வரை சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கொளத்தூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். #Tasmac

    மாதவரம்:

    கொளத்தூர், விவேக் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் திறக்கப்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் மதுக்கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை பெரம்பூர்-செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tasmac

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே விராலிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாயக்கன்பட்டி கிராமத்தின் நுழைவு பகுதியில் பெரியாறு கால்வாயும், ஊரைத் தாண்டி வைகை ஆறும் உள்ளது.

    கடந்த 3 மாதங்களாக கன மழை காரணமாக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கால்வாய் மற்றும் வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் ராமநாயக்கன்பட்டி பகுதிக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இப்பகுதி மக்களுக்கு 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அவை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    அப்பகுதி கிராம மக்கள் ஆண்டிப்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    அதன்பின்பு பி.டி.ஓ. விஜயசந்திரிகா மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான வத்தலக்குண்டு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தினந்தோறும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று 7-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, சோலைஅழகுஇல்லம், ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் பெரியார் சிலை பின்புறம் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், 7-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் வரவில்லை. போர்வெல்லிலும் தண்ணீர் இல்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தோம். கடந்த 3 நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்த அலுவலர்கள் வெள்ளிக்கிழமை இரவுக்குள் தண்ணீர் விடுவதாக கூறி சென்றனர்.

    ஆனால் தண்ணீர் வராததால் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர் வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். #Studentstir #bus

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அரசு பாலி டெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது.

    தருமபுரி மாவட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தருமபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்ல வேண்டும்.

    ஆனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் நகர பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படுவதால் மாணவர்களால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

    அதனால் சரியான நேரத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர காலை, மாலை இரண்டு வேலையும் பேருந்துகள் இயக்கக்கோரி இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்கு வரத்துத்துறை அதிகாரிகள், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது கல்லூரிக்கு பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    பின்னர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Studentstir #bus

    ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் தாராபுரம் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பிளிக்கை போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊராட்சி அலுவலர்கள் வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதன்பிறகு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி அலுவலர்கள் தெரிவித்ததின் பேரில் 1 மணி நேரமாக நீடித்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    திருவோணம் அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    திருவோணம்:

    திருவோணம் வட்டார விவசாய நலச்சங்கம் சார்பில் ஊரணிபுரம், திருவோணம், பேராவூரணி, கடைமடை பகுதிவரை பாசன வாய்க்கால் ஏரி, குளங்களை தூர்வாராததால் தண்ணீர் பாசனத்திற்கு வராததை கண்டித்து ஊரணிபுரம் கடை வீதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சங்க ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமை தங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், ஒரத்தநாடு டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலை கைவிடும் படி கூறினர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாணும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதைதொடர்ந்து பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர்கள் மதியழகன், திருவேணி, ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது திருவோணம் பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வாரி கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

    திருக்கண்ணமங்கையில் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என பொதுப்பணித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வாய்க்கால்கள் தூர்வாரப் படவில்லை.

    இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர் வந்தடைந்தது. அப்பகுதி விவசாயிகள் தூர் வாராத பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் திருக்கண்ணமங்கை கடை வீதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருவாருர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் வாய்க்கால்கள் உடனடியாக தூர் வாரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. #Tamilnews

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா, வலுவூர் ஊராட்சி மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதாகி கடந்த 4 மாதமாக மேலத்தெரு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

    இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேலத்தெருவைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் வழுவூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குத்தாலம் தாசில்தார் திருமாறன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 நாளில் மோட்டார் பழுது பார்த்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைதொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×