search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தினந்தோறும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று 7-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, சோலைஅழகுஇல்லம், ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் பெரியார் சிலை பின்புறம் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், 7-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் வரவில்லை. போர்வெல்லிலும் தண்ணீர் இல்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தோம். கடந்த 3 நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்த அலுவலர்கள் வெள்ளிக்கிழமை இரவுக்குள் தண்ணீர் விடுவதாக கூறி சென்றனர்.

    ஆனால் தண்ணீர் வராததால் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர் வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×