search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public roadblock"

    குடிநீர் வினியோகம் செய்ய கோரி தஞ்சையில், காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி முத்துசாமிநகர், ராதாகிருஷ்ணன் நகர், வி.எஸ்.காலனி, ஏ.கே.எல்.காலனி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி வைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள், காலிக்குடங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் சிலரும் குடங்களுடன் பங்கேற்றனர். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான ஆழ்குழாய் கிணற்றை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெண்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பெண்கள் சிலர் கூறும்போது, ஆறுகளில் தண்ணீர் நிரம்பி செல்லும் நேரத்தில் கூட நாங்கள் குடிநீருக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்படுகிறோம். வீட்டு வேலைகளும் செய்ய முடியவில்லை. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம் என்றனர். 
    விராலிமலை அருகே நம்பம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் நம்பம்பட்டி, கவரப்பட்டி மற்றும் கோட்டைக்காரன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ளவர்களுக்கு இதுவரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீரை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக போதிய அளவு குடிநீர் வராததால் பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி பொதுமக்கள் நேற்று காலை விராலிமலை-மணப்பாறை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டி சின்னம்மாள்(60) என்பவர் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.


    விராலிமலை ஒன்றியம் நம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சின்னம்மாளுக்குஅருகில் இருப்பவர்கள் உதவியதை படத்தில் காணலாம்.


    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பதாக கூறி சாலைமறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் கோட்டைக்காரன்பட்டி, கவரப்பட்டி ஆகிய ஊர்களிலும் பொதுமக்கள் குடிதண்ணீர் கேட்டு கோட்டைக்காரன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக கூறியதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலைமறியலால் அப்பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    விபத்தில் பலியானவர் உடலை நடுரோட்டில் வைத்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 28). இவரும், இவரது சகோதரர் நாகேஸ்வரன் என்பவரும் விருதுநகர்- சாத்தூர் ரோட்டில் சூலக்கரைமேடு அருகே ரோட்டை கடந்து சென்றபோது மதுரையில் இருந்து நாங்குநேரி சென்ற கார் மோதியதில் பால்பாண்டி படுகாயம் அடைந்தார்.

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது பற்றி நாகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் கார் டிரைவர் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பால்பாண்டியின் உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை எடுத்து சென்றவர்கள், அதனை நடுரோட்டில் வைத்து மறியலில் இறங்கினார்கள். சூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் தடுப்புவேலி வைக்க கோரியும், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க கோரியும் வலியுறுத்தினர்.

    இந்த போராட்டத்தால் பரபரப்பு உருவானது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. 
    நாமக்கல்லில், சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில் நேதாஜி நகர் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சரியான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் திருச்சி ரோடு வழியாக சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்றி வந்தனர்.

    அந்த சாக்கடை கால்வாய் வழியாக திருச்சி ரோட்டில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களின் கழிவுநீரும் சென்று வந்தது. இந்த நிலையில் கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல்லில், திருச்சி ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வகுரம்பட்டி ஊராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் சாலையில் தேங்குவது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் சாலையில் இருந்து கலைந்து செல்லுமாறு மறியலில் ஈடுபட்டவர்களை அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையில் இருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக நாமக்கல், திருச்சி சாலையில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
    போச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு முதியவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முதியவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

    அதன்படி போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேதோட்டம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி பாலேதோட்டத்தில் கொடமாண்டப்பட்டி - போச்சம்பள்ளி செல்லும் சாலையில் நேற்று முதியவர்கள் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் வெகு நேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் நிற்க முடியாத முதியவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
    ×