search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nandi"

    • நந்தி உடல் துளைக்கப்பட்டுள்ள தலம் திருவெண்காடு.
    • நந்தி முகம் திரும்பிய தலம் கஞ்சனூர்.

    1.நந்தியெம்பெருமான் திருமணம்

    பங்குனி மாதம் திருவையாறிலே அவதரித்த நந்திதேவருக்கும் திருமழபாடியில் அவதரித்த சுயசாம்பிகை தேவிக்கும் வளர்பிறை புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெறும்.

    2. நந்தி விலகி இருக்கும் தலங்கள்

    1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக

    2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக

    3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக

    3.நந்தி இறைவனை நோக்காமல் இறைவர் பார்க்கும் திசையை பார்க்கும் தலங்கள்

    1.திருவலம்

    2.வடதிருமுல்லைவாயில்

    3.செய்யாறு

    4.பெண்ணாடம்

    5.திருவைகாவூர்

    4.நந்தி நின்ற திருக்கோலம்

    1.திருமாற்பேறு (திருமால்பூர் )

    2.திருவாரூர்

    5.நந்தி கொம்பு ஒடிந்த தலம்

    திருவெண்பாக்கம்

    6.நந்தி இறைவனுக்கு பின்னும் உள்ள தலம்

    திருக்குறுக்கை வீரட்டம்

    7.நந்தி சங்கமத் தலம்

    திருநணா (பவானி )

    8.நந்தி சற்று சாய்ந்துள்ள தலம்

    திருப்பூவணம்

    9.நந்தி முகம் திரும்பிய தலம்

    கஞ்சனூர்

    10.நந்தி உடல் துளைக்கப்பட்டுள்ள தலம்

    திருவெண்காடு

    11.நந்தி காது அறுந்த தலம்

    தேப்பெருமாநல்லூர்

    12.நந்தி தலம்

    திருவாவடுதுறை

    13.ஒரே கல்லில் மிகப்பெரிய நந்தி

    தஞ்சாவூர்

    14.மிகப்பெரிய சுதை நந்தி

    1.திருவிடை மருதூர்

    2.இராமேஸ்வரம்

    15.கற்களால் ஆன பெரிய நந்தி

    திருவாவடுதுறை


    போற்றி ஓம் நமசிவாய

    - திருச்சிற்றம்பலம்

    • சிலாதரின் புதல்வன் ஆனதால் “சைலாதி” என்றும் அழைக்கப்பெற்றார்.
    • நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது.

    முனிவர் ஒருவர் பலகாலம் தவம் புரிந்தார். அதன் பயனாக உலகங்கள் பலவற்றைக் காணும் பேறு பெற்றார். யமனுலகு சென்றபோது, முனிவர் அங்கிருந்த கல்மலை ஒன்றைப் பார்த்தார். "இது என்ன?" என்று யமனிடம் கேட்டார்.

    "முனிவரே! நீர் சிறுவயதில் சிவனடியார் ஒருவர் உண்ணும்போது அவருடைய அன்னத்தில் சிறிய கல்லைப் போட்டீர்கள். அது நாள் தோறும் வளர்ந்து வருகிறது. பூவுலகில் உம் காலம் முடிந்து இங்கே வரும் போது இந்த மலையை உண்ணச் சொல்வோம்" என்று யமன் கூற முனிவர் நடுங்கினார்.

    "நான் செய்த தவறுக்கு வேறு பரிகாரமே இல்லையா?" என்றார் முனிவர். "உள்ளது. பூவுலகில் இதே அளவு மலையை நாள்தோறும் பொடித்து உண்டு வந்தால், இங்குள்ள மலை மறைந்து விடும்." என்று யமன் கூற, அவ்வாறே செய்வதாக முனிவர் வாக்களித்தார். முனிவர் பூவுலகுக்கு வந்தார். மலை ஒன்றைத் தேடிக் கண்டறிந்து அதன் கல்லைப் பொடியாக்கி உண்டுவந்தார். ஆகையால் அவரை அனைவரும் சிலாதர் என்று அழைத்தார்கள்.

    சிலாதர் பிரம்மசாரியாக வாழ்ந்து வந்தார். அதனால் அவருடைய முன்னோர் நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த சிலாதர், ஒரு நங்கை நல்லாளை மணம் புரிந்து கொண்டார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சிவபெருமானை வேண்டி பலகாலம் சிலாதர் தவம் புரிந்தார். அவர் மனைவியும் நாள்தோறும் சிவபூஜை செய்து பிள்ளை வரம் வேண்டினாள். உடலெல்லாம் திருநீறு, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள் அணிந்து, சிவபெருமானையே உடலால், மனத்தால், வாக்கால் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

    சிவபெருமான் அருளிய வண்ணம் ஸ்ரீசைலத்துக்குச் சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்யத் தொடங்கினார். முனிவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாகத்திற்கான பொருள்களையெல்லாம் சேகரித்தார். தானங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிலாதரும் அவருடன் இணைந்து பல ரிஷிகளும் யாகத்தை மிகவும் நியமத்துடன் செய்யலானார்கள். யாக பூமியை சிலாதர் கலப்பையால் உழுதபோது, கலப்பை நுனியில் ஒரு பெட்டி இடித்தது. உடனே சிலாதர் அப்பெட்டியை பூமியிலிருந்து வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார். பொன்னாக ஒளிர்ந்த அப்பெட்டியினுள்ளே பால சூரியனைப் போல் ஒளி வீசிய சிறு குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டார். குழந்தையின் மேனியிலே திவ்ய ஆபரணங்கள் ஒளிர்ந்தன.

    சிலாதர், 'சிவபெருமான் அருளிய தவப்புதல்வர் இவரே' என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுவிட்டு, மனைவியிடம் அளித்தார். அவள், புதல்வனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். பாலூட்டி, சீராட்டினாள். அப்போது பிரம்மா, முனிவரை நோக்கி "அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய இக்குழந்தைக்கு "நந்தீசன்" என்ற திருநாமம் சூட்டுவோம்" என்றருளினார்.

    சிலாதரின் புதல்வன் ஆனதால் "சைலாதி" என்றும் அழைக்கப்பெற்றார். நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது. குருகுலவாசம் செய்து, அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ந்தார். கற்று முடித்ததும் நந்தீசருக்கு மணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் நந்தீசர் அதற்கு இணங்கவில்லை.

    "சிவத்தைத் துதிப்பேன், பவத்தை விடுவேன்" என்று பெற்றோரிடம் விடைபெற்று தவம் செய்யச் சென்றார். சிலாதரும் அவர் மனைவியும் தடுத்தபோது, அவர்களிடம் தவத்தின் மேன்மையை எடுத்துரைத்து விடை பெற்றார்.

    காட்டில் பஞ்சாக்னி-சுற்றிலும் நான்கு திக்குகளிலும் எரியும் நெருப்பு-வானத்தில் எரிக்கும் சூரியன் ஆகியவற்றின் மத்தியில் நூறாண்டுகள் தவமியற்றினார். அவருடைய கடுமையான தவத்தின் சக்தியால் தேவருலகும் தவ ஒளியால் ஒளிர்ந்தது.

    "எதைக்குறித்து நந்தீசன் தவம் செய்கிறாரோ?" என்று தேவர்கள் கவலை கொண்டனர். பல்லாண்டு காலத் தவத்தின் பயனாக பனிமலைப் பரமேஸ்வரன், நந்தீசன் முன்பு தோன்றினார். விடை மீது வந்து தரிசனம் தந்த ஈசனை நந்தீசர் வணங்கினார்; தொழுதார்; பாதம் பணிந்தார். ஆனந்தப் பரவசமெய்தியவராக "பரமனே! ஈசனே! எந்தையே! எனக்கருள் புரிய வந்த தேவனே!" என்று தோத்திரம் புரிந்தார்.

    "குழந்தாய்! என்ன வரம் வேண்டும்?" என்று இறைவர் குழைந்து கனிவு ததும்பக் கேட்டார்.

    "வேறென்ன வேண்டுவேன்? உம் பாதத்தில் மாறாத பற்றுடன் சிவபக்தியில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதுதான் யான் வேண்டுவது" என்றார்.

    "அப்படியே விளங்குவாயாக! எம் கணங்களுக்கு அதிபனாக இருப்பாய். என்னுடைய ஆணை எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் உன் அதிகாரமும் செல்வதாக! அதிகார நந்தியாக விளங்குவாய்" என்றருளினார்.

    "நந்தீசர் எமக்கு மகன், கணாதிபன், அனைவராலும் பூஜிக்கத் தக்கவன். 'சிவஞானத்தை' போதிக்கும் குருவும் இவனே" என்று தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமான் அறிவித்தார்.

    அது முதல் திருநந்தித் தேவராக நந்தீசர், கயிலைமலையின் வாயிலில் நின்று காத்து வருகிறார்.

    அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு

    நங்குரு மரபிற்கெல்லா முதற்குரு நாதனாகி

    பங்கயத் துளவ நாளும் வேத்திரப்படை பொறுத்த

    செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம்போற்றி

    • பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    • தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

    ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விசேஷமானது.

    ஸ்ரீசைலம் மலையில் வசித்த சிலாதர் என்ற ரிஷி, குழந்தை வரம் வேண்டி சிவனை வணங்கி வந்தார். அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், சிலாதரிடம், "உங்களுக்கு பிறந்திருக்கும் நந்தி சில காலம் தான் பூமியில் வாழ்வார்'' என்றனர். வருந்தினார் சிலாதர். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, "சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்!'' என்று சபதம் செய்து, தவத்தை துவங்கினார்.

    சிவபெருமானும் மனம் ஒருமித்த அந்த பிரார்த்தனையை ஏற்று, நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அவருக்கு அருள்புரிந்த சிவன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் இங்கு அருளுகிறார். நேரடியாக பக்தர்களே இவருக்கு பூஜை செய்யலாம் என்பது விசேஷம்.

    பிரதோஷத்தன்று நம் ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.

    முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. குருக்ஷத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.

    நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து, அதன் மீது சிவன் ஆட்சி புரிவதாகவும் ஐதீகம். இக்கோவிலிலுள்ள நந்தி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

    இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள் எனப்படுகிறாள். 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சிவன் சன்னதி கீழே இருக்க, அம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.

    மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடமும் இங்குள்ளது. பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பக்தர்கள் தங்க சத்திரங்கள் உள்ளன. திங்கள், வெள்ளியில் கூட்டம் அதிகமாக இருக்கும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

    காலை 5.00 மணி முதல் – மதியம் 3.00 மணி வரையும், மாலை 5.30- முதல் இரவு 10.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதியுண்டு. கட்டணம்,700 ரூபாய்.

    சென்னையில் இருந்து ரெயிலில் செல்பவர்கள் ஓங்கோல் சென்று, அங்கிருந்து பஸ்சில் ஸ்ரீசைலம் செல்லலாம்.

    பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம்.

    மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. தனியார் வாகனங்கள் இரவு 8.00 மணியிலிருந்து காலை 6.00 மணிவரை மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது; அரசு பஸ்கள் மட்டுமே செல்லும்.

    • பிரதோஷ கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.
    • ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.

    தஞ்சாவூர் ஓவிய மரபில் நந்திதேவரின் உருவம் மைசூர் சாமுண்டி மலையில் நந்தி சிலை சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

    "செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து

    நம் பவமறுத்த நந்திவானவர்"

    எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    பிரதோஷ கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

    • கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
    • சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.

    கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

    தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

    சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

    • அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது.
    • போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார்.

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    விஷ்ணு நந்தியாக மாறிய கதை

    அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிட புறப்பட்டார்.

    அவர் அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெறுகிறது.

    இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை.

    • கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும்.
    • ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு.

    பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    சோமசூத்தகப் பிரதட்சணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனையும் நந்தி தேவனையும் வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும் காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும். பிரதோஷ கால நேரங்களில் சிவ பெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக புராணங்களில் நம்பிக்கை . எனவே நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர். பொதுவாக கோவிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

    ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோவில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் 'போக நந்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார்.

    அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே 'வேத நந்தி'யும் ஆனார்.

    முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் 'தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது' என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார்.

    தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார். அவர்தான் 'மால் விடை' என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி.

    மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் 'தர்ம விடை' எனப்படும் தர்ம நந்தி.

    கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி 'ஆன்ம நந்தி' எனப்படும். இந்த நந்தியை 'சிலாதி நந்தி' என்றும் சொல்வர்.

    கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார்.

    சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார்.

    நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.

    • கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் ஒருவராவர்.
    • சிவ ஆலயத்தினுள் அமைக்கப்பெரும் ஒரே நந்தி இவர் என்பதால் ப்ரதிஷ்டை செய்யப்படுகிறார்.

    கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

    இவர் கரங்களில் பொற் பிரம்பினையும், வீர வாளினையும் கொண்டுள்ளார். இவர் எப்பொழுதும் தன்னுடைய மூச்சுக்காற்றினால் இறைவனாகிய சிவபெருமானை குளிர்வித்துக் கொண்டே இருப்பவர் என்கிறன சிவ ஆகமங்கள். சிவ ஆலயத்தினுள் அமைக்கப்பெரும் ஒரே நந்தி இவர் என்பதால் ப்ரதிஷ்டை செய்யப்படுகிறார்.

    • அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும்
    • சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும்.

    ஐவ்வகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர். ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.

    கைலாச நந்தி

    முதன்மைக் கட்டுரை: கைலாச நந்தி

    கைலாச நந்தி லிங்கத்துடன்

    கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

    அவதார நந்தி

    முதன்மைக் கட்டுரை: அவதார நந்தி

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    அதிகார நந்தி

    முதன்மைக் கட்டுரை: அதிகார நந்தி

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சாதாரண நந்தி

    முதன்மைக் கட்டுரை: சாதாரண நந்தி

    சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

    பெரிய நந்தி

    முதன்மைக் கட்டுரை: பெரிய நந்தி

    தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி

    பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மகா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

    • சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி.
    • சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம்.

    சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப்படுகிறது. சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப்படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

    இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

    அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

    பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு

    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக

    ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்

    இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து

    மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி

    மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு

    தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்

    சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

    - அகத்தியர்.


    நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா

    நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது

    சொல்லந்த மானகுரு நாதன்றானும்

    சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு

    நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா

    நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு

    சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா

    தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

    - அகத்தியர்.

    சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப்படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.

    இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

    • அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன.
    • கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

    சிற்பங்கள், உலோகத் திருமேனிகள், தேர் போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்பதைக் கண்டிருக்கிறோம்.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இரு வாகனங்கள் நூற்றாண்டைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன; ஒரு வாகனம் 200 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

    சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள மூல மூர்த்திகள் 500 ஆண்டுகள் தொன்மை உடையவை.

    1,787ல் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச் கேம்பெல்லிடம், துபாஷியாக பணியாற்றிய ஆதியப்ப நாயக்கர், இந்த இரு கோவில்களையும் புதுப்பித்துள்ளார். அதனால், அவரது வம்சாவளியினரே இரு கோவில்களையும் நிர்வகித்து வருகின்றனர்.

    ஆதிபுரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருவிழா நடக்கும். இதில் மூன்றாம் நாள் பகலில் வீதியுலா வரும் பூத வாகனம், இரவில் வரும் அதிகார நந்தி வாகனம், காமதேனு வாகனம் ஆகியவை தான் அந்தப் பெருமைக்குரிய வாகனங்கள்.

    இவற்றில், அதிகார நந்தி வாகனம் தனிச் சிறப்புடையது. நந்தி மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என மொத்தம் 12 அடி உயரம் உள்ளது இந்த வாகனம்.

    கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்ததாகவும், அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் எனவும் தெரிவித்த, கோவில் அர்ச்சகர் பொன். சரவணன், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அது பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

    வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன.

    அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன.

    கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

    இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும், பதஞ்சலி, புலிக்கால் முனிவர், பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன.

    கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன.

    அதிகார நந்தியின் மேற்பகுதியில் சுவாமியும் அம்மனும் அமரும் பீடத்தின் அடிப்பகுதியின் இரு பக்கத்திலும் பறக்கும் கந்தர்வ பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

    இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், இசைக் கடலில் மூழ்கியபடி, அந்தப் பேரானந்தத்தில் திளைத்தபடி இறைவனைச் சுமக்கத் தயார் என நந்தி தேவர் வீறார்ந்த காட்சி அளிப்பது போலவே தோன்றும்.

    நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன.

    இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது. முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார்.

    அவரது மார்பில் வரிசையாக ஆபரணங்கள் தனித்தனியாக தெரியும் படி செதுக்கப்பட்டுள்ளன. அதிகார நந்தி வாகனத்திலும் இதில் பொருத்தப்படும் பொம்மைகளும், காமதேனு வாகனமும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முலாம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.

    அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் செய்தளித்தவர் பொன்னுசாமி கிராமணி என்பவர். இவர் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தை.

    கடந்த, 1901ல் அதிகார நந்தியையும், 1929ல் காமதேனுவையும் பொன்னுசாமி செய்தளித்துள்ளார். இந்த இரு வாகனங்களுடன் பூத வாகனமும் சேர்த்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசல் அருகில் உள்ள, மிகப்பெரிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    பொன்னுசாமி கிராமணிக்கு, சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர், தெ.பொ.மீ., முத்துக்குமாரசாமி என மூன்று மகன்கள். முத்துக்குமாரசாமி வழி வந்த நமசிவாயம் என்பவர் தற்போது இந்த வாகனங்களைப் பராமரித்து வருகிறார்.

    அவற்றின் மீது பூசப்பட்ட தங்க ரேக்குகள் உதிர்ந்து வாகனங்கள் களையிழந்து காட்சியளிக்கின்றன.

    மயிலாப்பூரில் கேட்டார்கள்?

    ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்து, ராவணேஸ்வரன் வாகனம் செய்த கோவில் அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பொன்.சரவணன் கூறுகையில், "எப்படியாவது இந்த இரண்டு வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும். குறைந்தது, 10 லட்ச ரூபாயாவது வேண்டும்" என்றார்.

    சென்னையின் சுற்றுவட்டாரத்தையே தனது பேரழகில் மயக்கி வைத்திருக்கிறார் இந்த அதிகார நந்தி.

    அதிகார நந்தி வாகனத்தின் புகழுக்குச் சற்றும் குறையாதது பூத வாகனம்.

    சிந்தாதிரிபேட்டை பூத வாகனம்

    சிவாலயங்களில் உள்ள முக்கியமான வாகனங்களில் இதுவும் ஒன்று. பொன்னுசாமி கிராமணியின் முன்னோர் சுப்பராய கிராமணி என்பவர், 1812ம் ஆண்டில் இந்த வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார்.

    இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வாகனம் வண்ணப்பூச்சு கண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.

    பூத வாகனத்தின் முன்னிரு கைகளும் இறைவனின் திருவடிகளை ஏந்துவது போல் அமைக்கப்பட்டிருக்க, பின்னிரு கரங்களில் கத்தியும், கேடயமும் உள்ளன. மொத்தம், ஏழு அடி உயரம் உள்ள இந்த வாகனத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஸ்தபதி புகுந்து விளையாடியிருக்கிறார்.

    உருட்டும் விழிகளுடனும், மிரட்டும் வெட்டரிவாள் மீசையுடனும், கட்டுமஸ்தான தேகத்துடனும், ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி எழுந்திருக்கத் தயார் நிலையில் உள்ளது இந்த பூதம்.

    பல கோவில்களில், வாகனங்களின் கலை நுட்பத்தை உணராமல் கைக்கெட்டிய வர்ணத்தைத் தெளித்து, கலவையாக அடித்து விடும் அவலம் தான் நடக்கிறது.

    இங்கு அதுபோல் அல்லாமல், பூத வாகனத்தின் கலை நுணுக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், வண்ணம் பூசப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    கடந்த, 200 ஆண்டுகளாக இந்தப் பூத வாகனம் தொடர்ந்து, வீதியுலா வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, நமக்கு புளகாங்கிதம் ஏற்படுகிறது.

    கோவில்களில் உள்ள வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

    • தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.
    • சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

    பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.

    காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவாதர் நிலத்தை உழும்போது தங்கப்பேழை ஒன்றைக் கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவாதர் காதில் சிவபெருமான் ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களைக் கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்டு நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசரீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

    நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமான குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.

    இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.

    ×