search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நந்தி
    X

    நந்தி

    • கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும்.
    • ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு.

    பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    சோமசூத்தகப் பிரதட்சணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனையும் நந்தி தேவனையும் வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும் காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும். பிரதோஷ கால நேரங்களில் சிவ பெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக புராணங்களில் நம்பிக்கை . எனவே நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர். பொதுவாக கோவிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

    ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோவில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் 'போக நந்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார்.

    அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே 'வேத நந்தி'யும் ஆனார்.

    முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் 'தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது' என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார்.

    தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார். அவர்தான் 'மால் விடை' என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி.

    மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் 'தர்ம விடை' எனப்படும் தர்ம நந்தி.

    கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி 'ஆன்ம நந்தி' எனப்படும். இந்த நந்தியை 'சிலாதி நந்தி' என்றும் சொல்வர்.

    கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார்.

    சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார்.

    நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.

    Next Story
    ×