search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நந்தி தேவரை தரிசிக்கும் முறை!
    X

    நந்தி தேவரை தரிசிக்கும் முறை!

    • சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி.
    • சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம்.

    சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப்படுகிறது. சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப்படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

    இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

    அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

    பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு

    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக

    ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்

    இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து

    மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி

    மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு

    தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்

    சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

    - அகத்தியர்.


    நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா

    நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது

    சொல்லந்த மானகுரு நாதன்றானும்

    சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு

    நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா

    நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு

    சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா

    தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

    - அகத்தியர்.

    சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப்படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.

    இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

    Next Story
    ×