search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நந்தி தேவர் வரலாறு...
    X

    நந்தி தேவர் வரலாறு...

    • சிலாதரின் புதல்வன் ஆனதால் “சைலாதி” என்றும் அழைக்கப்பெற்றார்.
    • நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது.

    முனிவர் ஒருவர் பலகாலம் தவம் புரிந்தார். அதன் பயனாக உலகங்கள் பலவற்றைக் காணும் பேறு பெற்றார். யமனுலகு சென்றபோது, முனிவர் அங்கிருந்த கல்மலை ஒன்றைப் பார்த்தார். "இது என்ன?" என்று யமனிடம் கேட்டார்.

    "முனிவரே! நீர் சிறுவயதில் சிவனடியார் ஒருவர் உண்ணும்போது அவருடைய அன்னத்தில் சிறிய கல்லைப் போட்டீர்கள். அது நாள் தோறும் வளர்ந்து வருகிறது. பூவுலகில் உம் காலம் முடிந்து இங்கே வரும் போது இந்த மலையை உண்ணச் சொல்வோம்" என்று யமன் கூற முனிவர் நடுங்கினார்.

    "நான் செய்த தவறுக்கு வேறு பரிகாரமே இல்லையா?" என்றார் முனிவர். "உள்ளது. பூவுலகில் இதே அளவு மலையை நாள்தோறும் பொடித்து உண்டு வந்தால், இங்குள்ள மலை மறைந்து விடும்." என்று யமன் கூற, அவ்வாறே செய்வதாக முனிவர் வாக்களித்தார். முனிவர் பூவுலகுக்கு வந்தார். மலை ஒன்றைத் தேடிக் கண்டறிந்து அதன் கல்லைப் பொடியாக்கி உண்டுவந்தார். ஆகையால் அவரை அனைவரும் சிலாதர் என்று அழைத்தார்கள்.

    சிலாதர் பிரம்மசாரியாக வாழ்ந்து வந்தார். அதனால் அவருடைய முன்னோர் நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த சிலாதர், ஒரு நங்கை நல்லாளை மணம் புரிந்து கொண்டார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சிவபெருமானை வேண்டி பலகாலம் சிலாதர் தவம் புரிந்தார். அவர் மனைவியும் நாள்தோறும் சிவபூஜை செய்து பிள்ளை வரம் வேண்டினாள். உடலெல்லாம் திருநீறு, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள் அணிந்து, சிவபெருமானையே உடலால், மனத்தால், வாக்கால் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

    சிவபெருமான் அருளிய வண்ணம் ஸ்ரீசைலத்துக்குச் சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்யத் தொடங்கினார். முனிவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாகத்திற்கான பொருள்களையெல்லாம் சேகரித்தார். தானங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிலாதரும் அவருடன் இணைந்து பல ரிஷிகளும் யாகத்தை மிகவும் நியமத்துடன் செய்யலானார்கள். யாக பூமியை சிலாதர் கலப்பையால் உழுதபோது, கலப்பை நுனியில் ஒரு பெட்டி இடித்தது. உடனே சிலாதர் அப்பெட்டியை பூமியிலிருந்து வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார். பொன்னாக ஒளிர்ந்த அப்பெட்டியினுள்ளே பால சூரியனைப் போல் ஒளி வீசிய சிறு குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டார். குழந்தையின் மேனியிலே திவ்ய ஆபரணங்கள் ஒளிர்ந்தன.

    சிலாதர், 'சிவபெருமான் அருளிய தவப்புதல்வர் இவரே' என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுவிட்டு, மனைவியிடம் அளித்தார். அவள், புதல்வனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். பாலூட்டி, சீராட்டினாள். அப்போது பிரம்மா, முனிவரை நோக்கி "அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய இக்குழந்தைக்கு "நந்தீசன்" என்ற திருநாமம் சூட்டுவோம்" என்றருளினார்.

    சிலாதரின் புதல்வன் ஆனதால் "சைலாதி" என்றும் அழைக்கப்பெற்றார். நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது. குருகுலவாசம் செய்து, அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ந்தார். கற்று முடித்ததும் நந்தீசருக்கு மணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் நந்தீசர் அதற்கு இணங்கவில்லை.

    "சிவத்தைத் துதிப்பேன், பவத்தை விடுவேன்" என்று பெற்றோரிடம் விடைபெற்று தவம் செய்யச் சென்றார். சிலாதரும் அவர் மனைவியும் தடுத்தபோது, அவர்களிடம் தவத்தின் மேன்மையை எடுத்துரைத்து விடை பெற்றார்.

    காட்டில் பஞ்சாக்னி-சுற்றிலும் நான்கு திக்குகளிலும் எரியும் நெருப்பு-வானத்தில் எரிக்கும் சூரியன் ஆகியவற்றின் மத்தியில் நூறாண்டுகள் தவமியற்றினார். அவருடைய கடுமையான தவத்தின் சக்தியால் தேவருலகும் தவ ஒளியால் ஒளிர்ந்தது.

    "எதைக்குறித்து நந்தீசன் தவம் செய்கிறாரோ?" என்று தேவர்கள் கவலை கொண்டனர். பல்லாண்டு காலத் தவத்தின் பயனாக பனிமலைப் பரமேஸ்வரன், நந்தீசன் முன்பு தோன்றினார். விடை மீது வந்து தரிசனம் தந்த ஈசனை நந்தீசர் வணங்கினார்; தொழுதார்; பாதம் பணிந்தார். ஆனந்தப் பரவசமெய்தியவராக "பரமனே! ஈசனே! எந்தையே! எனக்கருள் புரிய வந்த தேவனே!" என்று தோத்திரம் புரிந்தார்.

    "குழந்தாய்! என்ன வரம் வேண்டும்?" என்று இறைவர் குழைந்து கனிவு ததும்பக் கேட்டார்.

    "வேறென்ன வேண்டுவேன்? உம் பாதத்தில் மாறாத பற்றுடன் சிவபக்தியில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதுதான் யான் வேண்டுவது" என்றார்.

    "அப்படியே விளங்குவாயாக! எம் கணங்களுக்கு அதிபனாக இருப்பாய். என்னுடைய ஆணை எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் உன் அதிகாரமும் செல்வதாக! அதிகார நந்தியாக விளங்குவாய்" என்றருளினார்.

    "நந்தீசர் எமக்கு மகன், கணாதிபன், அனைவராலும் பூஜிக்கத் தக்கவன். 'சிவஞானத்தை' போதிக்கும் குருவும் இவனே" என்று தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமான் அறிவித்தார்.

    அது முதல் திருநந்தித் தேவராக நந்தீசர், கயிலைமலையின் வாயிலில் நின்று காத்து வருகிறார்.

    அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு

    நங்குரு மரபிற்கெல்லா முதற்குரு நாதனாகி

    பங்கயத் துளவ நாளும் வேத்திரப்படை பொறுத்த

    செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம்போற்றி

    Next Story
    ×