search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naam tamilar party"

    திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என வேலூரில் நடந்த பொதுகூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். #Seeman
    வேலூர்:

    வேலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் ஆட்சி மாற்றம் குறித்து பேசுகிறார்கள். ஒரு சில கட்சிகள் எந்த கட்சியிடம் இருந்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்களோ, அவர்களுடனேயே தேர்தல் கூட்டணி வைக்கிறார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வரமுடியும். அது ஏமாற்றத்தில்தான் முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். ஊழல், லஞ்சம் அற்ற அரசியல், அனைவருக்கும் வேலை, வேலைக்கேற்ற ஊதியம். தரமான இலவச மருத்துவம், அனைவருக்கும் சரிசமமான கல்வி. இதுவே எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளாகும்.

    இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் என்று சொல்கின்ற திராவிட கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் நாங்கள் பொதுமக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இது ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதாகும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் ஊழல், லஞ்சத்தின் தொடக்கமாகும். ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை அரசியல்வாதிகள் லஞ்சமாகவோ, ஊழல் செய்தோ எடுத்து கொள்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை தடுக்கப்பட வேண்டும்.

    வேலூரில் சீமான் பேசிய காட்சி. அருகில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி, ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்

    பணம் மதிப்பிழப்பால் கருப்பு பணம், பயங்கரவாதம் ஒழியும் என்று மோடி கூறினார். ஆனால் சாமானிய மக்கள் வங்கி வாசல் முன்பு நின்று உயிரிழந்ததும், வியாபாரிகள் தங்கள் தொழில்களை விட்டு சென்றதும் தான் நடந்தது. காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டுள்ளது. தமிழகத்தை நாசமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதனை மாநில அரசுகள் தடுக்கவில்லை.

    மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் வேண்டும். மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். இது சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. நாட்டின் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்காவிட்டால் பல கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறாது. ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். #Seeman
    காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். #cauveryissues
    சென்னை:

    காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை அண்ணா சாலையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசை தாக்கிய வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வீடியோ காட்சியை வைத்து அந்த நபர் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    எண்ணூர் திலகர் நகர் பகுதியை சேர்ந்த மதன்குமார் (23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் கடந்த மாதம் 31-ந்தேதி போலீசில் சிக்கினார். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

    மதன்குமார் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மதன்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீசார் மேலும் பலரை தேடி வருகிறார்கள். #cauveryissues
    பேஸ்புக்கில் போலீசை கண்டித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூடு குறித்து பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இதில் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து பேஸ்புக்கில் ஒரு விமர்சனம் வெளியானது.

    அதில், ‘தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற போலீசாரை சும்மாவிடக்கூடாது. போலீஸ் நிலையத்தை தாக்க வேண்டும். போலீஸ் வாகனங்களை உடைக்க வேண்டும். போலீசாரின் குடும்பத்தையும் விடக்கூடாது’’ என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    பேஸ்புக்கில் இதை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் போலீசுக்கு எதிராக இந்த கருத்தை பதிவு செய்தவர் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரியை சேர்ந்த பாலாஜி (31) என்பது தெரியவந்தது. இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகர்.

    இதையடுத்து பாலாஜியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசுக்கு எதிராக கலவரம் செய்ய பொது மக்களை தூண்டியதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார்.

    பின்னர் நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலாஜி செங்கல்பட்டு 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். #ThoothukudiProtest
    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடியில் அமைதியான முறையில் நடைபெற்று கொண்டு இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த 22-ந் தேதி நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் பலியாகினர். நாடு முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    போராட்டக் குழுவினர் மீதும், பொதுமக்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களது உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வரும் சூழ்நிலையில் போராட்டத்தை தூண்டியதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆழ்வார்திருநகரி அருகே உள்ள ரத்தனபுரியில் தனிப்படை போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டார்.

    தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் அவரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். வியனரசு கைது குறித்து நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையாபாண்டியன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடைபெற்றது மக்களின் தன்னெழுச்சி போராட்டமாகும். இந்நிலையில் இன்று அதிகாலையில் வியனரசு போலீசாரின் கைது நடவடிக்கை என்பது கண்டனத்திற்கு உரியது என்றார் அவர்.

    வியனரசு மகளின் திருமணம் ஜூன் மாதம் நடைபெறுகிறது. அத்திருமணத்திற்கான வேலைகளை அவர் செய்து வந்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கை அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    ×