search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியனரசு
    X
    வியனரசு

    தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கைது

    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடியில் அமைதியான முறையில் நடைபெற்று கொண்டு இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த 22-ந் தேதி நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் பலியாகினர். நாடு முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    போராட்டக் குழுவினர் மீதும், பொதுமக்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களது உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வரும் சூழ்நிலையில் போராட்டத்தை தூண்டியதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆழ்வார்திருநகரி அருகே உள்ள ரத்தனபுரியில் தனிப்படை போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டார்.

    தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் அவரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். வியனரசு கைது குறித்து நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையாபாண்டியன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடைபெற்றது மக்களின் தன்னெழுச்சி போராட்டமாகும். இந்நிலையில் இன்று அதிகாலையில் வியனரசு போலீசாரின் கைது நடவடிக்கை என்பது கண்டனத்திற்கு உரியது என்றார் அவர்.

    வியனரசு மகளின் திருமணம் ஜூன் மாதம் நடைபெறுகிறது. அத்திருமணத்திற்கான வேலைகளை அவர் செய்து வந்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கை அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×