search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekar babu"

    • கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
    • நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

    சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

    மேலும், கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடமுழுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கார சென்னை திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • சென்னையில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 விதமான அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னையை அழகுபடுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார சென்னை திட்டத்தை அறிமுகம் செய்தார்.

    அவர் மேயராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு ஏராளமான மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிங்கார சென்னை 2.0 திட்டம் 2026-ம் ஆண்டு நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த சென்னை மற்றும் புறநகர் பகுதி எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த கருத்துபடி சென்னையை அழகுபடுத்தும் பணிகள் நடந்துவருகின்றன.

    இதற்கிடையே சென்னையை அழகுபடுத்தும் 3-வது திட்டம் உலக வங்கி நிதி உதவி மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 3-வது திட்டத்துக்கான பணிகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

    3-வது திட்டத்தில் சுற்றுச்சூழல், துடிப்பான பொருளாதாரம் மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கு ஏற்ப பணிகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே இதுதொடர்பாக பயிலரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் சேகர் பாபு தலைமையில் 3-வது திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

    இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 26 எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கணபதி, ஜோசப் சாமுவேல், கே.பி.சங்கர், ஜே.ஜான் எபினேசர், ஆர்.டி.சேகர், திரு.ஏ.கிருஷ்ணசாமி, தாயகம் கவி, ஐ.பரந்தாமன், ஐட்ரீம் மூர்த்தி, டாக்டர் என்.எழிலன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, ஜே.எம்.எச்.அசன் மவுலானா, எஸ்.அரவிந்த ரமேஷ், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மற்றும் உயர் அலுவலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் செய்யப்பட வேண்டிய சிங்கார சென்னை திட்டத்தை பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தனர். காசிமேடு கடற்கரை, மயிலாப்பூர் ஸ்டேடியம் மற்றும் உணவகங்கள், பூங்காக்கள் பற்றி நிறைய கருத்துக்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்காக தலா 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு தலைமை திட்ட அதிகாரியை அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்து அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கார சென்னை திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி சென்னையில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 விதமான அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பாலங்கள் அமைத்தல், கூடுதல் பூங்காக்களை ஏற்படுத்துதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், சந்தைகளை நவீனப்படுத்துதல், வணிக வளாகங்களை உருவாக்குதல், உணவகங்கள், போக்குவரத்து சந்திப்புகளை அழகு படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

    திட்டப்பணியாளர்கள் இதுபற்றி ஒவ்வொரு பகுதிகளையும் ஆய்வு செய்து அழகுபடுத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்து அறிவிப்பார்கள். அதன் பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னை நகரை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதற்காக அனைத்து பிரதிநிதிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சரிடம் அந்த பள்ளியில் படிக்கிற 3-வது வகுப்பு மாணவி கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார்.
    • இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறுயுள்ளார்.

    தென்காசி:

    இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் சென்னை யில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.

    அதில் தென்காசி சட்டமன்ற தொகுதி கீழப்பா வூர் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சியில் இயங்கி வருகிற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி இல்லை. ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் அந்த பள்ளியில் படிக்கிற 3-வது வகுப்பு மாணவி கொடுத்த கோரிக்கையின் அடிப்படை யில் முதல்-அமைச்சர் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார்கள்.

    அந்த கட்டிடம் கட்டுவதற்கு கூட போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது. தென்காசி உதவி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கும்,

    விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும், திருமலை குமாரசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட சுமார் 4¾ ஏக்கர் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு வழங்கு வதற்கு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார். இது சம்பந்த மாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி யும், சம்பந்தப் பட்ட ஆணையர் இதனை அளித்து நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.

    • சமய மாநாடு நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு இந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்பது குறித்து விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • அறநிலைத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா வருகிற 5-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 15-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

    திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மாநாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் திருவிழா அழைப்பிதழ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இது போல் ஹைந்தவ சேவசங்கம் சார்பிலும் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரச்சனை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வரும் திருபணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    சமய மாநாடு நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு இந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்பது குறித்து விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அறநிலைத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களையும் எடுத்து காண்பித்தனர்.

    பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து குமார கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்று வரும் திருப்பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில், திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், பேரூர், பட்டீஸ்வரர் கோவில் மற்றும் திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் ஆகிய 5 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை முதல் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை மகா சிவராத்திரி திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், மகா சிவராத்திரி விழாவை கொண்டாடும் அனைத்து கோவில்களிலும் குறிப்பாக கோபுரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையாக மின் அலங்காரங்கள், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத் தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம், பக்தர்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட இடஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், இது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் திருவிழா நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை அந்தந்த கோவிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் சிறப்பாக நடத்திட வேண்டும்.

    மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் பொழுது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்திடவும், எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் நிகழ்ச்சிகளை நடத்திடவும், கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
    • சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.

    தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் தங்கத்தேருக்கு முலாம் பூச உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நாளை நடைபெற உள்ள தெப்பத்திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மண்டல இணை ஆணையர் அன்புமணி, சுசீந்திரம் துணை ஆணையர் ஞானசேகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைத்துச் சார்நிலை அலுவலர்களுக்கும் கட்டணமில்லாமல் கையேடு வழங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் கையேட்டினை ஆணையர் அலுவலகம் மற்றும் 48 முதுநிலை கோவில்களில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையங்களில் சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவில்களில் திருப்பணி செய்வதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிடும் வகையில் "கோவில் திருப்பணி கையேடு" துறையால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த கையேட்டில் கோவில் திருப்பணி வேலைகளை தொடங்குதல், திருப்பணிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், ஆவணப்படுத்துதல் மற்றும் அதற்கான முறைகள், திருப்பணிகளை அடையாளப்படுத்துதல் மற்றும் தொல்லியல் வல்லுநர் கருத்துரு பெறுதல், திட்ட மதிப்பீடு தயாரித்தல், மண்டல மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுக்களின் ஒப்புதல் பெறுதல், வரைப்பட அங்கீகாரம் பெறுதல், மதிப்பீடு தயார் செய்தல் மற்றும் அதில் இடம் பெறவேண்டிய இனங்கள், நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறுதல், ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள், உபயதாரர் திருப்பணி, பணி ஆணை வழங்குதல், பணி உடன்படிக்கை எற்படுத்துதல், பணிகளை தொடங்கி வைத்தல், பணித்தளம் ஒப்படைத்தல், தரக்கட்டுப்பாடு படிவங்கள், அளவீட்டு புத்தகம் பதிவு செய்தல், பொறியாளர்களால் சரிபார்த்தல், பட்டியல் தயாரித்தல், பணி முடிவு அறிக்கை, புகைப்படங்களுடன் பணி முன்னேற்றங்களை உறுதிப்படுத்துதல், பாலாலயம், சைவ மற்றும் வைணவ கோவில்களுக்கான நடைமுறைகள் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், திருக்குட நன்னீராட்டு பெருவிழா, குடமுழுக்கின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கோவில் பராமரிப்பு, நிதி ஆதாரம், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர் புனரமைத்தல், உபயத் திருப்பணி, துறையின் நிதி விடுவித்தல் போன்ற நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

    இக்கையேடு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைத்துச் சார்நிலை அலுவலர்களுக்கும் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணி நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இறையன்பர்கள், உபயதாரர்கள், பொதுமக்கள் இந்த கையேட்டினை ஆணையர் அலுவலகம் மற்றும் 48 முதுநிலை கோவில்களில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையங்களில் சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது.
    • கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன.

    கோவை :

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. எனவே அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன. அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கோவில்கள் கண்டிப்பாக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

    நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலில் தி.மு.க.வுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தினால் அதன் மூலம் இந்துக்கள் தங்கள் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்து சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை பொருத்தவரை தடுமாறாத, ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். எனவே அவர்களின் எதிர்பார்ப்பு எந்த காலத்திலும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும்.
    • வருவாய்துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும்.

    இந்து சமயஅறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

    அவ்வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லை கற்களை நட்டார்.

    அதனை தொடர்ந்து நில அளவை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய குழுத் தலைவர்களான 20 மண்டலங்களின் நில அளவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும், இதில் வருவாய் துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும். மீதியுள்ள நிலங்களின் பரப்பு 1,99,429.32 ஏக்கர் ஆகும்.

    கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உரிமம் பெற்ற நில அளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 மண்டல இணை ஆணையர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பணி அமர்த்தப்பட்டனர்.

    கடந்த 8-ந்தேதி அன்று சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் டி.ஜி.பி.எஸ். கருவியின் மூலம் முதன் முதலாக நில அளவை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

    எல்லைக் கற்களை அனைத்து இடங்களிலும் ஒரே வடிவத்தில் அமைத்திடும் வகையில் சிமெண்ட் பில்லர்களை தயாரித்து, அதற்கு வெள்ளை நிற வர்ணமும், அப்பில்லரின் ஒரு பக்கத்தில் எச்.ஆர்.சி.இ. என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டு அதில் சிவப்பு நிற வர்ணமும் தீட்டி அளவிடப்பட்ட நிலங்களில் பில்லர்கள் நடப்பட்டு வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 972 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யப்பட்டதன் மூலம் முதல் கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு 1,00,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்து, இன்றைய தினம் 1,00,001வது ஏக்கர் நிலத்தினை அளவீடு செய்து எல்லை கற்கள் நடப்பட்டது.

    கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இயற்கை இடர்பாடுகளுக்கிடையே சிறப்பாக பணியாற்றி இறைவனின் சொத்துக்களை காப்பாற்றியும், அடையாளம் காட்டியும், எல்லை கற்களை நட்டு பாதுகாத்து இருக்கின்ற 172 நில அளவர்களுக்கும், இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணி மிகப்பெரிய பணியாகும். அதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 172 நில அளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை ரூ.2,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் பிப்ரவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும்.

    2023-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் என்பதை 2 லட்சம் ஏக்கராக அளவீடு செய்து உயர்த்தி காட்டுங்கள். உங்களுக்கு கூடுதலாக ஊக்கத் தொகை காத்துக் கொண்டிருக்கிறது

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? டெண்டரா விட முடியும்?
    • அண்ணாமலை பார்வையில் அறநிலையத்துறை தேவையற்ற ஆணியாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும்.

    அந்த வகையில் ஆலய பாதுகாப்பை வலியுறுத்தி பா.ஜனதாவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மீதும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதன் விவரம் வருமாறு:-

    * துறைமுகம் தொகுதியில் அமைச்சருக்கு சொந்தமாக பல கட்டிடங்கள் உள்ளன. இதேபோல் குறைந்த வாடகைக்கு விடுவாரா?

    * தமிழகத்தில் தேவை யற்ற 'ஆணி' அறநிலையத்துறை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து அதை கலைப்பதுதான்.

    * இந்து கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டபோது ஆவேசமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    போகிற போக்கில் யாராவது சொல்வதை கேட்டு எதையாவது பேசுவது என்ற பாணியில் பேசி வருகிறார்.

    அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர். உண்மையை அறிந்து பேசுவதுதான் அவர் ஏற்கனவே வகித்த பதவிக்கும் இப்போது வகிக்கும் தலைவர் பதவிக்கும் அழகு.

    அவரது அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

    கோசாலைகளுக்கு தானமாக கொண்டு வரப்படும் பசுக்களில் கோவில் பயன்பாட்டுக்கு தேவையான பசுக்களை வைத்துக் கொண்டு அதிகமான பசுக்கள் இருந்தால் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று சுயஉதவிகுழு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு வழங்கலாம் என்று 2007-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டு அதன்படி வழங்கப்படுகிறது.

    அந்த தணிக்கை அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு தான் எதையோ கண்டுபிடித்து விட்டதை போல் பேசுகிறார்.

    அடுத்து அறநிலையத்துறை கட்டிடங்கள் வாடகை. இது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்ற விதிமுறையை கூட அவர் தெரிந்து கொள்ளாததுதான் வேடிக்கை.

    குடியிருப்பு கட்டிடமாக இருந்தால் அரசின் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் 0.1 சதவீதம் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது.

    வணிக பயன்பாட்டு கட்டிடமாக இருந்தால் 0.3 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல வாடகைக்கு விடுவதற்கும் விதிமுறைகள் உள்ளது. யாராவது நேரில் வந்து கேட்டதும் கொடுத்து விடுவதில்லை. முறையாக விளம்பரப்படுத்தி, டெண்டர் விட்டுத்தான் கொடுக்கப்படுகிறது.

    அடுத்தது துறைமுகம் தொகுதியில் எனக்கு பல கட்டிடங்கள் இருப்பதான குற்றச்சாட்டு.

    நெஞ்சை நிமிர்த்தி தலை நிமிர்ந்து சொல்கிறேன். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ அப்படி ஏதேனும் கட்டிடங்கள் இருப்பதாக அண்ணாமலை ஆதாரத்துடன் நிரூபித்தால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.

    தவறினால் நாங்கள் சொல்வதை அவர் கேட்க வேண்டும். அவர் சொன்னவை தவறு என்று திரும்ப பெற வேண்டும். இந்த சவாலை ஏற்க அவர் தயாரா?

    அறநிலையத்துறை உருவாகி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 287 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. திருட்டுக்கள் தடுக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் 62 சிலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? டெண்டரா விட முடியும்?

    அவரது பார்வையில் அறநிலையத்துறை தேவையற்ற ஆணியாக தெரிகிறது. ஆட்சிக்கு வந்ததும் பிடுங்கி போடபோகிறாராம்.

    அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பா என்று பெயர் வைக்கலாம். தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வரலாம் என்று நினைப்பது பகல் கனவு... கானல் நீர்... கனவில் கூட நடக்காது.

    அறநிலையத்துறை செய்து வரும் திருப்பணிகள் ஆகட்டும், கோவில்களில் செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், பூஜை, புனஸ்காரம், திருத்தேர்கள் பராமரிப்பு, திருக்குளங்கள் சீரமைத்தல், நந்தவனங்கள், பசு மடங்கள் பராமரிப்பு, அன்னதான திட்டம், நாள் முழுவதும் பிரசாதம் வழங்குவது, ஊழியர்களுக்கு பொங்கல், பண்டிகைக்கு புத்தாடை, அர்ச்சகர்கள் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தியது.

    அரசு சம்பள உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் திருக்கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவது.

    ஒரு கால பூஜை நடக்கும் 12 ஆயிரத்து 593 கோவில்களின் வைப்பு நிதியில் ரூ.1 லட்சம் சேர்த்தது. 2500 கிராம கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி ஒதுக்கியது.

    ரூ.3 ஆயிரத்து 934 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.1804 கோடி செலவில் 4 ஆயிரம் திருப்பணிகள் நடக்கிறது. 1000 பழமையான கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இப்படி பக்தர்களும், சாமியும் மகிழும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் அறநிலையத்துறை பணிகள் நடந்து வருகிறது.

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லி அசிங்கப்படுவதை அண்ணாமலை தவிர்க்க வேண்டும். இது மல்லாந்து படுத்தப்படி காறி உமிழ்வதற்கு சமமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க வேண்டும்.
    • பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்.இ.டி. அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மாதவரம் பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

    அவருடன் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், அன்சுல்மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர், லட்சுமி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கான தனிப்பேருந்து நிலையம் ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் மேலும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் அமைச்சர் தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.

    வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளையும் இப்பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரப்பிரதேசம் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க வேண்டும்.

    மாநகர பேருந்து நிறுத்தம் இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

    பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்.இ.டி. அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

    இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

    • பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
    • பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் தொடர்பாக என்னை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ, கலெக்டர் விசாகன், எஸ்.பி பாஸ்கரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் விழா நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 65 நிழற்குடைகளில் 19 நிழற்குடைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக வேள்வி நடைபெறும் இடத்தில் 90 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக 47 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக ஆஸ்பத்திரி, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக பணிகள் குறித்து நாளை மதியம் துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு நடத்த உள்ளேன். கும்பாபிஷேக பணியில் மேலும் 4 இணைஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவிஆணையர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் கோவில் பணியாளர்களும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்மீக புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறைந்த விலையில் இந்த நூல்கள் பக்தர்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஓலைச்சுவடிகள் குறித்த ஆராய்ச்சி நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய நல்ல நாளாகும்.

    பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    மேலும் பழனி-இடும்பன் மலைக்கோவில் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்ளுக்கு ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். ராஜகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களில் வானத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் மலர்களை தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி வையாபுரி குளம் தூர்வாரப்பட வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் அதுகுறித்த அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கோவில் இணைஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×