search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala southwest monsoon"

    கேரளாவில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். #Keralasouthwestmonsoon #Keralarain

    சென்னை:

    தமிழ்நாடு ஆசிரியர் சஙக மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் மழையால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கிறார்கள். கேரள மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

    கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதோடு ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தினை வழங்கிட முன்வந்துள்ளது. முதல்- அமைச்சர், இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகள் நடந்திடும்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடிப்பதற்கான அரசாணை பிறப்பிக்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சொந்த கிராமத்திலேயே உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அகதிப்போல் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பெண்கள் கூறினார். #Karnatakarain

    சிதம்பரம்:

    கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென்று 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர கிராமங்களான திட்டுக்காட்டூர், பெரம்பட்டு, கீழகுண்டலபாடி உள்பட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வீடுகளை இழந்த பலர் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையங்களிலும், அரசு பள்ளி மற்றும் கோவில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கீழகுண்டலபாடியை சேர்ந்த செல்வ ராணி (வயது 22) என்பவர் வீடும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது முதலில் பாதிக்கப்படுவது எங்கள் கிராமம் தான். எங்கள் கிராமத்தில் பலர் விவசாயம் செய்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தும், உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் சொந்த கிராமத்திலேயே அகதியைப்போல் வாழ்கிறோம்.

    எனவே தமிழக அரசு உடனடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் கிராமத்தில் புகுந்து விடாமல் தடுக்க கரையை பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    வெள்ளத்தில் வீடு இழந்த ஜெயந்தி(45) என்பவர் கூறியதாவது:-

    கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் எனது வீடு சேதம் அடைந்துள்ளது. இதனால் நான், என் கணவர் மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவிக்கிறோம்.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த 5 நாட்களாக எங்கள் கிராமத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளை இழந்து பலர் தவிக்கிறார்கள். சொந்த கிராமத்திலேயே உணவு, தண்ணீர் கிடைக்காமல் அகதிப்போல் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்களாக சரிவர உணவு கிடைக்கவில்லை. அதேபோல் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வெள்ளநீரை காய்ச்சி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் தொற்றுநோய் ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.

    வருங்காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. #Keralasouthwestmonsoon #Keralarain

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை பெய்தது.

    தொடர் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.

    கடல் எது? ஊர் எது? என்பது தெரியாமல் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளித்தது. பேய் மழையின் மிரட்டலை கண்டு அலறிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு களம் இறங்கியது.

    பேரிடர் மீட்புக்குழுவுக்கு துணையாக ராணுவத்தின் முப்படையும், தீயணைப்புத் துறை, கடலோர காவல் படை, தன்னார்வ குழுவினர், மீனவ அமைப்புகள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க மாநிலம் முழுவதும் 5645 அவசர கால நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. அவற்றில் இன்று வரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

     


    கேரளாவின் மலை கிராமங்களான குட்டநாடு, வயநாடு, பாண்டநாடு பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இப்பகுதி படகுகள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் இங்கு ஹெலிகாப்டர் மூலமே மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இருப்போர் பலரும் தங்களின் உடைமைகளை விட்டு வர தயக்கம் காட்டுகிறார்கள். கால்நடைகள், வீட்டு விலங்குகளை விட்டு வர மாட்டோம் என பலர் மீட்புக் குழுவிடம் கூறி ஹெலிகாப்டரில் ஏறமறுத்த சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து மாநில அரசு இப்பகுதியில் தவிக்கும் மக்களை போலீஸ் துணையுடன் மீட்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது குறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தவிக்கும் முதியவர்கள், நோயாளிகள் பலரும் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மீட்டு வருகிறோம்.

    இது தவிர நிலச்சரிவிலும் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்.

    11 நாட்களுக்கு பிறகு கேரளாவில் நேற்று மழை சற்று ஓய்ந்தது. இதையடுத்து ரெட் அலர்ட் என்ற பலத்த மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது. இன்றும், நாளையும் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையே பெய்யுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் நேற்று நிவாரணப் பணிகள் வேகம் பிடித்தது. சமூக ஆர்வலர்களின் துணையுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டனர். இதனால் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.

    மழை குறைந்ததாலும், அணைகளில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், பல இடங்களில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கியது. கொச்சி, ஆலுவா, திருச்சூர், காலடி, நெடும் பாச்சேரி பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி கிடந்த சாலைகள் வெளியே தெரிந்தன.

     


    இதுபோல வீடுகளின் முதல் தளம் வரை தேங்கி நின்ற வெள்ளமும் வடிந்து கீழ் தளத்தின் வாசல் தெரியும் அளவிற்கு குறைந்தது.

    வீடுகளில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கிய தகவல் அறிந்து முகாம்களில் தங்கிய பெண்கள் பலரும் அவர்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கினர்.

    அவர்களின் வீடுகளில் முழங்கால் அளவிற்கு சேறும், சகதியும் சேர்ந்திருப்பதாகவும், அவற்றை அகற்றிய பின்னரே அங்கு குடியேற முடியும் எனவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    கேரளா முழுவதும் இப்படி சுமார் 10 லட்சம் பேர் தவித்தபடி உள்ளனர்.

    கேரளாவில் இயல்பு நிலை திரும்புவது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

     


    இதுவரை அனைத்து மீட்புக்குழுவினர் மூலம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 ஆயிரத்து 734 நிவாரண முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணிகளை தொடங்க உள்ளோம். வெள்ளத்தால் சேதமான வீடுகள் சுகாதார ஊழியர்கள் மூலம் சீரமைக்கப்படும். நோய் பரவாமல் தடுக்க மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு போக்குவரத்து இன்றியமையாதது. இப்போது வெள்ளம் வடிந்து வருவதால் பிரதான சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய ஊர்களுக்கு கேரள அரசு பஸ்களை இயக்க தொடங்கி உள்ளோம்.

    மாநிலத்தில் உள்ள 221 பாலங்கள் சேதமடைந்துள்ளது. 59 பாலங்கள் இன்னும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இவற்றை வேகமாக சீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இப்பணிகள் முடிவடைந்து இப்பாலங்கள் வழியாகவும் போக்குவரத்து தொடங்கும்.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டனர். அவர்களின் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீட்புப்பணிக்கு பயன் படுத்தப்பட்டன. இதில் பலரது கட்டு மரங்கள் சேத மடைந்துள்ளது. அவற்றிற்கு உரிய இழப்பீடை மாநில அரசு வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Keralasouthwestmonsoon #Keralarain

    எடப்பாடி அருகே நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் குடிநீர் விநியோகம் பாதிப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறி பாய்ந்து ஓடுகிறது.

    தொடர் வெள்ளப் பெருக்கால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பெரியார் நகரில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மின்மாற்றி சாய்ந்தது. நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று இந்திரா நகரில் கழிவுநீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்தது. நகராட்சி சார்பில் டேங்கர் லாரி மூலம் கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.

    அனல்மின் நிலையம் அருகே காவிரி நீர், அதன் குறுக்கே செல்லும் மின்வயர்களை தொட்டப்படி சென்றது. அப்பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாயும் நிலையில் இருந்ததால், கயிறுகள் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேட்டூர்-எடப்பாடி செல்லும் சாலையில் அனல்மின் நிலையம் அருகே தார் சாலையை தண்ணீர் மூழ்கடித்துள்ளதால், வாகன போக்குவரத்து தடை 5-வது நாளாக நீடிக்கிறது.வாகனங்கள் சென்று விடாமல் இருக்க அங்கு சாலையின் குறுக்கே போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அனல் மின் நிலைய வளாகத்தின் வழியாக ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

    கரையோர வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் கேம்ப், இந்திரா நகரில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற மறுத்தததால் அப்பகுதியில் உள்ள 15 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அண்ணா நகர் கரையோர வீடுகளில் இருந்து வெளியேறிய 12 பேர் அப்பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு வருவாய்த் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் காட்டூர் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அங்கிருந்து எடப்பாடி, கொங்காணபுரம், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நீரேற்று நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இங்குள்ள நீரை உறிஞ்சி எடுக்கும் கனரக எந்திரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் செயல்படாமல் உள்ளது. குடிநீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நீரேற்று நிலையம் மூடப்பட்டது.

    இதன் காரணமாக எடப்பாடி, கொங்காணபுரம், மகுடஞ் சாவடி, ஆட்டையாம் பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளத்தை வெளியேற்றிடவும், சுத்திகரிப்பு எந்திரங்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக செயல்படாததால் இன்னும் சில நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்றும், விரைவில் எந்திரங்கள் சீர் செய்யப்பட்டதும் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூலாம்பட்டி, நெடுங்குளம், காட்டூர், நாவிதன்குட்டை, கொட்டாயூர் உள்ளிட்ட பகுதி கரையோரமுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் கரும்பு, வாழை உள்பட 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. நெடுங்குளம், காட்டூர் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    நாவிதன்குட்டையில் ஆற்றோரமிருந்த தார் சாலை மூழ்கியது. இதனால் அந்த வழியே செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெற்பயிர் அழுகியதால் விவசாயி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ளது அடூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பழனன் (வயது 81). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் விவசாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். தனது 8 ஏக்கர் நிலத்தில் கடன் வாங்கி நெல் பயிரிட்டார். ஆரம்ப காலத்தில் போதிய அளவு மழை பெய்ததால் நெற்பயிர் நன்கு வளர்ந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் 8 ஏக்கர் நெற்பயிரையும் சூழ்ந்தது. தொடர்ந்து மழை நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகத்தொடங்கின. இதனால் பழனன் வேதனை அடைந்தார்.

    அவரது மனைவி அம்சவேணி வெள்ளம் வடிந்து சரியாகி விடும் என்று அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளம் அதிகரித்து நெற்பயிர்கள் முழுவதும் அழுகியது. இதனால் விரக்தியடைந்த பழனன் வயலில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடைமடை பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் 8 கிராமத்தை சேர்த்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். #Keralasouthwestmonsoon #Keralarain

    மன்னார்குடி:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை 2 முறை நிரம்பி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரிகள், வாய்க்கால்கள் தூர்வாரப் படாத காரணத்தினாலும் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை வடவாறு பிரிவில் வரும் பாலையூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பைக்காநாடு, வல்லூர், தென்பறை, பாலையக் கோட்டை உள்ளிட்ட 8 கிராமத்தை சேர்த்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திடீரென திருமக்கோட்டை- மன்னார்குடி சாலையில் அமர்த்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை காவிரி நீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம் என போராடி வருகின்றனர்.

    ஏரி- குளம்- வாய்க்கால்களை தூர்வாராமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் தண்ணீரை அப்படியே கடலுக்கு திருப்பி வீணாக்கி விட்டார்கள் என்று விவசாயிகள் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.

    கேரளாவில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் எதிரொலியாக நாமக்கல்லில் 3¼ கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 3½ கோடி முட்டைகள் கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இதற்கிடையே கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த முட்டைகளை தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட முட்டைகளும் சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கப்படாமல் ஆங்காங்கே லாரிகளிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர் மழை காரணமாக ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பால் நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட வேண்டிய முட்டைகள் நாளுக்கு நாள் தேக்கம் அடைந்து வருகின்றன. நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு நாள் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த 1 கோடி முட்டைகளில் 20 லட்சம் முட்டைகள் மட்டுமே தற்போது கொண்டு செல்லப்படுகிறது.

    வடக்கு கேரளாவை தவிர வேறு எங்கும் முட்டைகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் வீதம் கடந்த 4 நாட்களாக 3¼ கோடி முட்டைகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாமல் நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    7 ஆண்டுகளுக்கு பின் வைகை அணை நிரம்பியதால் 7 மதகுகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.#Keralasouthwestmonsoon #Keralarain

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

    இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணை 142 அடியை எட்டியது. அங்கிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது வைகை அணை 69 அடியை எட்டியுள்ளது. எனவே 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையின் பெரிய 7 மதகுகள் வழியாக அணைக்கு வரும் 3330 கனஅடிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

    அணையின் நீர்இருப்பு 5476 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

    வைகை அணை கடந்த 2011-ம் ஆண்டு முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. அதேஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. அதன்பின்பு போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு முழுகொள்ளளவை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    வெள்ளத்தில் தவிக்கும் டெல்டா பகுதி மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Keralasouthwestmonsoon #Keralarain

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட தமிழக அரசு வழங்காதது கண்டிக்கத் தக்கதாகும்.

    மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பவானி அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்தத் தண்ணீரின் ஒரு பகுதி காவிரியிலும், பெரும்பகுதி கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டிருப்பதால் இரு ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

    அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் தட்டுமால் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்ததால் தான் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப் படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் தங்களின் சொந்த முயற்சியில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர்.


    கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்னீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேறு ஏதேனும் இடங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை பணியாளர்கள் சுற்றுக் காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், அத்தகைய பணிகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ளப் படுவதாக தெரியவில்லை. இதனால் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்- அமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா? என்பதும் தெரியவில்லை.

    கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் இருப்பதால் பெரும்பான்மையான ஊடகங்கள் அது குறித்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அதை தவறு என்று கூற முடியாது. ஆனால், ஊடக வெளிச்சம் முழுவதும் கேரளத்தின் மீது குவிந்திருப்பதால் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக வெளி வரவில்லை.

    ஆனாலும், இந்த பாதிப்புகளை அரசு மதிப்பிட்டு போதிய உதவிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மக்களுக்கு உதவிகளை செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

    தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொள்ள வேண்டும். முதல்- அமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கேரள மாநிலத்தை சின்னாபின்னப்படுத்தியுள்ள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #KeralaFloods
    கொல்கத்தா:

    கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

    மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.  காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த பேரிடரால் பாதிப்படைந்துள்ள கேரளாவுக்கு தேவைப்படும் இதர உதவிகள் அனைத்தையும் செய்ய மேற்கு வங்காளம் மாநில அரசு தயாராக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா, கேரளாவில் வாழும் சகோதர, சகோதரிகளில் வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். #Mamataannounces #KeralaFloods
    மதுரையை வளம்கொழிக்கச் செய்யும் வைகை ஆற்றில் சொட்டுத்தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது. #Keralasouthwestmonsoon

    மதுரை:

    கேரளா, கர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் இரு மாநிலங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் உபரி நீர் முழு அளவில் திறந்து விடப்படுகிறது. இதனால் அகண்ட காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் கரையோர மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ஆனால் மதுரையை வளம்கொழிக்கச் செய்யும் வைகை ஆற்றில் சொட்டுத்தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதன்பின்னர் வைகையில் தண்ணீர் திறந்து விடப்படுவது கேள்விக்குறியானது.

    இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே அங்கிருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் இன்று 68.51 அடியாக உள்ளது.

    எனவே நாளை (20-ந் தேதி) வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வைகை பாசன விவசாயிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சிக்காகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 நாட்கள் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கேரளாவின் 14 மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட நிவாரண முகாம்களில் இதுவரை 4 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். #Keralasouthwestmonsoon #Keralarain

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மழை பெய்த பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    வயநாடு, குட்ட நாடு, பாண்டநாடு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள், நிலச்சரிவில் சிக்கி புதைந்தன. சாலைகள் அடியோடு நாசமானது. சிறு பாலங்களும் உடைந்து நொறுங்கியது.

    இடுக்கி, மலப்புரம், காசர் கோடு, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, எர்ணா குளம், பத்தனம் திட்டா ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

    இங்குள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவுகள் போல் மாறியது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற வழியின்றி தவித்தனர். அவர்கள் மொட்டை மாடிகளிலும், வீடுகளின் மேல் தளத்திலும் நின்றபடி உதவிக்கேட்டு கதறினர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தின் முப்படையும் களம் இறக்கப்பட்டது. இவர்களுடன் தேசிய பேரிடர் மீட்புக்குழு, கடலோர காவல் படை, தீயணைப்புத்துறை, எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    செங்கனூர், பாண்டநாடு, வெண்மணி, ஆலுவா, பரவூர், காலடி பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இங்கு ஹெலிகாப்டர்களில் சென்ற வீரர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்டு வந்தனர்.

    கொச்சி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் ரப்பர் படகுகள், மீன்பிடி வள்ளங்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

    மீட்கப்பட்ட மக்களை தங்க வைக்க மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

    நேற்று ஒரு நாளில் மட்டும் 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு வந்தனர். இதில் குழந்தைகள், முதியவர்கள், பெண்களே அதிகம் பேர் இருந்தனர். இவர்களில் நோயாளிகள் ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.


    கேரளாவின் 14 மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட நிவாரண முகாம்களில் இதுவரை 4 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

    ஊர் பிரமுகர்கள் வீடுகளிலும், தேவாலயங்கள், பள்ளி வாசல்களிலும் பலர் தங்கி இருக்கிறார்கள். நேற்று ஒருநாளில் மட்டும் முப்படை வீரர்கள் மூலம் 50 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.

    இன்றும் மீட்புப்பணி தொடர்கிறது. இதிலும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்படுவார்கள். இதன் மூலம் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

    நிவாரண முகாம்களில் இருப்போருக்கு சமூக நலத் துறை மூலம் உணவு பொட்டலங்கள், தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்களும் பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான உடைகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள்.

    ஆனாலும் பலருக்கு போதுமான உணவும், குடிநீரும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டனர். ஊரெங்கும் வெள்ளம் தேங்கி நிற்க, ஒரு வாய் தண்ணீர் குடிக்க வழியில்லையே என்று அவர்கள் கண்ணீர் விட்டனர்.

    கேரளத்தின் பரிதாப நிலையை பார்வையிட நேற்று பிரதமர் மோடி திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து கொச்சி சென்று முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ஆலோசனை நடத்தினார்.

    நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த வாகனங்கள்.

    பின்னர் ஹெலிகாப்டரில் சென்று வெள்ளப்பாதிப்பை பார்வையிட்டார். தொடர்ந்து கேரளாவிற்கு ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தார். மேலும் கேரளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    கேரளாவில் பெய்து வரும் பெருமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் முதல் கிராமச்சாலைகள் வரை அனைத்தும் நாசமாகி விட்டது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது.

    எனவே போக்குவரத்தை சீரமைக்க முன்னுரிமை கொடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் பழுதான பாலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரளாவில் மழை தொடங்கி 11 நாள் ஆகியும் இன்னும் 2 நாட்களுக்கு மழை அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எர்ணாகுளம், ஆலுவா, மலப்புரம், வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில்தான் ஏராளமான அணைகள் உள்ளன. மழையால் அவை மீண்டும் மீண்டும் நிரம்பி வருகிறது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெள்ளம் வெளியேற்றப்பட்டால் இந்த மாவட்டங்களில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மாவட்ட மக்களை பீதிக்கு ஆளாக்கி உள்ளது.

    கேரளாவில் தொடரும் சோகத்தில் இருந்து மக்களை மீட்க மேலும் கூடுதல் மீட்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று 5 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு வந்துள்ளது.

    ஒடிசா, தமிழ்நாட்டில் இருந்தும் தீயணைப்புப்படை வீரர்கள், ரப்பர் படகுகள் கேரளாவிற்கு சென்றுள்ளனர். அவர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி பெருமழை தொடங்கும் முன்பே மழையால் 34 பேர் பலியாகி இருந்தனர். அதன் பிறகு பெய்த பேய் மழைக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    ×